’மூத்தகுடி’ திரைப்பட விமர்சனம்

Casting : Dharun Gopi, Prakash Chandra, KR Vijaya, Anvisha, R.Sundarajan, Raj Kapoor, Yaar Kannan, Singam Puli
Directed By : Ravi Bhargavan
Music By : JR Muruganandam
Produced By : Prakash Chandra
மூத்தகுடி என்ற ஊர். அந்த ஊரைச் சேர்ந்த பெரிய குடும்பத்து பெண்மணி கே.ஆர்.விஜயா சொல்வதை ஊரே கேட்கிறது. கே.ஆர்.விஜயாவின் குடும்பத்தாருடன், ஊர் மக்கள் சிலர் சேர்ந்து குலசாமி கோவிலில் பூஜை நடத்த செல்கிறார்கள். அப்போது கே.ஆர்.விஜயாவின் மகன், மருமகன் மற்றும் லாரி ஓட்டுநர் சேர்ந்து சாராயம் குடிக்க செல்கிறார்கள். அங்கு ஏற்படும் பிரச்சனையால் லாரி விபத்துக்குள்ளாகி அதில் இருந்தவர்கள் உயிரிழந்து விடுகிறார்கள். கே.ஆர்.விஜயா, அவருடைய தம்பி யார் கண்ணன் மற்றும் அவரது பேரக் குழந்தைகள் மட்டும் அந்த விபத்தில் இருந்து தப்பிக்கிறார்கள்.
இப்படி ஒரு சோகமான சம்பவத்திற்கு காரணமான மதுவை ஒழித்துக்கட்ட முடிவு செய்யும் கே.ஆர்.விஜயா, தனது ஊரில் யாரும் மது குடிக்க கூடாது, அப்படி குடித்தால் அவர்கள் ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்படுவார்கள், என்று கட்டுப்பாடு போடுகிறார். அவருடைய கட்டுப்பாடுபடி மூத்தகுடி மக்கள் மது குடிக்காமல் வாழ்ந்து வருவதோடு, அந்த ஊரில் சாராயம் விற்க விடாமலும் தடுத்து வருகிறார்கள். இதற்கிடையே, தொழிலதிபர் ராஜ்கபூர், மூத்தகுடியில் சாராய தொழிற்சாலை கட்டி, அந்த ஊர் மக்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், கே.ஆர்.விஜயாவின் பேரக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விடுகிறார்கள். அதில், முறைப்பெண் நாயகி அன்விஷாவை, தருண் கோபிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே பெரியவர்கள் பேசி வந்ததால், தருண் கோபி அன்விஷாவை தீயாக காதலித்து வருகிறார். ஆனால், அன்விஷாவுக்கு தருண் கோபியின் தம்பி பிரகாஷ் சந்திரா மீது காதல் மலர்கிறது. இந்த காதல் பிரச்சனை மூத்தகுடி பெரிய குடும்பத்திற்கு மட்டும் இன்றி, அவர்களால் போடப்பட்ட கட்டுப்பாட்டிற்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் விஸ்வரூபம் எடுக்கிறது. இறுதியில், அந்த களங்கத்தை மூத்தகுடி குடும்பம் எப்படி துடைத்தது?, ராஜ்கபூரில் சாராய தொழிற்சாலை திட்டம் என்னவானது? என்பதை சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
மது பழக்கத்தினால் மக்கள் எப்படி சீரழிந்து போகிறார்கள் என்பதையும், அப்படிப்பட்ட மதுவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதையும் பேசும் சமூக அக்கறைக்கொண்ட கதையாக இருந்தாலும், அதற்கு திரைக்கதை அமைத்த விதம் அலங்கோலமாக இருக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் தருண் கோபி, உணர்ச்சிகரமான நடிப்பை மிக மிக அதிகப்படியாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை பதம் பார்த்து விடுகிறார். அவரது ஓவர் ஆக்டிங்கால் ஏற்படும் தலைவலி மாத்திரை போட்டாலும் நிற்காது, அந்த அளவுக்கு மனுஷன் ரசிகர்களை தன் நடிப்பால் கொடுமைப்படுத்தி விடுகிறார்.
தருண் கோபியின் தம்பியாக நடித்திருக்கும் பிரகாஷ் சந்திரா எந்த வித உணர்ச்சிகளையும் முகத்தில் காட்ட தெரியாமல் தடுமாறுகிறார். நாயகியாக நடித்திருக்கும் அன்விஷாவின் நடிப்பும் அறைகுறையாகவே இருக்கிறது.
கே.ஆர்.விஜயாவின் அனுபவமான நடிப்பு சற்று ஆறுதல் அளித்தாலும், ஆர்.சுந்தரராஜன் - சிங்கம் புலி காமெடி ட்ராக் கடுப்பேற்றுகிறது. யார் கண்ணன் பழைய சோறு வேடம் தேவையற்றது. ராஜ்கபூர் வழக்கமான வேலையை சரியாக செய்திருக்கிறார்.
கந்தா ரவிசந்திரனின் ஒளிப்பதிவும், ஜே.ஆர்.முருகானந்தத்தின் இசையும் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
சமூகத்திற்கு தேவையான விசயத்தை கதையாக்கி அதனுடன் காதலை சேர்த்து கமர்ஷியல் படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் ரவி பார்கவன், தான் சொல்ல வந்த நல்ல கருத்தை மக்களிடம் கடத்துவதில் தோல்வியடைந்திருக்கிறார்.
மொத்தத்தில், மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை படம் பதிவு செய்தாலும், படத்தை பார்ப்பவர்கள் கடுப்பாகி மதுவை தேடி போவது நிச்சயம்.
ரேட்டிங் 1.5/5