’நாய் சேகர்’ விமர்சனம்
Casting : Sathish, Pavithra Lakshmi, Gorge Mariyan, Ilavarasu, Sangkar Ganesh, Maran, Bala, Sriman, Gnanasammandam
Directed By : Kishor Rajkumar
Music By : Aniruth, Ajesh
Produced By : AGS
விஞ்னானி ஒருவர் நாய், பூனை, எலி, மாடு உள்ளிட்ட பிராணிகளை வைத்து டி.என்.ஏ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது பக்கத்து வீடான நாயகன் சதீஷை, விஞ்ஞானியின் நாய் கடித்துவிட, நாயின் டி.என்.ஏ சதிஷுக்கும், மனித டி.என்.ஏ நாய் உடலிலும் இடம் மாறிவிடுகிறது. இதனால், நாய்க்கு மனித சுபாவங்களும், சதிஷுக்கு நாய் சுபாவமும் வந்துவிட, அதனால் வரும் பிரச்சனைகளை காமெடியாக சொல்வது தான் ‘நாய் சேகர்’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சதிஷ், காமெடி நடிகராக என்ன செய்தாரோ அதையே தான் இதிலும் செய்திருக்கிறார். எப்போதும் போல அவருடைய பல நகைச்சுவைக் காட்சிகள் பல்ப் வாங்கினாலும், சில இடங்களில் நாய் போன்று நடித்து நம்மை சிரிக்க வைத்து விடுகிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா லட்சுமி, விஞ்ஞானி வேடத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன், சங்கர் கணேஷ், லிவிங்ஸ்டன், இளவரசு, ஸ்ரீமன், ஞானசம்மந்தம், மனோபாலா, லொள்ளு சபா மாறன், பாலா என படத்தில் நடித்திருக்கும் அனைத்து காமெடி நடிகர்களும் ரசிகர்களை சிரிக்க வைக்க பெரும் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், பலரது முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றாலும், சில காட்சிகளில் லொள்ளு சபா மாறனின் கலாய் வசனங்கள் மட்டும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது.
படத்தின் நாயகனை காட்டிலும் அதிகம் கவனம் பெறுபவர் நாய்க்கு குரல் கொடுத்திருக்கும் நடிகர் மிர்ச்சி சிவா தான். நாயாக அவர் பேசும் வசனங்களும், வசன உச்சரிப்பும் ரசிக்கவும் வைக்கிறது, சிரிக்கவும் வைக்கிறது.
அறிமுக இசையமைப்பாளர் அஜிஷ் மற்றும் அனிருத் ஆகியோரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகமே. பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறு பயணம் செய்திருக்கிறது. பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவில் குறையில்லை.
படம் முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்திருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார், அதற்கான முயற்சியில் பல இடங்களில் சறுக்கியிருந்தாலும், நாயை வைத்து உருவாக்கிய காட்சிகளும், நாய் குணாதிசயங்களோடு சதிஷ் செய்யும் சம்பவங்களும் சிறுவர்களை கவரும் வகையிலும், பெரியவகளை சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கிறது.
“காமெடி படத்திலும், பேண்டஸி படத்திலும் லாஜிக் பார்க்க கூடாது” என்ற டைடில் கார்டு போட்டு படத்தை ஆரம்பிக்கும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார், காமெடி காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இப்படம் முழுமையான நகைச்சுவைப் படமாகவும், அனைவரையும் மகிழ்விக்கும் படமாகவும் இருந்திருக்கும்.
மொத்தத்தில், ‘நாய் சேகர்’ பாதி நாய் கடி, பாதி சிரிப்பு வெடி.
ரேட்டிங் 2.5/5