Feb 04, 2023 03:51 PM

’நான் கடவுள் இல்லை’ திரைப்பட விமர்சனம்

802995afd471dc785905c4f0905f5b4b.jpg

Casting : Samuthirakani, Saravanan, Ineya, Sakshi Agarwal, Dyana Sri, Yuvan, Imman Annachi, S.A.Chandrasekar

Directed By : SA Chandrasekar

Music By : Siddarth Vipin

Produced By : Star Movie Makers - SA Chandrasekar

 

பல கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி  சரவணன், சிறையில் இருந்து தப்பித்து விடுகிறார். சிறையில் இருந்து தப்பிக்கும் சரவணன், தான் கைதாகி தண்டனை பெற காரணமாக இருந்த காவல்துறை அதிகாரி சமுத்திரக்கனி, வழக்கறிஞர் மற்றும் நீதிபதி ஆகியோரையும், அவர்களது குடும்பத்தாரையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். மறுபக்கம் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் சமுத்திரக்கனி இறங்குகிறார். இறுதியில் யார் வெற்றி பெற்றது? என்பது தான் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் கதை.

 

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, வழக்கமான தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். இருந்தாலும், கைக்கு எட்டும் தூரத்தில் வில்லனை வைத்துக்கொண்டு, அவரை கைது செய்யாமல் அவர் எங்கு செல்கிறார் என்று கவனித்துக்கொண்டே, அவரை படிபடியாக முன்னேற விடுவது அப்பட்டமான சினிமாத்தனமாக இருப்பதோடு, காவல்துறை அதிகாரிகளுக்கு இழுக்கு ஏற்படும் வகையிலும் இருக்கிறது.

 

வில்லனாக நடித்திருக்கும் சரவணன், பழைய காலத்து வில்லன் கதாபாத்திரத்தில் பழமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். கொத்து கொத்தாக கொலை செய்துவிட்டு, உலா வரும் அவரது நடிப்பிலும், தோற்றத்திலும் எந்தவித மாற்றமும் இல்லை.

 

சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் இனியா கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு அழும் காட்சிகளில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.

 

சமுத்திரக்கனியின் உதவியாளராக நடித்திருக்கும் சாக்‌ஷி அகர்வால் ஆக்‌ஷனில் அதிரடி காட்டுவதோடு, கவர்ச்சியிலும் ரசிகர்களை கிரங்கடிக்க முயற்சித்திருக்கிறார்.

 

தொழிலதிபராக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது டிரைவராக நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி, ராணுவ வீரராக நடித்திருக்கும் யுவன் ஆகியோரது கதாபாத்திரம் எதற்கு என்றே தெரியவில்லை. இதில் அவர்கள் அவ்வபோது கதையில் தலைக்காட்டும் இடங்கள் படத்திற்கு வேகத்தடையாக இருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவும், இசையமைப்பாளர் சித்தார்த் விபினும் கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்கள்.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது காலத்தில் தன்னால் எடுக்க முடியாத ஒரு கதையை இப்போது படமாக்கியிருக்கிறார், என்று சொல்லும் அளவுக்கு அதரபழசான ஒரு கதை. அதை படமாக்கிய விதம் அதைவிடவும் பழசாக இருக்கிறது.

 

ஆரம்பத்தில் இருந்தே ஓடும் வில்லனை துரத்தும் ஹீரோ, என்று நகரும் கதையை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இந்த படத்தை எடுத்ததற்கு பதில் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம்.

 

மொத்தத்தில், ‘நான் கடவுள் இல்லை’ ரசிகர்களுக்கு பெரும் சோதனை.

 

ரேட்டிங் 2/5