Jan 22, 2025 06:54 PM

’நான் வேற மாதிரி’ திரைப்பட விமர்சனம்

64957b9d79ec1fb4c41a22f63ec27858.jpg

Casting : Sha, Jyothisha, G.Nasheer Basha, Harish Musa, Sitha Darshan, Tik Tok Elakiya

Directed By : S.Jawaharlal

Music By : M.Sivashankar

Produced By : KRS Jawahar

 

அண்ணன்கள், அண்ணி, பாட்டி என அன்பான குடும்பத்தைச் சேர்ந்த நாயகி ஜோதிஷாவும், நாயகன் ஷாவும் காதலிக்கிறார்கள். சொந்தம் என்று யாரும் இல்லாத ஷாவுக்கு ஜோதிஷாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் அவரது குடும்பத்தினர், அவர்களது திருமண நிச்சயதார்த்தத்தை கோலாகலமாக நடத்துகிறார்கள். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், ஜோதிஷாவின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். 

 

வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி நஷீர் பாஷா, தனது விசாரணை மூலம் பல திடுக்கிடும் உண்மைகளை கண்டுபிடிக்கிறார். அது என்ன?, தொடர் கொலைகளுக்கான பின்னணி என்ன?, கொலையாளி யார் ? ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘நான் வேற மாதிரி’ படத்தின் கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் ஷா அறிமுக நடிகர் என்ற தடம் தெரியாதவாறு நேர்த்தியாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன், நடனம், நடிப்பு என அனைத்தையும் அளவாக கையாண்டு தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஜோதிஷா, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை பக்குவமாக கையாண்டிருக்கிறார். 

 

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜி.நஷீர் பாஷா, காக்கிச் சட்டைக்கு ஏற்ற கம்பீரத்துடன் வலம் வருகிறார். 

 

ஹரிஷ் மூசா, சித்த தர்ஷன், டிக் டாக் இலக்கியா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஜி.ஜெயபாலனின் கேமரா ஏற்காடு பகுதிகளின் அழகை திரைக்கதைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.

 

மா.சிவசங்கரின் இசை மற்றும் வரிகளில் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக கவர்கிறது. பின்னணி இசை சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

சஸ்பென்ஸ் திரில்லர் காட்சிகள் மூலம் பார்வையாளர்கள் மிரண்டு போகும்படி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் கே.வி.செந்தில்குமார்,  காதல், காமெடி, செண்டிமெண்ட் ஆகிய அம்சங்கள் மூலம் கமர்ஷியல் படமாகவும் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் எஸ்.ஜவஹர்லால், முதல் காட்சியிலேயே நம்மை படத்துடன் ஒன்றிவிட செய்துவிடுகிறார். அதன் பிறகு கதையை ஜாலியாக நகர்த்தினாலும், நாயகியின் வீட்டில் உலா வரும் மர்ம மனிதர், தொடர் மர்ம மரணங்கள் ஆகியவற்றின் மூலம், பார்வையாளர்களை பதற்றமான மனநிலைக்கு கொண்டுச் செல்கிறார்.

 

கொலையாளி யார்? என்பதை பார்வையாளர்கள் யூகித்தாலும், கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும்? என்ற கேள்வி படத்தை இறுதி வரை சஸ்பென்ஸாகவே நகர்த்திச் செல்கிறது. 

 

மேக்கிங் உள்ளிட்ட சில குறைபாடுகள் இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில், சிறிய கருவை வைத்துக் கொண்டு நேர்த்தியான திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் ரசிக்கும்படியான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜவஹர்லால்.

 

மொத்தத்தில், ‘நான் வேற மாதிரி’ பார்க்குற மாதிரி இருக்கிறது.

 

ரேட்டிங் 2.5/5