’நானும் ஒரு அழகி’ திரைப்பட விமர்சனம்
Casting : Megna, Arun, Rajadurai, Sivasakthi, Subaraman, Stella
Directed By : Pozhikkaraiyaan.K
Music By : Pozhikkaraiyaan.K
Produced By : KC Creations
நாயகி மேக்னாவுக்கு தனது அத்தை மகன் நாயகன் அருண் மீது காதல் மலர்கிறது. அருணுக்கும் மேக்னா மீது காதல் இருந்தாலும், படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பதால் காதலை சொல்ல தயங்குகிறார். இந்த சமயத்தில் அருணுக்கு வேலை கிடைக்க கூடிய சூழல் அமைய, அதற்காக அவர் சென்னை கிளம்புகிறார். மகளின் காதல் பற்றி அறியாத மேக்னாவின் அம்மா அவருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார். தனது மாமன் மனதில் என்ன இருக்கிறது, என்று தெரிந்துக்கொள்ளாமல் தன் மனதில் இருக்கும் காதலை குடும்பத்தாரிடம் சொல்வது சரியாக இருக்காது, என்று நினைக்கும் மேக்னா, அருணுக்காக காத்திருக்க, அவர் வராததால் தனது அம்மா பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துக் கொள்கிறார். ஊரில் இருந்து வரும் அருண், விசயம் அறிந்து கலங்குகிறார்.
மேக்னாவின் திருமண வாழ்க்கை ஆனந்தமாக தொடங்கினாலும், ஐந்து வருடங்களுக்குப் பிறகு அலங்கோலமாகி விடுகிறது. திருமணமான பல பெண்கள் எதிர்கொள்ளும் சாதாரண விசயமாக இருந்தாலும், இதற்கு அவர்கள் மட்டுமே காரணம், என்ற முத்திரை குத்தும் ஆண் வர்க்கமும், அவரது உறவினர்கள், சமூகம் ஆகியவற்றால் குற்றவாளியாக்கப்படும் பெண்களின் நிலை மேக்னாவுக்கும் ஏற்படுகிறது. அழுது புலம்புவது, கணவரால் தாக்கப்பட்டு விரட்டியப்பது என்று வழக்கமான பெண் போல் தனது தாய் வீட்டுக்கு திரும்பி வரும் மேக்னாவுக்கு, தன் மீது சுமத்தப்பட்ட பழியில் இருந்து மீள்வதற்கான வாய்ப்பு அமைகிறது.
இத்தகைய செயல் சமூகத்தின் பார்வையில் தவறாக தெரிந்தாலும், அதே சமூகம் தன் மீது சுமத்தப்பட்ட பழியில் இருந்து விடுபடுவதற்கு இதை தவிர வேறு வழி இல்லை, என்ற முடிவுக்கு வரும் மேக்னா, ”இதோ நான் தகுதியானவள் என்று நிரூபித்துவிட்டேன், இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?” என்ற கேள்வியை கேட்கிறார். அவரது கேள்விக்கு இந்த சமூகம் அளித்த பதில் என்ன?, மேக்னா எதிர்கொண்ட பிரச்சனை என்ன? என்பதை, மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் சாதாரண நிகழ்வாக இருந்தாலும், அதை பெரும் அழுத்தமாக்கி, அதை பெண்கள் தலையில் வைத்து, பெரும் குற்றம் செய்தது போல் அவர்களை தினம்... தினம்...தண்டிக்கும் இந்த சமூகத்திற்கு சாட்டையடி கொடுப்பது போல் சொல்வது தான் ’நானும் ஒரு அழகி.
படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் மேக்னா, ஒரு நட்சத்திரமாக படத்தை தன் தோள் மீது சுமந்திருக்கிறார். கிருஷ்ணம்மாள் என்ற கதாபாத்திரமாக நடித்திருக்கும் நாயகி மேக்னா, தனது அம்மா முதல் ஆசிரியை வரை அனைவரிடத்திலும், ”சோம்பேரி, முட்டாள், உருப்படாதவள்” என்று பல பட்டங்களை பெற்றாலும், தனது அடுத்தடுத்த நடவடிக்கை மூலம் ஒட்டுமொத்த பெண் சமூகத்தையே மாற்றியமைக்க கூடிய வல்லமை படைத்தவளாக உருவெடுப்பதை தனது நடிப்பில் நேர்த்தியாக வெளிக்காடியிருக்கிறார்.
நாயகனாக நடித்திரும் அருண் புதியவர் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை, அவரது நடிப்பை பார்த்தாலே தெரிந்துவிடும். பலவித பதற்றங்களுடன் நடித்திருப்பவர், வசனங்களை கூட ஆசிரியரிடம் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் பேசியிருக்கிறார். முறையான பயிற்சி பெற்றால் நிச்சயம் அருணும் தமிழ் சினிமாவில் நடிகராக ஜெயிக்கலாம்.
நாயகியின் கணவராக நடித்திருக்கும் ராஜதுரை புதுமுகமாக இருந்தாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். ஐடி துறையில் பணியாற்றினாலும், வேஷ்ட்டி, முறுக்கு மீசை என்று திருநெல்வேலி கெத்தை அவர் காட்டிய விதம் நேர்த்தியாக இருப்பதோடு, கதாபாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறது.
சிவசக்தி, சுபராமன், ஸ்டெல்லா ஆகியோருடன் பல புதிய முகங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஊர் மக்கள் போல் இருந்தாலும், திரைக்கதையோட்டத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மகிபாலன் திரைகக்தைக்கு ஏற்ப தனது கேமராவை பயணிக்க வைத்திருந்தாலும், நாயகி, நாயகன், வில்லன் ஆகியோரை தவிர மற்ற நடிகர்கள் நடிக்கும் போது செய்திருக்கும் சிறிய தவறுகளை சரிசெய்ய தவறியிருக்கிறார்.
பொழிக்கரையான்.க-வின் இசையில் பாடல்கள் அனைத்தும் புரியும்படி இருப்பதோடு, பாடல் வரிகள் அனைத்தும் சமூக சிந்தனையை தூண்டுபவையாக இருக்கிறது. பின்னணி இசை அளவு.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்திருப்பதுடன் இசையும் அமைத்திருக்கிறார் பொழிக்கரையான்.க.
பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் சாதாரண விசயம் என்றாலும், தற்போதைய நவீன உலகத்திலும் இதை பெரும் குற்றச் செயலாக பார்க்கும் சமூகம், அதற்கு பெண்கள் மட்டுமே முழு காரணம், என்ற ரீதியில் அந்த பிரச்சனையை அனுகுகின்றன, என்பது பற்றி மிக தெளிவாகப் பேசியிருக்கும் இயக்குநர் பொழிக்கரையான்.க, அத்தகைய சமூகத்திற்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார் என்பதை விட செருப்படி கொடுத்திருக்கிறார், என்று சொல்வதே சரியாக இருக்கும். அத்தகைய சர்ச்சையான ஒரு விசயத்தை அவர் கையாண்டாலும், அதை அவர் காட்சிப்படுத்திய விதம் நேர்மையாக இருக்கிறது.
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையக்கருவாக கொண்டு திரைக்கதை பயணித்தாலும், சாதி பாகுபாடு பற்றி பேசியிருக்கும் இயக்குநர், சமூக அநீதிகளுக்கு எதிரான போராளியும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவருமான கிருஷ்ணம்மாள் அவர்களின் பெயரை நாயகியின் கதாபாத்திரத்திற்கு வைத்து, அவர் மூலமாக சமூக நீதி கருத்துக்களையும் பேசியிருப்பது பாராட்டும்படி இருந்தாலும், இந்த கதைக்கு இது தேவையா? என்ற கேள்வியை எழுப்புவதோடு, அத்தகைய பிரச்சனை பற்றி படத்தில் சொல்லாமல், அதுபற்றிய வசனங்களை வைத்திருப்பது, திணிக்கப்பட்டது போல் தெரிகிறது.
திரைப்படம் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற முயற்சியில் இசையமைப்பாளர், கதையாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பொழிக்கரையான்.க வெற்றி பெற்றிருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு தரமான திரைப்படமாக கொடுப்பதில் பெரும் சறுக்கலை சந்தித்திருக்கிறார்.
இருந்தாலும், இப்படி ஒரு பட்ஜெட்டில், இப்படி ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் பொழிக்கரையான்.க அவர்களை பாராட்டி, ‘நானும் ஒரு அழகி’ படத்தை கொண்டாடுவதில் தவறில்லை.
மொத்தத்தில், ‘நானும் ஒரு அழகி’ பெண்களின் புதியபாதை.
ரேட்டிங் 2.5/5