’நாயாடி’ திரைப்பட விமர்சனம்
Casting : Aadharsh Madhikaandham, Kadhambari, Fabbian, Niwas, Aravinth Samy, Ravichandran K, Geetha Lakshmi
Directed By : Aadharsh Madhikaandham
Music By : Arun
Produced By : Mohandas Pullanikat
சூனியம், மந்திரம், நரபலி போன்றவற்றில் ஈடுபட்ட நாயாடி சமூகத்தை சேர்ந்த தம்பதியை ஊர் மக்கள் எரித்து கொன்று விடுகிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தாலும், தற்போதும் அந்த இடத்தில் நாயாடி தம்பதியின் ஆவி உலவுவதாக சொல்லப்படுகிறது. அந்த இடத்தை வீடியோ எடுப்பதற்காக யூடியுப் சேனல் குழுவினர் அங்கு செல்ல, அவர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய சம்பவங்களும், அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதும் தான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் மதிகாந்தன், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, முதல் படம் போல் அல்லாமல் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் காதம்பரி, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு, இறுதிக்காட்சியில் எதிர்பார்க்காத வேடத்தில் மிரட்டவும் செய்திருக்கிறார்.
பெபியன், சரவணன், அரவிந்த், ரவிச்சந்திரன், கீதா லக்ஷ்மி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒரே இடத்தில் கதை நடந்தாலும் கேமராவை சுழல வைத்து காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் மோசஸ் டேனியல், கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அருணின் பின்னணி இசை திகில் படத்திற்கு ஏற்றபடி இருந்தாலும், சில இடங்களில் சுமாராகவே பயணித்திருக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் மதிகாந்தன், படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்திருக்கிறார். நாயாடி சமூகத்தை பற்றிய வரலாற்று கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பவர், அதை சொல்வதில் சற்று தடுமாறியிருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் பின்னணி குரல் மூலம் சொல்லப்படும் நாயாடி சமூகத்தின் கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், அதை கருவாக வைத்துக்கொண்டு இயக்குநர் ஆதர்ஷ் மதிகாந்தன் அமைத்திருக்கும் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் சலிப்படைய செய்கிறது.
படத்தில் நாயாடிகள் பற்றி சொல்லப்படும் தகவல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், இயக்குநர் அதை சொல்லிய விதம் சொதப்பலாக இருக்கிறது. இருந்தாலும் சிறிய பட்ஜெட்டில் எப்படிப்பட்ட படத்தை கொடுக்க முடியுமோ அப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக இயக்குநர் மற்றும் நடிகர் ஆதர்ஷ் மதிகாந்தனை பாராட்டலாம்.
ரேட்டிங் 2/5