நாச்சியார் விமர்சனம்
Casting : Jyothika, G.V.Prakash Kumar, Ivana
Directed By : Bala
Music By : Ilayaraja
Produced By : B Studios & EON Studios
தனது பாணியை சற்று மாற்றிக்கொண்ட பாலாவின் குறுகிய கால படைப்பாக வெளியாகியிருக்கும் ‘நாச்சியார்’ எப்படி என்பதை பார்ப்போம்.
நேர்மையான போலீஸ் அதிகாரியான ஜோதிகாவிடம் மைனர் பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கு ஒன்று வருகிறது. அதை விசாரிக்கும் அவர் அதற்கு காரணமான மைனர் பையனான ஜி.வி.பிரகாஷை கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கிறார். ஆனால், அந்த பெண்ணோ ஜி.வி.பிரகாஷ் தன்னை கற்பழிக்கவில்லை, இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம், நடந்த தவறுக்கு இருவரும் தான் பொறுப்பு, என்று கூற, கர்ப்பமான அந்த பெண்ணை ஜோதிகா தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். சில நாட்களில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்க, டி.என்.ஏ பரிசோதனையில் அந்த குழந்தையின் அப்பா ஜி.வி.பிரகாஷ் அல்ல என்று தெரிய வருகிறது.
இந்த விஷயத்தை அந்த பெண்ணிடம் நேரடியாக கேட்க தயங்கும் ஜோதிகா, அதே சமயம் அந்த பெண் யாரால் பாதிக்கப்பட்டார், என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை.
எளியவர்களின் வாழ்க்கையையும், அவர்களது வலியையும் தனது படங்களில் அழுத்தமாக சொல்லும் பாலா, இந்த படத்தின் மூலம் தனது ரூட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார். படத்தின் முதல் பாதி வரை, நாம் பார்த்துக் கொண்டிருப்பது பாலாவின் படம் தானா! என்ற சந்தேகத்தை கொடுக்கிறது. அந்த அளவுக்கு படம் ரொம்பவே டிரய்யாக நகர்கிறது.
ஒரே மாதிரியான படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இந்த படம் சற்று வித்தியாசத்தை கொடுத்திருப்பதோடு, நடிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பல இடங்களில் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் ஜி.வி நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், பாலாவின் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் சாயல் அவரிடமும் பார்க்க முடிகிறது.
மைனர் பெண்ணாக நடித்துள்ள இவானா, தனது குழந்தை தனத்தையும், அதனுடன் சேர்ந்து வரும் காதலையும் தனது கண்கள் மூலமாகவே பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜோதிகா துள்ளல் நடிப்பை ஓரம் கட்டிவிட்டு, எப்போதும் கோபத்துடனே வலம் வந்திருப்பது அவரை வேறுபடுத்தி காட்டியிருக்கிறது. ஆண்களை போடா வாடா..என்று சொல்லிக்கொண்டு, ஆண்மைத் தனம் கலந்த பெண்ணாக அவர் தன்னைக் காட்டிக்கொள்ள ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். முதல் முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கும் ஜோதிகா, அதிரடியான தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ட தனது வசனங்களை போல்டாக உச்சரித்தாலும், நாச்சியார் என்ற தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உச்சரிக்க தவறிவிட்டார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ஒரு காட்சியில் வரும் நீதிபதி வேடத்தில் நடித்திருப்பவர், ஜி.வி.பிரகாஷின் பாட்டியாக நடித்திருப்பவர் என்று படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களாக இருக்கிறார்கள்.
தனது இசையை எந்த இடத்திலும் மிகைப்படுத்திக் காட்டாமல் திரைக்கதை ஓட்டத்துடனே பயணித்திருக்கும் இளையராஜாவும், ஒளிப்பதிவாளர் ஈஸ்வரும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
எளியவர்களை மிதிக்கும் வலியவர்கள், எளியவர்களுக்காக சட்டத்தை நிலை நாட்ட போராடும் போலீஸ் அதிகாரி, என்ற கதையை அழுத்தமாக சொல்ல முயற்சித்திருக்கும் பாலா, தனது பாணியில் இருந்து விலகி சொல்லியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்திருக்கிறது. அதிலும் இடைவேளையின் போது வரும் டிவிஸ்ட் ரசிகர்கள் சுலபமாக யூகிக்க கூடியது போல இருப்பதோடு, பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகளும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் நகர்வது படத்திற்கு கூடுதல் மைனஸாக அமைந்திருக்கிறது.
முதல் முறையாக சென்னையை கதைக்களமாக கையாண்டுள்ள பாலா, சென்னை குடிசைப் பகுதிகளை நேரில் சென்று பார்த்துவிட்டு இந்த படத்தின் கதாபாத்திரங்களை சித்தரித்திருக்கலாம். சென்னை குடிசைப் பகுதியில் பசங்க எல்லோரும் டவுசரோட தான் சுத்துராங்க, என்ற பாலாவின் கருத்தும் காட்சி அமைப்பும் ரொம்ப தவறானது. வேலை வெட்டிக்கே போகாத பசங்க கூட டிரெஸ் பண்ணுவதில் அக்கறை காட்டும் காலம் இது, இந்த காலத்தில் சென்னை குடிசைப் பகுதியை பாலா காட்டிய விதமும், அப்பகுதி மக்களாக நடிகர்களை சித்தரித்த விதமும் மிகப்பெரிய ஏமாற்று வேலையாக இருக்கிறது.
பாலா படத்தில் எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறதோ, அதே அலவுக்கு திரைக்கதையுடன் கூடிய நகைச்சுவைக் காட்சிகளும் அதிகமாக இருக்கும். ஆனால், அவை எதுவும் இந்த படத்தில் இல்லை.
உயர் போலீஸ் அதிகாரியின் பெண் உதவியாளர், அசிஸ்டெண்ட் கமிஷ்னரான ஜோதிகாவை விரட்டுவது, ”ஆவணக் கொலைகள் நடக்கும் இடத்திற்கு போய் உன்னோட வெறிய காட்டு...” என்று ஜோதிகாவிடம் உயர் போலீஸ் அதிகாரி சொல்வது, போன்ற காட்சிகள் அனைத்தும் லாஜிக் மீறல்களாக இருக்கிறது. இதில் வேற ஜெயலலிதாவின் புகைப்படத்தை தேவையில்லாமல் காட்டும் பாலா, தனது அரசியல் ஆசையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
குழந்தை தனக்கு பிறந்தது அல்ல, என்று தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ளும் ஜி.வி.பிரகாஷின் மனபக்குவமும், அந்த காட்சியும் ரசிக்கும்படியாக இருந்தாலும், முழுப்படமாக பார்த்தால் பாலாவிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்பதை இந்த ‘நாச்சியார்’ நிரூபித்துள்ளது.
ஜெ.சுகுமார்