Sep 21, 2024 12:20 PM

’நந்தன்’ திரைப்பட விமர்சனம்

e888aa5dae152c187201cebd7714f2d8.jpg

Casting : M. SasiKumar, Sruthi Periyasamy, Mathesh, Mithun, Balaji Sakthivel, Durai Sudhakar, Katta Erumbu Stalin, Samuthirakani, V Gnanavelu, GM kumaras, Sithan Mohan, Sakthi saravanan

Directed By : Era Saravanan

Music By : Ghibran

Produced By : Era Entartainment - Era Saravanan

 

சாதிய வன்கொடுமைகள் பற்றியும், அதில் இருந்து விடுபடுவதற்கான தீர்வு பொருளாதார முன்னேற்றம் அல்லது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுதல் உள்ளிட்ட விசயங்களை பேசும் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும், அவர்களின் அவல நிலை மட்டும் மாறவில்லை, என்ற உண்மையை திரையில் முதல் முறையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘நந்தன்’.

 

ஊராட்சி மன்றங்களில் நடக்கும் சாதி பாகுபாடு மற்றும் ஆதிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு நேர்ந்த சில கசப்பான உண்மை சம்பவங்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் இரா.சரவணனுக்கு பெரும் ஒத்துழைப்பு கொடுக்கும் விதத்தில், தனது வழக்கமான பாணியை மாற்றி, புது அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் சசிகுமார்.

 

அம்பேத்குமார் என்கிற கூல்பானை என்ற கதாபாத்திரத்தில் அழுக்கு படிந்த உழைப்பாளியாக வாழ்ந்திருப்பவர், ஊராட்சி மன்ற தலைவரான பிறகு, அந்த பணியை திறம்பட செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் போது அவருக்கு நேரும் சோகம் மனதை பதற வைக்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி பெரியசாமி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலஜி சக்திவேல், சாதி வெறியாட்டத்தின் வக்கிரத்தை தனது நடிப்பு மூலம் திரையில் கொண்டு வந்து பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்.

 

ரியல் எஸ்டேட் தொழிலதிபராக நடித்திருக்கும் துரை சுதாகர், பாலாஜி சக்திவேலுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

 

சமுத்திரக்கனி, ஸ்டாலின், வி.ஞானவேலு, ஜி.எம்.குமார், சித்தன் மோகன், சக்தி சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரவணனின் கேமரா கிராமத்தின் அழகை மட்டும் இன்றி, கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

 

ஜிப்ரான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது ஏமாற்றமே.

 

ஆதிக்குடிகளின் அடிமைத்தனத்தை அறுத்தொழிப்பதற்காக அவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்க ஏற்படுத்தப்பட்ட தனித்தொகுதி முறையின் அவலத்தை முதல் முறையாக திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.

 

இங்கு ஆள்வதற்கு தான் ஆட்சி அதிகாரம் தேவை என்று நினைத்தேன், ஆனால் நாங்க வாழ்வதற்கே ஆட்சி அதிகாரம் தேவைப்படுகிறது, என்ற வசனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் மன குமுறல்களை உரக்க சொல்லியிருக்கும் இயக்குநர் இரா.சரவணனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். 

 

அதே சமயம், அம்பேத்குமாரை ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, சினிமாவில் வேண்டுமானால் அம்பேத்குமார் ஜெயிக்கலாம், ஆனால் நிஜத்தில், ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டாலும், அவர்களின் நிலை மாறாது, என்று சொல்லியிருக்கும் இயக்குநர் இரா.சரவணன், ஒரு படைப்பாளியாக இத்தகைய பிரச்சனைக்கு தீர்வு சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, மக்கள் மனதில் அவநம்பிக்கை ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

 

மொத்தத்தில்,  இந்த ‘நந்தன்’ பாதிக்கப்பட்டவன் என்றாலும், அவனது வலி பார்வையாளர்களை பாதிக்கவில்லை.

 

ரேட்டிங் 3/5