Aug 31, 2022 05:08 AM

‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்பட விமர்சனம்

ee0dd8851c0a89747cbd27217e678ea9.jpg

Casting : Thushara Vijayan, Kalaiyarsan, Kaalidas,

Directed By : Pa Ranjith

Music By : Thenma

Produced By : Yazhi Films and Neelam Productions

 

காதல் பற்றிய வெவ்வேறு கருத்துள்ளவர்கள் இணைந்து முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய நாடகம் ஒன்றை போடும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதற்காக பாண்டிச்சேரியில் ஒன்று கூடும் இவர்கள் காதல் குறித்து மட்டும் இன்றி சமூகம், அரசியல், வாழ்வியல் என அனைத்திலும் கருத்து ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் மாறுபட்டு இருக்க, இறுதியில் இவர்களது காதல் நாடகம் அரங்கேறியதா? இல்லையா? என்பதே கதை.

 

ஆண் மற்றும் பெண் என்ற இருவர் சம்மந்தப்பட்ட காதலை வைத்துக்கொண்டு சமூகத்தில் நடத்தப்படும் அரசியல் குறித்து பேசும் படம், ஆணவக்கொலைகள் குறித்தும் அழுத்தமாக பேசுகிறது. இயக்குநர்பா.இரஞ்சித் படங்கள் இப்படிப்பட்ட கருத்துக்களை பேசுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், உலக தரத்திலான ஒரு படத்தில் உள்ளூரில் நடக்கும் சாதி ரீதியிலான பிரச்சனைகளை மிக அழகாக கையாண்டிருப்பது புதிதாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

 

காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துசாரா, ஹரிகிருஷ்ணன், சார்லஸ் வினோத், ஞானபிரசாத், சுபத்ரா ராபர்ட், சபீர், ரெஜின் ரோஸ், தாமு என படத்தில் ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் அனைவரும் மனதில் நிற்கிறார்கள். குறிப்பாக ரெனே என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் துஷாரா கதையின் நாயகியாக கம்பீரமாக வலம் வருகிறார்.

 

கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் இடம்பெறும் பலம் மிகுந்த பெண் கதாப்பாத்திரங்களில் மிகவும் கவனிக்கத்தக்க கதாப்பாத்திரமாக துஷாராவின் வேடம் வடிவமைக்கபப்ட்டுள்ளது. அந்த கதாப்பாத்திரத்திடம் இருக்கும் தைரியம், கோபம், காதல், திமிர், சோகம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் ரசிகர்களிடம் கடத்தியிருக்கும் துஷாராவுக்கு விருதுகள் பல கிடைப்பது நிச்சயம்.

 

கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார். பா.இரஞ்சித் படங்கள் அனைத்திலும் இருக்கும் கலையரசனுக்கு இந்த படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரம். ஒட்டு மொத்த திரையரங்கையே சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்படியான கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

 

சார்லர் வினோத், ரெஜின் ரோஸ் உள்ளிட்ட நாடக கலைஞர்களாக நடித்திருப்பவர்களில் அசத்தலான நடிப்பு ஒருப் அக்கம் இருக்க,  மறுபக்கம் கலையரசனின் அம்மாவாக நடித்திருக்கும் பெண்மணி அசுரத்தனமாக நடித்து அப்ளாஷ் பெறுகிறார். ஒரு அம்மா மகனை வழிக்கு கொண்டு வர  என்னவெல்லாம் செய்வார் என்பதை அப்படியே நம் கண்முன் நிறுத்தியிருக்கும் அந்த பெண்மணி உள்ளிட்ட அந்த காட்சியில் வரும் அத்தனை நடிகர்களும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

 

கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு கதையில் வரும் ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கிறது. கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்தும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கும் கிஷோர் குமார், நாடகம் அரங்கேறும் மேடை, பயிற்சி மேடை என அனைத்தையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்.

 

தென்மாவின் பின்னணி இசை திரைக்கதை மற்றும் கதாப்பாத்திரங்களின் ஆன்மாவாக பயணிக்கிறது. பாடல்களில்  இடம்பெறும் வரிகளை கவனிக்க வைப்பதோடு புதிதான இசை மூலம் நம்மை ரசிக்கவும் வைத்திருக்கிறார். 

 

நாடக மேடை, பயிற்சி மேடை, நட்சத்திரங்கள் சூழ்ந்திருக்கும் வானம்,ஓவியம் என்று கலை இயக்குநர் எல்.ஜெயரகுவின் உழைப்பும் கவனம் பெறுகிறது.

 

படத்தின் ஆரம்பக்காட்சியில் ஒரு ஆங்கிலப் பாடல் ஒலிக்கிறது, அதை தொடர்ந்து இளையராஜாவின் பாடலை நாயகி பாட அங்கு இளையராஜா பற்றிய அரசியல் பேச்சு இடம்பெறுகிறது. இப்படி முதல் காட்சியிலேயே தனது அரசியல் பார்வையை ஆரம்பிக்கும் இயக்குநர் பா.இரஞ்சித், அடுத்தடுத்த காட்சிகள் மூலம் காதல் எப்படி அரசியலாக்கபப்டுகிறது குறிப்பாக சாதி தொடர்பான அரசியல் காதலில் எப்படி வருகிறது, என்பது குறித்து பேசுகிறார்.

 

ஆணவக்காதல், ஆண்ட பரம்பரை, வீரத்துக்காக பிறந்தவங்க என்று சாதி பெருமை பேசுபவர்களை நக்கலடிக்கும் வகையில் பல காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித், இந்த பிரபஞ்சத்தில் பூமி என்பது சிறு துகள் என்பதை உணர்ந்தாலே, நாமே உண்ணும் இல்ல என்பதை புரிச்சிக்குவாங்க, என்ற வசனம் மூலம் தான் சொல்ல வந்ததை அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.

 

படத்தில் ஒலிக்கும் ஆங்கிலப் பாடல், இளையராஜாப் பற்றிய அரசியல் பேச்சு, காட்சிகளில் காட்டப்படும் ஓவியங்கள் என்று ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் மிகப்பெரிய அரசியலை பேசியிருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சில விஷயங்கள் புரியும்படி சொல்லியிருப்பது சில இடங்களில் சலிப்படைய செய்கிறது. அதேபோல், படத்தில் இறுதியில் வரும் சபீரின் கதாப்பாத்திரம் மூலம் படத்தின் நீளம் அதிகரித்திருப்பதும் சற்று சலிப்படைய செய்கிறது. இந்த இரண்டு விஷயங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் படமாக ரசிக்க வைப்பதோடு, பாடமாக கற்றுக்கொள்ளவும் வைக்கிறது பா.இரஞ்சித்தின் இந்த ‘நட்சத்திரம் நகர்கிறது’.

 

ரேட்டிங் 3.5/5