Dec 23, 2022 12:46 PM

‘நெடுநீர்’ திரைப்பட விமர்சனம்

9aa5a5eef215aef8c65fe84a31bef1ee.jpg

Casting : Rajkirish, Indhuja, Ma.Sathya Murugan, Madurai Mohan, SK Minnal Raja

Directed By : Ku.Ki.Padmanaban

Music By : Hithesh Murugavel

Produced By : Kevin Creators - VS Palayam S.Krishnamurthy

 

சூழ்நிலை காரணமாக சிறுவயதில் நாயகன் ராஜ்கிருஷும், நாயகி இந்துஜாவும் தமது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறார்கள். வழியில் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். நாயகியை தேடி அலையும் நாயகன் சூழ்நிலையால் ரவுடியாகி விடுகிறார். 

 

இதற்கிடையே 8 வருடங்களுக்கு பிறகு நாயகனை சந்திக்கும் நாயகி, ரவுடி தொழிலை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி சொல்கிறார். அதன்படி தாதாவிடம் இருந்து நாயகன் விலக முடிவு செய்யும் போது அவரை பழி தீர்க்க காத்திருந்தவர்கள் துரத்துகிறார்கள்.  அவர்களிடம் இருந்து தப்பித்து நாயகியுடன் நாயகன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதே ‘நெடுநீர்’.

 

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ராஜ்கிருஷ், சாது மிரண்டால் காடு கொள்ளாது, என்ற பழமொழிக்கு ஏற்றபடி அமைதியான முகமாக இருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.  முதல் படம் போல் இல்லாமல் காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் அளவாக நடித்து கவர்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை இந்துஜா, இயல்பான முகம். எந்தவித சினிமாத்தனமும் இன்றி இயல்பாக நடித்திருக்கிறார்.

 

அண்ணாச்சியாக நடித்திருக்கும் மா.சத்யா முருகன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, நடிப்பு, சண்டைக்காட்சி என அனைத்திலும் கவனிக்க வைக்கிறார். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் கோலிவுட்டில் முக்கிய இடம் பிடிப்பார்.

 

நண்பனின் கொலைக்காக நாயகனை பழி தீர்க்க துடிக்கும் எச்.கே.மின்னல் ராஜா உள்ளிட்ட இளைஞர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.  மற்ற வேடங்களில் நடித்திருக்கும் மதுரை மோகன் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

லெனின் சந்திரசேகரனின் ஒளிப்பதிவில் கடலூர் அழகையும், கடலின் அழகையும் ரசிக்க முடிகிறது. 

 

ஹித்தேஷ் முருகவேல் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் கு.கி.பத்மநாபன் காதல் கதையை ரவுடிசம் பின்னணியில் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். புதுமுகங்களை வைத்துக்கொண்டு தான் சொல்ல வந்த கதையை மிக இயல்பாக சொல்லியிருப்பவர், காதல் கடலைப்போன்று பிரமாண்டமானது என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ’நெடுநீர்’ அழகு, ஆர்ப்பரிப்பு, அமைதி என கடலின் அத்தனை அம்சங்களையும் கொண்ட எளிமையான படம்.

 

ரேட்டிங் 2.5/5