Nov 11, 2017 12:43 PM

'நெஞ்சில் துணிவிருந்தால்' விமர்சனம்

9fe81226e337d427e0251a2eb18762be.jpg

Casting : Sundeep Kishan, Vikranth, Soori, Mehreen Pirzada

Directed By : Suseenthiran

Music By : D.Imman

Produced By : Annai Film Factories

 

நெஞ்சில் துணிவிருந்தால், யாரை வேண்டுமானாலும் எதிர்த்து போராடி வெற்றி பெறலாம் என்பதை, சமூகத்தில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.

 

அரசியல், வியாபாரம் போன்றவற்றில் இருந்த கூலிப்படை தற்போது மருத்துவ துறையில், அதுவும் மருத்துவ மேற்படிப்பில் நுழைந்திருப்பதை துணிவோடு சொல்லியிருப்பதுதான், இப்படத்தின் முக்கிய திரைக்கதை.

 

எம்.பி.ஏ படித்த ஹீரோ சந்தீப் கிஷன், தனது நண்பர்கள் விக்ராந்த், சூரி ஆகியோருடன் சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். அவரது அப்பா சிவா சாதாரண ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்து விடுகிறார். இதனால், மருத்துவமனையையும், மருத்துவர்களையும் நீதிமன்றத்திற்கு இழுக்கும் சந்தீப் அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறார்.

 

இதற்கிடையே டாக்டருக்கு படிக்கும் சந்தீப்பின் தங்கையை,  சந்தீப்புக்கு தெரியாமல் விக்ராந்த் காதலிக்கிறார். சந்தீப்பின் அம்மாவுக்கு விக்ராந்தை பிடிக்காத போதிலும், நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  சந்தீப்  எப்பவுமே விக்ராந்தை தன்னுடனேயே வைத்துக்கொள்ள, அவரது தங்கையை காதலிக்கும் விக்ராந்த், குற்ற உணர்வால் கஷ்ட்டப்படுவதோடு, காதல் விவகாரத்தை சந்தீப்பிடம் சொல்ல முடிவு செய்கிறார். இதற்கிடையே பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படைத் தலைவன் ஹரிஷ் உத்தமன், விக்ராந்தையும், சந்தீப்பின் தங்கையையும் கொலை செய்ய விரட்டுகிறார். இந்த விஷயத்தை தெரிந்துக் கொள்ளும் சந்தீப், தனது தங்கையையும், நண்பனையும் கொலை செய்ய கூலிப்படை துரத்துவது ஏன்? என்பதை அறிய முயற்சிக்க பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. அது என்ன, அவர்களிடம் இருந்து விக்ராந்தையும், தனது தன்கையையும் சந்தீப் கிஷன் காப்பாற்றினாரா இல்லையா, என்பது தான் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மீதிக் கதை.

 

'மாநகரம்' என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு சந்தீப் கிஷனுக்கு கிடைத்திருக்கும் மற்றொரு வெற்றிப் படத்தை மனுஷன் மிக சரியாக பயனடுத்திக் கொண்டிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் ரசிகர்களை கவர்ந்துவிடும் சந்தீப், தனது வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

 

கொடுத்த காசை விட அதிகமாகவே நடிக்கும் விக்ராந்த், பல இடங்களில் தனது இயல்பான நடிப்பால் அப்ளாஸ் வாங்குகிறார். இவரை விட்டா இந்த வேடத்தை யாராலும் செய்திருக்க முடியாது, என்று சொல்லும் அளவுக்கு பர்பாமன்ஸில் "பலே..." என்ற பாராட்டையும் வாங்குகிறார் விக்ராந்த்.

 

ஹீரோயின் மெஹ்ரீன் தேர்வு ஹாலில் பிட் அடிக்கும் காட்சியில் அசத்துகிறவர், தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சபாஷ் வாங்கிச் செல்கிறார். வசன உச்சரிப்பில் சற்று தடுமாறுவதை சரி செய்துக் கொண்டால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவது உறுதி.

 

சூரியின் காமெடி படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. ரசிகர்கள் சோர்வடையும் போதெல்லாம், சூரி தான் பூஸ்ட் கொடுத்து உற்சாகப்பட்த்துகிறார். வில்லன் ஹரிஷ் உத்தமன், நடிப்பாலும், கெட்டப்பாலும் மிரட்டுகிறார். ஈவு இரக்கமற்ற, பணத்திற்காக கொலை செய்பவன் நான், என்பதை தனது நடிப்பால் நிரூபித்திருக்கும் ஹரிஷ் உத்தமன், எந்த வேடத்திற்கும் கச்சிதமாக பொருந்துவதுடன், நடிப்பாலும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்ப்பார், என்று நிரூபித்து விடுகிறார்.

 

டி.இமானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையைக் காட்டிலும், அதை படமாக்கியுள்ள ஒளிப்பதிவாளர் லக்‌ஷ்மனின் பணியே சிறப்பாக உள்ளது. இரவு நேரக் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் லக்‌ஷ்மண் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

 

தனது அனைத்து படங்களிலும் சமூக விழிப்புணர்வு பற்றி பேசும் இயக்குநர் சுசீந்திரன், இந்த படத்தில் மருத்துவ துறையில் உள்ள பிரச்சினையோடு, பணம் படைத்தவர்கள், மருத்துவ படிப்பிற்காக, லஞ்சம் கொடுப்பதற்கு மட்டும் தயாரல்ல, வேறு சிலவற்றுக்கும் தயாராக இருக்கிறார்கள், என்பதை துணிச்சலோடு சொல்லியிருக்கிறார்.

 

மருத்துவ துறையில் உள்ள பிரச்சினையை பற்றி பேசும் படம் திடீரென்று கந்துவட்டி கொடுமை பற்றி பேசுவது, தற்போதைய சூழலுக்கு பொருத்தமாக இருந்தாலும் திரைக்கதையின் வேகத்திற்கு ஸ்பீட் பிரேக்கராக அமைந்து விடுகிறது. இருந்தாலும், தங்கையை தனது நண்பன் காதலிப்பதை தெரிந்துக் கொள்ளும் சந்தீப், அதன் பிறகு எடுக்கும் அதிரடி நடவடிக்கை, படத்திற்கு பெஸ்ட் ட்விஸ்டாக இருப்பதோடு, திரைக்கதையை விறுவிறுப்பாக்கி விடுகிறது.

 

உண்மை சம்பவங்களை கமர்ஷியல் சினிமாவாக, அதே சமயம் மக்களுக்கு மெசஜ் சொல்லும் படமாக கொண்டு சேர்ப்பது என்பது, சாதாரண விஷமில்லை என்றாலும், இந்த களத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இயக்குநர் சுசீந்திரன் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார்.

 

ஜெ.சுகுமார்