நெஞ்சுக்கு நீதி விமர்சனம்
Casting : Udhayanidhi Stalin, Aari Arujunan, Tanya Ravichandran, Shivani Rajasekhar, Sivaangi Krishnakumar, Suresh Chakravrthy, Yamini Chander, Ramesh Thilak,
Directed By : Arunraja Kamaraj
Music By : Dhibu Ninan Thomas
Produced By : Boney Kapoor
உதயநிதி நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையே இன்று வெளியாகியுள்ளது. எதிர்ப்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா, என்று விமர்சனத்தை பார்ப்போம்.
மூன்று பள்ளி சிறுமிகள் காணாமல் போக, அவர்களில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள். மற்றொரு சிறிமியின் நிலை என்ன என்பது தெரியாத சூழலில், அந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரி உதயநிதி விசாரிக்கிறார். அந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி என்ன?, அதை செய்தவர்கள் யார்? அவர்களை உதயநிதி கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுத்தாரா? போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தான் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் கதை.
சாதி ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் வலியால் கதறுவதும், அவர்களை காப்பாற்ற வேண்டிய சட்டத்தை கையில் வைத்திருப்பவர்கள் அவர்களின் கதறல்களை கண்டுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதோடு, அவர்களை அடிமைகள் போல் நடத்துவது இந்தியாவின் பல பகுதிகளில் இன்னமும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது, என்பதை மனம் பதறும் வகையில் சொல்லியிருக்கும் படம், அத்தகைய வலி மிகுந்த மக்களை காப்பாற்ற ஒரே வழி சட்டம் மட்டுமே அதை விட முக்கியம் அந்த சட்டம் சரியானவர்கள் கையில் இருக்க வேண்டும், என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படியும் சொல்கிறது.
ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் உதயநிதி, போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு தனது இயல்பான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கவும் செய்கிறார். பத்து பேரை அடித்து ஹீரோயிஷம் செய்வதை காட்டிலும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று நியாயத்திற்காக போராடும் ஒரு காவல்துறை அதிகாரியாக அவர் வெளிக்காட்டியிருக்கும் நடிப்பு செம மாஸ். வெளிநாட்டில் பத்துவிட்டு இந்தியா பற்றி முழுமையாக தெரியாத ஒரு இந்தியர், இந்தியாவில் நிலவும் சாதி பிரச்சனை பற்றி தெரிந்துக்கொண்டு அதை எதிர்கொள்ளும் காட்சிகளில் அவருடைய உடல்மொழியும், வசன உச்சரிப்பும் கைதட்டல் பெறுகிறது.
போராளியாக நடித்திருக்கும் ஆரி, உதயநிதியின் மனைவியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இளவரசு, ஷிவானி ராஜசேகர், மயில்சாமி, ராட்சசன் சரவணன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அனைத்து கதாப்பாத்திரங்களும் கதையோடு பயணிப்பதால் அவர்களுடைய வசனங்களும், நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
தினேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவும், திபு நினன் தாமஸின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், பின்னணி இசை மூலம் படத்தின் விறுவிறுப்பை அதிகரிப்பதோடு, கதையோடு பின்னி பிணைந்தது போன்ற பாடல்களை கொடுத்திருக்கிறார். யுகபாரதியின் வரிகளில் பாடல்கள் ரசிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது.
துப்புறவு பணியாளர்கள், கூலித்தொழிலாளர்கள் என சாமானியர்களின் வலி மிகுந்த வாழ்க்கையை ஒரு சில காட்சிகளிலேயே நமக்கு புரிய வைக்கும் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணா, தனது கேமராவையும் படத்தின் கதாப்பாத்திரமாக பயணிக்க வைத்து மேஜிக் செய்திருக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகள், எதிர்ப்பார்க்காத டிவிஸ்ட்டுகள், சஸ்பென்ஸ் என எதுவும் இல்லை என்றாலும் முழு படத்தையும் சீட் நுணியில் உட்கார்ந்து கவனமாக பார்க்கும்படி செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரூபன். அவரது நேர்த்தியான படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறது.
‘ஆர்டிகள் 15’ என்ற இந்தி படத்தின் ரீமேக் என்றாலும், ஒரு ரீமேக் படம் பார்ப்பது போல் எந்த இடத்திலும் நமக்கு தோன்றவில்லை. நேரடி தமிழ்ப் படம் போல மிக கச்சிதாமக காட்சிகளை கையாண்டிருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.
சாதி பாகுபாடு பார்ப்பது சட்டப்படி குற்றம் என்று சொல்லும் அரசுத்துறைகளில் குறிப்பாக சட்டத்துறையில் எந்த அளவுக்கு சாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது என்பதை அழுத்தமாக பேசியிருக்கும் படம், மக்கள் அனைவரும் சட்டம் படிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.
சாதி பற்றி படம் பேசினாலும், அதை ஒரு பகுதியாக வைத்துக்கொண்டு சமூக பிரச்சனைகள் பற்றி மிக நேர்த்தியாக பேசியிருக்கும் படத்திற்கு, தமிழரசன் பச்சைமுத்துவின் அனல் பறக்கும் வசனங்கள் மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.
“எல்லாருமே சமம் என்றால் யார் தான் ராஜா?” என்ற கேள்விக்கு இயக்குநர் கொடுத்திருக்கும் பதில், ”இந்த வேலையை இவங்க தான் செய்யனும், இவங்க இங்க தான் இருக்கனும்”, என்று சொல்லி இப்பவும் மக்களை மட்டம் தட்டும், தங்களை மேல்தட்டு மக்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு சரியான சாட்டையடி.
அரசியலில் நுழைந்திருக்கும் உதயநிதி, இந்திக்கு எதிராக பேசும் வசனம் என்று சொல்வதை விட தாய்மொழிக்கு ஆதரவாக பேசும் வசனத்திற்கு ஒட்டுமொத்த தியேட்டரே எழுந்து நின்று கைதட்டுகிறது. அப்படி அவரை எப்படி காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள், அவரை எப்படி பேச வைத்தால் கதைட்டல் கிடைக்கும் என்று மிக கவனமாக கையாண்டிருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுத்தாலும் பத்தாது.
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக பேசும் படம் அல்லது சாதி அரசியல் பேசும் படம், என்று ஒதுக்கிட முடியாதபடி அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய ஒரு படமாக, குறிப்பாக “அனைவரும் சமம்” என்று நினைப்பவர்கள் கொண்டாடும் படமாகவும், அப்படி நினைக்காதவர்கள் இப்படத்திற்கு பிறகு அப்படி நினைக்க வைக்கும் ஒரு படமாகவும் இப்படம் உள்ளது.
மொத்தத்தில், ‘நெஞ்சுக்கு நீதி’ மக்கள் இதயத்தில் இடம் பிடிக்கும்
ரேட்டிங் 4.5/5