‘நேசிப்பாயா’ திரைப்பட விமர்சனம்
Casting : Akash Murali, Aditi Shankar, Kushboo, Sarathkumar, Prabhu, Kalki Kochalin, Raja
Directed By : Vishnu Varathan
Music By : Yuvan Shankar Raja
Produced By : XB Film Creators - Xavier Britto
நாயகன் ஆகாஷ் முரளி, நாயகி அதிதி ஷங்கரை கண்டதும் காதல் கொள்கிறார். அந்நாள் முதல் அவருக்கு காதல் தொல்லைக் கொடுத்து ஒரு வழியாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார். காதலர்களுக்கு இடையே திடீரென்று பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட, அதிதி ஷங்கர் போர்ச்சுக்கல் நாட்டில் வேலைக்கு சென்று விடுகிறார். ஆகாஷ் உள்ளூரில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார். இதற்கிடையே, போர்ச்சுக்கல் சென்ற அதிதி ஷங்கர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். தகவல் அறிந்த் ஆகாஷ் முரளி, காதலியை காப்பாற்றுவதற்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கிறார். அவர் நாயகியை காப்பாற்றினரா?, கொலைக்கான பின்னணி, அதில் நாயகி அதிதி ஷங்கர் சிக்கியது எப்படி? என்பதை காதலும், மோதலும் கலந்து சொல்வது தான் ‘நேசிப்பாயா’.
ஆக்ஷன், வயதுக்கு ஏற்ப சுறுசுறுப்பு என தனது முழு திறமையையும் வெளிக்காட்டக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் நாயகன் ஆகாஷ் முரளி சரியாக பயன்படுத்தியிருக்கிறார். ஆறடி உயரத்தில் ஆக்ஷன் நாயகனுக்கான அத்தனை அம்சங்களும் கொண்ட ஆகாஷ் முரளி நிச்சயம் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நாயகனாக உருவெடுப்பார்.
நாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர் கல்லூரி மாணவி மற்றும் வாழ்க்கையை உணர்ந்த முதிர்ச்சியான பெண் என ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், சில காட்சிகளில் அவரது நடிப்பு எடுபடமால் போவதோடு, பார்வையாளர்களை சற்று எரிச்சலடையவும் செய்கிறது.
சரத்குமார், குஷ்பு, ராஜா, பிரபு, கல்கி கோச்சலின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எரிக் பிரைசன் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறது. சேசிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களின் பாணியில் படமாக்கப்பட்டிருக்கிறது.
திரைக்கதைக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் விதமாக காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஏ.ஸ்ரீகர்பிரசாத்.
வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்லும் நாயகிக்கு பிரச்சனை, அதில் இருந்து அவரை காப்பாற்றும் நாயகன், என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு, காதல், ஈகோவால் ஏற்படும் பிரிவு, கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆகியவற்றை கலந்து பிரமாண்டமான கமர்ஷியல் மற்றும் மென்மையான காதல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு வர்தன்.
ஆகாஷ் முரளி என்பவருக்காக எழுதப்பட்ட கதை, திரைக்கதை என்றாலும், இப்படிப்பட்ட கதையை இவ்வளவு பிரமாண்டமாக எடுத்திருப்பது பார்வையாளர்களை வியக்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘நேசிப்பாயா’ திரை ரசிகர்களை நேசிக்க வைக்கும்.
ரேட்டிங் 3/5