’நெவர் எஸ்கேப்’ திரைப்பட விமர்சனம்
Casting : Robert Master
Directed By : D Sri Aravind Devaraj
Music By : Saran Kumar
Produced By : Royal Production House - Nancy Flora
திரையரங்கம் ஒன்றில் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக நம்பும் மக்கள் அந்த பக்கமே போவதற்கு பயப்படுகிறார்கள். மக்களின் இத்தகைய பயத்தை போக்கி, திரையரங்கிற்குள் நடப்பதாக சொல்லப்படும் அமானுஷ்ய விஷயங்கள் பொய்யானவை என்று நிரூபிப்பதற்காக யூடியூப் சேனல் குழுவினர் அந்த திரையரங்கிற்குள் நுழைகிறார்கள். அதே சமயம், போலீஸிடம் இருந்து தப்பித்து வரும் சிலர் பதுங்குவதற்காக அந்த திரையரங்கிற்குள் நுழைகிறார்கள். இவர்களுக்கு திரையரங்க உரிமையாளரான ராபர் டிக்கெட் கிழித்து கொடுத்து உள்ளே அனுப்புகிறார்.
திரையரங்கிற்குள் சென்றவர்கள் சில நிமிடங்களில் அங்கு ஏதோ அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதை உணர்கிறார்கள். உடனே அங்கிருந்து அவர்கள் தப்பிக்க முயற்சிக்க, அது முடியாமல் போகிறது. இறுதியில் அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? இல்லையா?, திரையரங்கிற்குள் இருக்கும் அமானுஷ்யத்தின் பின்னணி என்ன? என்பது தான் ‘நெவர் எஸ்கேப்’ படத்தின் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டலாக நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் பார்வையாளர்கள் திக்...திக்...திக்...நிலைக்கு சென்றுவிடுகிறார்கள். சைக்கோத்தனமான நடிப்பு மூலம் படத்தை தன் தோளில் சுமந்திருக்கும் ராபர்ட், கதாபாத்திரத்தை உணர்ந்து, தனது ஒவ்வொரு அசைவுகளிலும் சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டு பாராட்டு பெறுகிறார்.
மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் புதுமுகங்கள் என்றாலும், அனைவரும் தங்களுடைய நேர்த்தியான நடிப்பு மூலம் ராபர்ட்டுக்கு ஈடுகொடுத்திருக்கிறார்கள். ஆனால், வசன உச்சரிப்பில் தடுமாறியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சாஸ்தி, நிழல் மற்றும் நிஜத்தை நேர்த்தியாக காட்சிப்படுத்தி, ரசிகர்களை மிரள வைத்திருப்பதோடு, திரையரங்கிற்குள் நடக்கும் திகில் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் படபடப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சரண்குமாரின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டத்தை கொடுத்திருப்பதோடு, ரசிகரக்ளுக்கு பெரும் பயத்தையும் கொடுக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.
திகில் ஜானர் கதை என்றாலும் அதை வழக்கமான பாணியில் சொல்லாமல் வித்தியாசமான முறையில் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் குரு பிரதீப், ‘தி சைனிங்’ என்ற ஹாலிவுட் படத்தை குறிப்பாக வைத்துக்கொண்டு நேர்த்தியாக பணியாற்றியிருக்கிறார்.
ஆரம்பத்தில் வழக்கமான காட்சிகள் இருந்தாலும், திரையரங்கிற்குள் நுழைந்த உடன் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. அதுவும் குறிப்பாக இடைவேளை காட்சி நம்மை பரபரப்பில் உச்சத்திற்கு கொண்டு சென்று விடுகிறது.
கதையை கையாண்ட விதம், திகில் காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் போன்றவற்றின் மூலம் படம் வெகுவாக கவர்ந்தாலும், கதை ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பதோடு, ஒரே விஷயம் திரும்ப திரும்ப வருவதுபோல் அமைக்கப்பட்ட திரைக்கதை படத்தை சற்று தொய்வடைய செய்துவிடுகிறது.
ஏற்கவே இதுபோன்ற பாணியில் வெளியான சில படங்கள் ரசிகர்களின் நினைவுக்கு வரக்கூடாது என்பதற்காக வித்தியாசமான முறையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை நகர்த்துவதில் மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் ஸ்ரீ டி அரவிந்த் தேவராஜ், திரைக்கதையின் வேகத்தை அதிகரிக்கச் செய்திருந்தால் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில், ‘நெவர் எஸ்கேப்’ வித்தியாசமான முயற்சி.
ரேட்டிங் 2.8/3