‘என்.ஜி.கே’ விமர்சனம்
Casting : Surya, Sai Pallavi, Raghul Preeth Singh, Ilavarasu, Ponvannan
Directed By : Selvaraghavan
Music By : Yuvan Shankar Raja
Produced By : Dream Warrior Productions
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் முதல் அரசியல் படமாக, பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘என்.ஜி.கே’ எப்படி என்பதை பார்ப்போம்.
படித்த சாதாரண இளைஞர் ஒருவர் அரசியலில் நுழையும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அந்த பிரச்சினைகளையும், அரசியல் சாணக்கியர்களையும், வியாபாரிகளையும் அவர் எப்படி சமாளித்து அரசியலில் வெற்றி பெறுகிறார், என்பதே ‘என்.ஜி.கே’ படத்தின் கதை.
ரவுடிஸத்திற்கு அரசியலுக்கும் இருக்கும் தொடர்பை ‘புதுப்பேட்டை’ படத்தில் ராவாக சொன்னாலும், நேர்த்தியாக சொன்ன இயக்குநர் செல்வராகவன், அரசியல் இருக்கும் அடிமட்ட தொண்டனின் வாழ்க்கையையும், அவன் அரசியலில் முன்னேற வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை மட்டும் இன்றி இயற்கை விவசாயம், படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுடன், தற்போதைய அரசியலில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு என்ன, என்பதையும் விரிவாக சொல்லாமல், சில பல குழப்பங்களுடன் ‘என்.ஜி.கே’வில் சொல்லியிருக்கிறார்.
கார்ப்பரேட் நிறுவன பணியை விட்டுவிட்டு தனது சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்வதோடு, மக்களுக்கு பல உதவிகளை செய்து வரும் நந்த கோபாலன் குமரன் என்கிற என்.ஜி.கே என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா, ஆரம்ப பாடலில் “எதிர்த்து நில்லு, யாராக இருந்தாலும் எதிர்த்து கேள்...” என்று பாட்டு பாடி இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பவர், சாக்கடை என்ற அரசியலுக்குள் நுழைந்து, கழிவறையை சுத்தம் செய்வதில் இருந்து எம்.எல்.ஏ-வின் துணிகளை துவைத்து போடுவது வரை அத்தனை வேலைகளையும் செய்துக் கொண்டு அரசியலில் விஸ்வரூபம் எடுப்பது என்று இரு வேறு கதாபாத்திரமாக நடிப்பில் ஜொலிக்கிறார்.
எதற்கு எடுத்தாலும் “கத்துக்குறேன்...கத்துக்குறேன்...” என்று தன்னடக்கத்துடன் கூறி, சூர்யா ஆடும் அரசியல் தாண்டவம் அமர்க்களம். படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், ரசிகர்களின் கவனம் முழுவதும் சூர்யா என்ற நடிகர் மீது மட்டுமே இருக்கிறது. அந்த அளவுக்கு தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டு முழு படத்தையும் தனது தோள் மீது சூர்யா சுமந்திருக்கிறார்.
ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இருக்கும் அளவுக்கு சாய் பல்லவிக்கு காட்சிகள் இல்லை. குறைவான காட்சிகளில் வரும் சாய் பல்லவி, அந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் செய்து கடுப்பேற்றுகிறார். கதையில் முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங், தனது வேலையை சரியாக செய்கிறார்.
அரசியல் வில்லன்களாக நடித்திருக்கும் பொன்வண்ணன், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி ஆகியோரை விட எம்.எல்.ஏ வேடத்தில் நடித்திருக்கும் இளவரசு மிரட்டி விடுகிறார். பெரும் கோபத்தோடு சூர்யாவிடம் தனது எம்.எல்.ஏ கெத்தை காட்டுபவர், ரகுல் ப்ரீத் சிங்கிடம் பம்முவதும், அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுவது என்று ரசிகர்களை சிரிக்க வைக்கவும் செய்திருக்கிறார். அதிலும், சூர்யாவை கேட்கும் ஒருவரிடம், “என் பொண்டாட்டிய அனுப்பி வைக்கிறேன், ஆனால் நந்தகோபால மட்டும் கேக்காதே” என்று கூறும் போது, ரசிகர்களின் ஆரவாரத்தால் ஒட்டு மொத்த தியேட்டரே அதிர்கிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல் மனதில் நிற்கும்படி இல்லை என்றாலும், சில பீஜியம்கள் ரசிக்க வைக்கிறது. சிவகுமார் விஜயனின் ஒளிப்பதி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பாத்ரூமில் நடக்கும் சண்டைக்காட்சியை அசத்தலாக படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயனை பாராட்டுவது போல ஆக்ஷன் மாஸ்டர் அனல் அரசையும் பாராட்டியாக வேண்டும்.
படத்தை எடிட் செய்தது பிரவீன் கே.எல், ஆனால் படத்தை பார்த்தால் ஏதோ தத்துக்குட்டி எடிட்டர் எடிட் செய்தது போல இருக்கிறது. அந்த அளவுக்கு காட்சிகள் தொடர்பு இல்லாமல் இருப்பதோடு, என்ன சொல்ல வருகிறார்கள், என்பதே சிலருக்கு புரியாதபடி முழு படத்தையும் எடிட் செய்திருக்கிறார்.
செல்வராகவன் படத்தை இயக்கினாரா அல்லது வேறு யாராவது இயக்கினார்களா, என்று எண்ண வைக்கும் விதத்தில் படம் இருக்கிறது. செல்வராகவனின் டச் படத்தில் ஒரு இடத்தில் கூட இல்லை. அதிலும், அரசியல் கதைக்களத்தில் இருக்க கூடிய வீரியமும், விறுவிறுப்பும் மிக மிக குறைவாக இருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
எது நடந்தாலும் அமைதியாக இருக்க கூடாது, எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும், என்று சொல்லும் இயக்குநர் படத்தின் ஹீரோவை, ஆரம்பத்தில் “எதிர்த்து கேள்” என்று பாட வைத்துவிட்டு, பிறகு எம்.எல்.ஏ-வின் பாத்ரூமை கழுவுவது உள்ளிட்ட அல்லக்கை வேலைகள் செய்வது போல காட்டியிருப்பது ஏனோ. அதே சமயம், அரசியலில் சூர்யா வளர்ச்சியடையும் போது, அவரின் சாணக்யத்தனத்தை காட்டாமல், எதிர்கட்சியும், ஆளும் கட்சியும் அவரை கொலை செய்ய முயற்சிப்பது போலவே தொடர்ந்து காட்டுவதும், ரசிகர்களை கதையுடன் ஒட்டவிடாமல் செய்கிறது.
கடுமையான சட்டங்கள் இருந்தால் தான் குற்றங்கள் குறையும் உள்ளிட்ட சமூக சீர்த்திருந்த விஷயங்களுடன் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் செல்வராகவன், அதை மக்களிடம் சென்றடையக்கூடிய சுவாரஸ்யமான படமாக கொடுக்க தவறிவிட்டார்.
இருப்பினும், அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் பலம் என்ன என்பதை அழுத்தமாக காட்டியிருக்கும் செல்வராகவன், சூர்யாவுக்காக தனது ஸ்டைலை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு அரசியல் படமாக இந்த ‘என்.ஜி.கே’ வை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், அரசியலை சாக்கடை என்று ஒதுக்கும் படித்த இளைஞர்களுக்கான படமாக மட்டும் இன்றி, குடும்பத்திற்கான அரசியல் படமாகவும் இருக்கிறது இந்த ‘என்.ஜி.கே’
ரேட்டிங் 3/5