‘நிமிர்’ விமர்சனம்
Casting : Udhayanithi, Parvathi Nayair, Namitha Pramod, MS Baskar, Karunakaran, Director Mahendran
Directed By : Priyadarshan
Music By : Darbuka Siva, B. Ajaneesh Loknath, Ronnie Raphael
Produced By : Santhosh T.Kuruvilla
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று, விருது வாங்கிய பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, காணாமல் போன கதை நிறைய இருக்க, இந்த ‘நிமிர்’ எப்படி என்பதை பார்ப்போம்.
போட்டோகிராபரான உதயநிதி, யார் வம்பு தும்புக்கும் போகாமல் தான் உண்டு தனது வேலை, தனது காதல் உண்டு என்று வழ்ந்து வருகிறார். தனது நண்பரை ஒருவர் அடிக்க, அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடும் உதயநிதியை அவர் அடித்து விடுகிறார். பதிலுக்கு அவரை அடிக்க முயற்சிக்கும் உதயநிதி, அடிக்குமேல் அடி வாங்குவதோடு, வேஷ்ட்டி மற்றும் செருப்பு அவிழ்ந்து கீழே விழ, அந்த சம்பவம் அவருக்கு பெருத்த அவமானமாக அமைகிறது. இதனால், தன்னை அடித்தவரை திருப்பி அடிக்கும் வரை செருப்பு போட மாட்டேன், என்று சபதம் எடுக்கும் உதயநிதி, அதற்காக தன்னை தயாரிப்படுத்திக் கொண்டு, அடித்தவரை திருப்பி அடிக்க கிளம்ப, அவரோ துபாய் சென்றுவிடுகிறார்.
என்னதான் ஆனாலும், தனது சபத்தில் உறுதியாக இருக்கும் உதயநிதியின் காதலி பார்வதி நாயர் வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொள்ள, கல்லூரி மாணவி நமீத பிரமோத்துடன் உதயநிதிக்கு காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே, உதயநிதி அடிக்க நினைப்பவர் நமீதா புரோத்தின் அண்ணன் என்பது தெரிய வரும் நேரத்தில், அவரும் துபாயில் இருந்து திரும்பி வந்துவிடுகிறார். உதயநிதி அவரை அடித்து ஜெயித்து சபதத்தில் வென்றாரா இல்லையா, அவரது இரண்டாவது காதல் வெற்றி பெற்றதா இல்லையா, என்பது தான் க்ளைமாக்ஸ்.
கதை மற்றும் திரைக்கதையைக் காட்டிலும் நடிகர்களின் பர்பாமன்ஸால் தான், சின்ன சின்ன விஷயங்களை வைத்துக்கொண்டு உருவாகும் மலையாளப் படங்கள் வெற்றி பெறுகிறது. அந்த வகையிலான ஒரு படம் தான் இதுவும். அதனால் தான் ரீமேக் என்றாலும், படத்தில் ஏகப்பட்ட இடங்களில் மலையாள வாடை வருகிறது.
சிட்டி பேக்ட்ராப்பில் நடித்துக் கொண்டிருந்த உதயநிதி, படம் முழுவதும் வேஷ்ட்டியோடு வலம் வருவதோடு, அந்த கதாபாத்திரல் கச்சிதமாக பொருந்தினாலும், அடிவாங்கிவிட்டு அவமானப்படும் இடத்தில் அவரது நடிப்பு அவ்வளவாக நம்மை பாதிக்கவில்லை. இருந்தாலும், எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் செய்துவிடாமல் கதாபாத்திரத்திற்கு உண்டான நடிப்பை மட்டுமே கொடுத்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
இரண்டு ஹீரோயின்களில் பார்வதி நாயர் டம்மியாக இருந்தாலும், நமீதா புரமோத் நடிப்பிலும் அழகிலும் கவர்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மகளாக நடித்துள்ள நடிகையும் கவனிக்க வைக்கிறார்.
உதயநிதிக்கு அப்பாவாக நடித்துள்ள இயக்குநர் மகேந்திரன் செட் பிராப்பர்ட்டி போல பயன்படுத்தப்பட்டிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின் நெஞ்சுவலி காமெடி ரசிக்க வைக்கிறது. கருணாகரன் காமெடி நடிகராக அல்லாமல் கதாபாத்திரமாக வந்து போகிறார். ஒரு காட்சியில் வந்தாலும், சமுத்திரக்கனியின் எண்ட்ரி மாஸாக இருக்கிறது.
என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர்கள் தர்புகா சிவா மற்றும் அஜநீஸ் லோக்நாத்தின் பாடல்கள் மற்றும் ரோனி ரபீலின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
எளிமையான விஷயத்தை, எளிமையான மக்களை வைத்து இயக்குநர் பிரியர்தஷன் சொல்லியிருப்பது ரசிக்க வைத்தாலும், பல இடங்களில், நாம் பார்ப்பது தமிழ்ப் படமா அல்லது மலையாலப் படமா? என்ற கேள்வி எழுகிறது.
சின்ன விஷயத்தை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தாலும், அதை நகர்த்திச் செல்லும் விதத்தில் எந்த ஈர்ப்பும் இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். சண்டைபோடும் போது சட்டை கிழிவதும், செருப்பு அவிழ்வதும் சகஜமான ஒன்று தான் என்ற போதிலும், உதயநிதி செருப்பை வைத்து மட்டும் ஏன் சபதம் எடுக்கிறார், என்பதற்கான காரணத்தை இயக்குநர் அழுத்தமாக சொல்லவில்லை.
உதயநிதியை அடிக்கும் நபர், உதயநிதியின் வேஷ்ட்டி அவிழ்ப்பது போல காட்சியை வைத்துவிட்டு, செருப்பு மீது சபதம் ஏற்பது போல காட்சியை வைத்திருப்பது முட்டாள்த்தனமாக உள்ளது.
மொத்தத்தில், சின்ன விஷயத்தை ரொம்ப சீரியஸாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரியதர்ஷன், இறுதியில் சின்னபுள்ளத்தனமாக சொல்லிவிடுகிறார்.
ஜெ.சுகுமார்