Nov 03, 2022 05:31 PM

’நித்தம் ஒரு வானம்’ திரைப்பட விமர்சனம்

7885e0686fbffad38b2571532a0f7ff9.jpg

Casting : Ashok Selvan, Ritu Varma, Aparna Balamurali, Shivathmika Rajashekar

Directed By : Ra. Karthik

Music By : Gopi Sundar

Produced By : Sreenidhi Sagar and P. Rupak Pranav Tej

 

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும்  அசோக் செல்வன், யாருடனும் அதிகம் பேசாமல், பழகமால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். பெற்றோர்கள் பார்த்த பெண் அசோக் செல்வனை அதிகம் கவர்ந்துவிட, தன்னை நேசித்த முதல் பெண் என்பதால் அவள் மீது அதிகமாக அன்புகொள்கிறார். இதற்கிடையே திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண்ணால் திருமணம் நின்றுவிடுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அசோக் செல்வன், அதில் இருந்து மீண்டு வர மருத்துவர் அபிராமியிடம் சிகிச்சைக்கு செல்கிறார்.

 

அசோக் செல்வனின் மனநிலையை புரிந்துகொள்ளும் அபிராமி, தான் நிஜத்தில் சந்தித்த வீரா - லட்சுமி மற்றும் பிரபா - மதிவதணி ஆகியோரின் கதை எழுதிய டைரியை கொடுக்கிறார். அந்த இரண்டு கதைகளையும் படிக்க தொடங்கும் அசோக் செல்வன், ஒரு கட்டத்தில் அந்த கதைகளில் ஐக்கியமாகி விடுகிறார். ஆனால், அந்த இரண்டு கதைகளிலும் முடிவு இல்லாமல் இருக்கிறது. அதே சமயம், அந்த கதைகளின் முடிவு என்னவாக இருக்கும்? என்பதை தெரிந்துக்கொள்வதில் அசோக் செல்வன் அதீத ஆர்வம் காட்டுகிறார். ஆனால் மருத்துவர் அபிராமி, அந்த கதையின் முடிவுகளை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், அவர்களை நீயே நேரில் சென்று பார், என்று கூறி அவர்கள் தற்போது வாழும் முகவரியை அசோக் செல்வனுக்கு கொடுக்கிறார்.

 

அவர்களை தேடி செல்லும் அசோக் செல்வனின் இந்த பயணத்தால் அவருடைய வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தது, என்பதை சொல்வது தான் ‘நித்தம் ஒரு வானம்’.

 

ஒரே படத்தில் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அசோக் செல்வன், மூன்று வேடங்களிலும் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். அர்ஜுன் என்ற வேடத்தில் அமைதியான நடிப்பு மூலம் கவரும் அசோக் செல்வன், வீரா என்ற வேடத்தில் அதிரடி ஆக்‌ஷன் கலந்த முரட்டுத்தனமான அதே சமயம் சொட்ட சொட்ட காதலிக்கும் காதலராக கவருகிறார். பிரபாகரன் என்ற வேடத்தில் காமெடியும் தனக்கு வரும் என்பதை நிரூபித்திருக்கும் அசோக் செல்வன், மொத்தத்தில் சொன்னபடியே தன்னை நல்ல நடிகராக நிரூபித்துள்ளார்.

 

படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். மூன்று பேருடைய கதாபாத்திரமும் மூன்று விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனுடன் பயணப்படும் ரீத்து வர்மா, படபடவென்று பேசினாலும் அவருடைய பக்குவமான நடிப்பு பனிக்கட்டி போல் குளிர்ச்சியாக இருக்கிறது.

 

வீரா வேடத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் ஷிவாத்மிகா கண்களினால் பேசுவதோடு மட்டும் அல்லாமல் கவரவும் செய்கிறார். ஒரு வார்த்தை பேசினாலும் ஓராயிரம் வார்த்தைகள் பேசியது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கிறது அவரது பார்வை.

 

பிரபா வேடத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பத்தாயிரம் வாலா சரவெடி போல் வெடிப்பதோடு, நம்மை குலுங்க குலுங்க சிரிக்கவும் வைக்கிறது.

 

விது அய்யனாவின் ஒளிப்பதிவு அசோக் செல்வனுடன் நம்மையும் பயணிக்கும் அனுபவத்தை கொடுக்கிறது. அதிலும் மூன்று விதமான கதைகளுக்கும் வெவ்வேறு கலர் டோன்களை பயன்படுத்தியிருப்பதோடு, மூன்று விதமான லொக்கேஷன்களை தேர்வு செய்ததும், அவை ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் இருப்பதும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

 

கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகமாக இருந்தாலும், பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அமைந்திருக்கும் பின்னணி இசையும் சில இடங்களில் ஒரு கதாபாத்திரமாகவே பயணித்துள்ளது.

 

மெதுவாக நகரக்கூடிய திரைக்கதையை முடிந்தவரை விறுவிறுப்பாக நகர்த்த முயற்சித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆண்டனி. இருந்தாலும் சில இடங்களில் ஏற்படும் தொய்வை அவரால் தவிர்க்க முடியவில்லை.

 

சகிப்புத்தன்மை வாழ்க்கையில் முக்கியம் என்பதை வலியுறுத்தும் கதையை பலவித திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையோடு, சுவாரஸ்யமான காட்சிகளோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக்.

 

எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை என்பதை சொல்லும் ஒரு கதைக்கருவை கமர்ஷியலாக மட்டும் இன்றி கருத்து சொல்லும் படமாகவும் கொடுத்திருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக், தன்னால் முடிந்த அளவுக்கு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். இருந்தாலும் சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்துவிடுகிறது.

 

படத்தில் இடம்பெறும் மூன்று கதைகளும், காட்சிகளும் தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெளியான படங்களை நினைவு படுத்தினாலும், அந்த கதைகளின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிந்துக்கொள்வதில் அசோக் செல்வனை போல் படம் பார்ப்பவர்களுக்கும் அதீத ஆர்வம் ஏற்படுகிறது.

 

திரைக்கதை மெதுவாக நகர்வது, அப்படியே வேகம் எடுத்தாலும் அங்கே ஒரு பாடலை வைத்து வேகத்தடை போடுவது போன்றவை படத்தின் பலவீனமாக இருந்தாலும், அசோக் செல்வனின் நடிப்பு மற்றும் நாயகிகளின் கதாபாத்திர வடிவமைப்பு போன்றவை அந்த பவீனத்தை மறக்கடிக்க செய்துவிடுகிறது.

 

காதலை மையப்படுத்திய கதை தான் என்றாலும், அதை கமர்ஷியலாக மட்டுமே சொல்லாமல், மக்களுக்கு பல நல்ல விஷயங்களையும், வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படும் விஷயங்களையும் சொல்ல வேண்டும் என்று முயற்சித்திருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக்கை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

மொத்தத்தில், ‘நித்தம் ஒரு வானம்’ ஆழம்.

 

ரேட்டிங் 3/5