’எண்.6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ திரைப்பட விமர்சனம்
Casting : Sharath, Madhan Dakshinamoorthy, Aira, Kanja Karuppu, Naren, Ilayaraja.S, Muthu Veera,
Directed By : Se.Hari Uthra
Music By : AJ Alimirzaq
Produced By : Se.Hari Uthra, Dr.S.Preethi Shankar, R.Usha
கதையின் நாயகன் ஷரத் மற்றும் அவரது நண்பர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்களிடம் இருக்கும் கால்பாந்து விளையாட்டு திறமையை வைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது தான் அவர்களது லட்சியம். முன்னாள் கால்பந்தாட்ட வீரரான மதன் தட்சிணாமூர்த்தி, தனக்கு தெரிந்ததை ஏழை இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களின் நிலையை மாற்றும் பணியில் ஈடுபடுகிறார். இவரது பயிற்சியினால் ஷரத் மற்றும் அவரது நண்பர்கள் சிறப்பான கால்பந்தாட்ட வீரர்களாக உருவாவதோடு, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட தொடரில் விளையாடும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.
ஆனால், அவர்கள் முன்னேறுவதை விரும்பாத பணம் படைத்த ஆதிக்க வர்க்கம் முதலாளி, அவர்களின் முன்னேற்றத்திற்கு எதிராக சதி செய்கிறார். அதனால், நாயகன் ஷரத் மற்றும் அவரது நண்பர்களின் கனவு கானல் நீராகிவிடுகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இளைஞர்கள் அதிரடி முடிவு எடுக்க, அதன் பிறகு அவர்களது வாழ்க்கை மாறியதா?, இல்லையா? என்பதை சொல்வது தான் ‘எண்.6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’.
’தெரு நாய்கள்’, ‘கல்தா’, ‘வில்வித்தை’ என்று தனது ஒவ்வொரு படங்களிலும் சமூக பிரச்சனை பற்றி பேசும் இயக்குநர் ஹரி உத்ரா, இந்த முறையும் சமூக பிரச்சனையை கதையாக எடுத்துக்கொண்டு, அதை அனைத்து தரப்பினருக்குமான கமர்ஷியல் திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் புதுமுகம ஷரத், கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருப்பதோடு, எந்த இடத்திலும் தடுமாற்றம் இன்றி தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் நடித்து கவர்கிறார். கால்பந்தாட்ட போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடுபவர், தனது கனவு சிதைந்ததற்கு காரணமானவர்களை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போதும் அதே ஆக்ரோஷத்தோடு அமர்க்களப்படுத்துகிறார். காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்து காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கும் ஷரத், நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தன்னை நல்ல நடிகராக நிரூபிப்பார்.
நாயகியாக நடித்திருக்கும் அய்ராவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு பாடலில் வழக்கம் போல் தனது அழகான நடனத்தின் மூலமும், உடல் மொழி மூலமும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருக்கும் மதன் தட்சிணாமூர்த்தி, வழக்கம் போல் தனது சிறப்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் நரேன், கஞ்சா கருப்பு, இளையராஜா.எஸ், போலீஸாக நடித்திருக்கும் முத்து வீரா என மற்ற வேடங்களில் நடித்திருபவர்கள் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா, ஆரம்ப காட்சியிலேயே நம்மை கதையோடு ஒன்றிவிட செய்யும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படம் முழுவதையும் ஆக்ஷன் மனநிலையோடு பயணிக்க வைப்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். குறிப்பாக வெளிச்சம் குறைவான காட்சிகளை கூட மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பவர், நட்சத்திரங்களின் இயல்பான நடிப்பையும், அவர்களின் உணர்வுகளையும் ரசிகர்களிடத்தில் கடத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஜே.அலிமிர்ஸாக்கின் இசையில் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசைக்கு அதிக மெனக்கெட்டிருப்பவர் அளவாக கையாண்டு அசத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் கிஷோர்.எம், தனது பணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பல இடங்களில் ஒரே வசனம் திரும்ப திரும்ப வருவது போல் இருக்கும் காட்சிகளில் இரக்கம் இல்லாமல் கத்திரி போட்டிருந்தால் படம் இன்னும் வேகமாக பயணித்திருக்கும்.
ஆதிக்க முதலாளிகள் தங்களுக்கு கீழே இருப்பவர்களை முன்னேற்றம் அடையவிடாமல் எப்படி தடுக்கிறார்கள், அவர்களுடைய அரசியல் எங்கு, எப்படி எல்லாம் வேலை செய்கிறது, என்பதை விரிவாக பேசியிருப்பதோடு, விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியல் பற்றியும் அளவாக பேசியிருக்கும் இயக்குநர் செ.ஹரி உத்ரா, அதை நிறைவான கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.
நாயகனின் அதிரடியான காட்சி மூலம் படத்தின் துவக்கத்திலேயே நம்மை கதையோடு ஒன்றிவிட செய்துவிடும் இயக்குநர், அதன் பிறகு படம் முழுவதையும் பரபரப்பாக நகர்த்தி சென்றாலும், ஒரே வசனத்தை பலர் சொல்வது போல் வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் செயல்களை விட, வசனங்கள் சற்று அதிகமாக இருப்பது படத்தை சற்று தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், அந்த குறையை ரசிகர்கள் மறக்கும் விதத்தில் சண்டைக்காட்சிகள் மிக இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தனக்கு கிடைத்த சிறிய பட்ஜெட்டை வைத்துக்கொண்டு, மிகப்பெரிய ஆக்ஷன் படத்தை பார்த்த உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் ஹரி உத்ராவின், சிறப்பான மேக்கிங் பாராட்டும்படி இருக்கிறது.
மொத்தத்தில், ’எண்.6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ விறுவிறுப்பான விளையாட்டாக மட்டும் இன்றி வலி நிறைந்த மக்களின் வாழ்வியலை மிக இயல்பாகவும் சொல்லியிருக்கிறது.
ரேட்டிங் 3.5/5