'O2' விமர்சனம்
Casting : Nayanthra, RNR Manohar, Bharath Neelankandan, Murugadass, Rithivik
Directed By : GS Vignesh
Music By : Vishal Chandrasekar
Produced By : Dream Warier Picturesssssss - SR Prakash Babu and SR Prabhu
நயன்தாராவின் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் எப்போதும் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வாழ்ந்து வரும் அந்த குழந்தையின் சிகிச்சைக்காக கோயமுத்தூரில் இருந்து கொச்சிக்கு பேருந்து மூலம் நயன்தாரா செல்கிறார். அதே பேருந்தில் முன்னாள் எம்.எல்.ஏ, போலீஸ் அதிகாரி, காதலர்கள் உள்ளிட்ட பல பயணிகள் பயணிக்கிறார்கள். போகும் வழியில் திடீரென்று ஏற்படும் நிலச்சரிவில் பேருந்து சிக்கி மண்ணுக்குள் புதைந்து விடுகிறது. மூச்சு விட முடியாதபடி புதைந்த பேருந்துக்குள் இருக்கும் பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டார்களா இல்லையா, என்பதே படத்தின் கதை.
மிக வித்தியாசமான கதைக்களத்தை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பதால் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க முடிவதோடு, தொழில்நுட்ப ரீதியாகவும் படம் மிரட்டுகிறது.
முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாரா, தனது குழந்தைக்காக போராடும் காட்சிகளில் புலியாக நடித்திருப்பதோடு, தனது குழந்தையின் மீது காட்டும் அக்கறை, பாசம், பரிதவிப்பு என அனைத்து உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார்.
நயன்தாராவின் பிள்ளையாக நடித்திருக்கும் மாஸ்டர் ரித்விக் காட்சிகளை உணர்ந்து நடித்திருப்பதோடு, பல இடங்களில் தனது பாவமான முகத்தின் மூலமாகவே நம்மை கண் கலங்க வைக்கிறார்.
பரத் நீலகண்டன், ஆர்.என்.ஆர்.மனோகர், ஆடுகளம் முருகதாஸ் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிக்ரகளும் கதைக்களத்துக்கு ஏற்றவாறு உடல் மொழி மற்றும் முக பாவனைகள் மூலம் ரசிகர்களிடம் படபடப்பை ஏற்படுத்துகிறார்கள்.
விஷால் சந்திரசேகரின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக மண்ணுக்குள் புதைந்திருக்கும் பேருந்துக்குள் ஒலிக்கும் ஒசைகளை மிக துல்லியமாக பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே-வின் பணியும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ.அழகனின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய தூன். இப்படி ஒரு கதைக்களத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததில் ஒளிப்பதிவாளர் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். மண்ணுக்குள் சிக்கியிருக்கும் பேருந்தின்சூழ்நிலையும், அதில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் மனநிலை மற்றும் உடல்நிலையில் நேரம் போக போக ஏற்படக்கூடிய மாற்றத்தை லைட்டிங் மற்றும் கலர் டோன் மூலம் மிக சிறப்பாக காட்டியிருக்கிறார்.
உயிருக்காக போராடும் பயணிகளின் மனநிலை திடீரென்று மாற்றமடைந்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஸ்டண்ட் இயக்குநர் ஏ.எஸ்.சுதேஷ் குமார், கதையின் போக்கு மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார். இப்படி தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மற்றும் அவர்களது மெனக்கெடல் படம் முழுவதும் தெரிகிறது.
அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் எழுதி இயக்கியிருக்கிறார். மிக சவாலான கதைக்களத்திற்கு சாமர்த்தியமான திரைக்கதை அமைத்திருப்பவர், எந்த இடத்திலும் ரசிகர்களின் கவனம் சிதறாத வகையில் காட்சிகளை கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிலும் மண்ணுக்குள் புதைந்த பேருந்தில் நடக்கும் கதையை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லிய இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷையும், அவரது புதிய முயற்சியையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
மொத்தத்தில், 'O2' தமிழ் சினிமாவின் ஆக்ஸிஜனை அதிகரிக்கும்.
ரேட்டிங் 3.5/5