’ஓ மை கடவுளே’ விமர்சனம்
Casting : Ashok Selvan, Ritika Singh, Vani Bhojan, Vijay Sethupathi
Directed By : Ashwath Marimuthu
Music By : Leon James
Produced By : Dilli Babu, Ashok Selvan, Abhinaya Selvam
அசோக் செல்வன், ரித்திகா சிங், சாரா ஆகியோர் சிறு வயது முதலே நண்பர்களாக இருக்கிறார்கள். ஆண், பெண் பேதம் பார்க்காமல் பழக, ரித்திகா சிங் அசோக் செல்வனை திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார். அரை மனதாக ரித்திகா சிங்கின் விருப்பத்திற்கு ஓகே சொல்லும், அசோக் செல்வனின் வாழ்க்கையில் திருமணம் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதையும், நண்பர்கள் தம்பதி ஆனால், எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும் என்பதையும், உருக வைக்கும் காதலோடும், கலகலப்பான மோதலோடும் சொல்லியிருக்கிறார்கள்.
அசோக் செல்வன் படம் என்றால் நன்றாக இருக்கும், என்ற ரசிகர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் இந்த படமும் அமைந்திருக்கிறது. நண்பன், காதலன், கணவன் என்று அசோக் செல்வன் நடிப்பில் பலவித பரிணாமங்களை காட்டியிருந்தாலும், எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் இல்லாமல் அளவான நடிப்பின் மூலம் தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
தோழியாக இருக்கும் போது ஜாலியான பெண்ணாக இருக்கும் ரித்திகா சிங், மனைவியான பிறகு அசோக் செல்வனுக்கு கொடுக்கும் டார்ச்சர், மனைவிகளுக்கே உரித்தானது. தோழி மற்றும் மனைவி இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதை தனது நடிப்பின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் ரித்திகா சிங், தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜன், இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிறுக்கிறார். முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என்பதோடு, வாணி போஜனுக்கு பொருத்தமான வேடமாகவும் இருக்கிறது. அதே சமயம், முதிர்ச்சியானவராக தெரியும் வாணி போஜன், நடிப்பில் அந்த முதிர்ச்சியை காட்ட சற்று தவறியிருக்கிறார். இருந்தாலும், அக்கா என்று அவரை அழைத்து, சமன் செய்துவிடுகிறார்கள்.
மாடர்ன் கடவுளாக வரும் விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் ஆகியோரது கதாப்பாத்திரங்கள் மூலம் மக்களுக்கு நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்.
சாரா, எம்.எஸ்.பாஸ்கர், கஜராஜ் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
லியோ ஜேம்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவும், பின்னணி இசை ரசிக்கும் ரகமாகவும் இருக்கிறது. விது அய்யனாரின் ஒளிப்பதிவு கதையோடு பயணிப்பதோடு, கலர் புல்லாகவும் இருக்கிறது.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இரண்டாவது சான்ஸ் கிடைத்தால் என்னவாகும், என்ற கற்பனையை, நேர்த்தியான திரைக்கதையோடும், சுவாரஸ்யமான காட்சிகளோடும் படமாக்கியிருக்கும் இயக்குநர் அஷ்வத், காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் கொடுத்திருக்கிறார்.
மாடர்ன் கடவுள், இரண்டாவது வாய்ப்பு போன்றவை வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும், சில இடங்களில் சற்று குழப்பம் ஏற்படுத்துவது போல இருக்கிறது. ஆனால், அதை நடிகர்களின் நடிப்பும், கதாப்பாத்திரமும் சரிகட்டிவிடுகிறது.
மொத்தத்தில், காதலர்கள் மட்டும் இன்றி, அனைத்து தரப்பினரும் கொண்டாடக்கூடிய, காதல் படமாகவும், உறவுகளின் உண்ணதத்தை உணர்த்தும் படமாகவும் ‘ஓ மை கடவுளே’ இருக்கிறது.
ரேட்டிங் 3.5/5