Feb 23, 2023 12:59 AM

’ஓம் வெள்ளிமலை’ திரைப்பட விமர்சனம்

581fd06438cf9dd6bbbf1befc3e71b20.jpg

Casting : Super Good Subramani, Veerasubash, Anju Krishna, Giriraj, Vijayakumar, Charles Pandiyan, Kaviraj, Pazhanisamy

Directed By : Om Vijay

Music By : NR Raghunanthan

Produced By : Superb Creations - Rajagopal Elangovan

 

வெள்ளிமலை என்ற மலை கிராம மக்கள், அந்த ஊரில் இருக்கும் நாட்டு வைத்தியர் சுப்பிரமணியிடம் வைத்தியம் பார்க்க மறுப்பதோடு, அவரது மருந்தை கிண்டல் செய்து அவரை அவமானப்படுத்துகிறார்கள். அதையெல்லாம் சகித்துக்கொள்ளும் சுப்பிரமணி என்றாவது ஒரு நாள் மக்கள் தனது  வைத்தியத்தின் மதிப்பை புரிந்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அந்த ஊரில் தனது வைத்தியத்தை தொடர்கிறார்.

 

இதற்கிடையே அந்த கிராம மக்கள் விநோத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் ஒருவர் சுப்பிரமணியிடம் சிகிச்சை பெற்று குணமடைந்துவிடுகிறார். இதனால், ஒட்டு மொத்த கிராம மக்களும் தங்களை காப்பாற்றுமாறு வைத்தியர் சுப்பிரமணியிடம் தஞ்சம் அடைய, அவரோ தன்னிடம் நோய்க்கான மருந்து இல்லை என்று சொல்வதோடு, மருந்து தயாரிக்கும் மூலிகையை தேடி மலை உச்சிக்கு மக்களை அழைத்து செல்கிறார்.  அங்கு சென்றவுடன், மருந்து தயாரிக்கும் மூலிகை எது என்பது தனக்கு தெரியாது என்றும், நோயால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தியது தான் இல்லை என்று சொல்லி மக்களை அதிர்ச்சியடிஅய செய்கிறார். அவர், ஏன் அப்படி சொன்னார்?, நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் ‘வெள்ளிமலை’ படத்தின் மீதிக்கதை.

 

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணி, இதில் கதையின் நாயகனாக நாட்டு வைத்தியர் அகஸ்தியர் என்ற வேடத்தில் பொறுப்புடன் நடித்திருக்கிறார். கதையின் நாயகன் என்பதால் நடிப்பில் வித்தியாசத்தையும், வேறுபாட்டையும் காட்டுகிறேன் என்ற பெயரில் ஓவராக நடிக்காமல், எப்போதும் போல் தனது வழக்கமான பாணியில் நடித்திருக்கும் சுப்பிரமணி, இயக்குநர் சொல்வதை தட்டாமல் செய்திருக்கிறார் என்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது.

 

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் வீரசுபாஷ், கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்.

 

சுப்பிரமணியின் மகளாக நடித்திருக்கும் அறிமுக நடிகை அஞ்சு கிருஷ்ணா, வசன உச்சரிப்பு, நடிப்பு, உடல் மொழி, தோற்றம் என்று அனைத்திலும் மலை கிராம பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். 

 

கிரிராஜ், விஜயகுமார், சார்லஸ் பாண்டியன், கவிராஜ், பழனிச்சாமி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரையில் பார்க்காதவர்கள் என்றாலும், இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் மணிபெருமாள் காடு மலைகளை பலவற்றை கடந்து கடுமையாக உழைத்திருப்பது காட்சிகளில் தெரிகிறது. பசுமை நிறைந்த வனம், பழமை மாறாத வீடுகள் நிறைந்த கிராம் என்று கதைக்களத்தை இயல்பாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார்.

 

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருப்பதோடு, வரிகள் அனைத்தும் தெளிவாக புரிகிறது. பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

கலை இயக்குநர் மாயப்பாண்டியன் கைவண்ணத்தில் வெள்ளிமலை கிராமம் இயற்கையா அல்லது செயற்கையா என்று கண்டுபிடிக்க முடியாதபடி இருக்கிறது. படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யாவின் பணியும் நேர்த்தி.

 

நாட்டு வைத்தியத்தின் அதிசயத்தையும், அவசியத்தையும் மக்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லும் முயற்சியாக இப்படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கும் ஓம் விஜய், பல இடங்களில் நாட்டு வைத்தியத்தை காட்டிலும் ஆன்மீகத்தின் மகிமையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

தான் சொல்ல வந்த விஷயத்தை சுறுக்கமாக சொன்னதோடு, எதிர்பாரத திருப்புமுனையை வைத்து அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடும் கதையை நகர்த்தி செல்லும் இயக்குநர் ஓம் விஜய், அறிமுக நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், காட்சிகளை படமாக்கிய விதம் அனைத்தும் மிக இயல்பாக இருப்பதோடு, நம்மையும் வெள்ளிமலை கிராமத்தில் பயணிக்க வைத்து, படத்தையும் ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘வெள்ளிமலை’ மக்களின் மனதை வெல்லும்.

 

3/5