‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ விமர்சனம்
Casting : Vishwanth, Riythvika, A.Venkatesh, Aadams, Vijay Krishnaraj, Nidhya Ravindar
Directed By : J.P.R
Music By : Adheesh Uthreeyan
Produced By : S Bioscope Production
குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள திகில் படமான ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ படம் எப்படி என்பதை பார்ப்போம்.
வேலை இல்லாமல் இருக்கும் மூன்று இளைஞர்கள் சீக்கிரமாக பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை. அவை அனைத்திற்கும் காரணம் பணம். இவர்களுடன் வயதில் மூத்தவரும் ஒருவர் சேர்ந்துக்கொள்ள அவருக்கும் பணம் தேவையாக இருப்பதால், இந்த நான்கு பேரும் சேர்ந்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள்.
அதன்படி, இந்த நான்கு பேர்களில் ஒருவரான விஸ்வந்த் தனது சொந்த அக்கா மகளை கடத்தி அவர்களிடம் பணம் பறிக்க திட்டமிடுபவர், இதில் தான் இருப்பது போல காட்டிக்கொள்ளாமல் தனது நண்பர்கள் மூலம் குழந்தையை கடத்தி தனது அக்கா, மாமாவிடம் பல கோடிகளை பறிக்கிறார். பணத்தை வாங்கிக்கொள்பவர்கள் குழந்தையை விட்டுவிடலாம் என்று நினைக்கும் போது, குழந்தை நான்கு பேரையும் பார்த்துவிடுகிறது. இதனால் எங்கே மாட்டிக்கொள்வோமோ, என்ற பயத்தில் குழந்தையை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். ஆனால், விஸ்வந்தோ தனது அக்காவுக்கு ஒரே குழந்தை என்பதால், அவரை கொலை செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். ”குழந்தையை விட்டுவிடுங்கள்...” என்ற பெண் குரலும் அந்த வீட்டில் அவ்வபோது கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, விஸ்வந்தின் நண்பர்கள் குழந்தையை கொலை செய்ய வேண்டும் என்ற முடிவில் இருப்பதோடு, இதற்கு தடையாக இருக்கும் விஸ்வந்தையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். மறுபுறம் பணத்தை கொடுத்துவிட்டு குழந்தைக்காக காத்திருக்கும் பெற்றோர்கள் தனது குழந்தைக்காக தங்களது சொத்தே அழிந்தாலும் பரவாயில்லை என்ற முடிவில் இருக்க, கடத்தல்காரர்கள் குழந்தைகளை விடுவித்தார்களா, இல்லையா, அந்த பெண் குரல் யார், அவருக்கும் இந்த நான்கு பேருக்கும் என்ன சம்மந்தம் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
திகில் படமாக இருந்தாலும், அதில் குழந்தை கடத்தல் பற்றி சொல்லியிருக்கும் இயக்குநர், பிள்ளைகளை பறிகொடுக்கும் பெற்றோர்களின் வலி எப்படி இருக்கும் என்பதை ரொம்ப அழுத்தமாக காட்டியிருக்கிறார்.
குழந்தையை கடத்தும் விஸ்வந்த், ஆடம்ஸ், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கேஸியான் என நான்கு பேரும் தங்களது நடிப்பால் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்கள். பணத்திற்காக பெண் ஒருவரை கொலை செய்யும் விஸ்வந்த், அதே பணத்திற்காக தனது அக்கா குழந்தையை கடத்தினாலும், அவரை கொலை செய்ய மற்ற மூவரும் திட்டமிடும் போது, தான் தவறு செய்ததை உணர்ந்து, கதறி அழும் காட்சியில், நம்மையும் கண் கலங்க வைக்கிறார். ‘அட்ட கத்தி’, ‘கபாலி’ ஆகிய படங்களில் சிறு வேடத்தில் நடித்து கவர்ந்தவர், இந்த படத்தில் வில்லத்தனம் கலந்த முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இளைஞர்களுடன் சேர்ந்து கும்மாளம் போடும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், வெகுளித்தனமான தனது கதாபாத்திரத்தை பணத்திற்காக மாற்றிக் கொள்ளும் காட்சியில் சபாஷ் வாங்குகிறார். அதேபோல், ஆடம்ஸ், கேஸியான் ஆகியோரும் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
கடத்தப்படும் குழந்தையின் பெற்றோர்களான நித்யா ரவீந்தரும், விஜய் கிருஷ்ணராஜும், குழந்தையை பறிக்கொடுத்த பெற்றோர்களின் வேதனையையும், வலியையும் நம் கண் முன் நிறுத்துகிறார்கள். குழந்தை நட்சத்திரமான பேபி அம்ருதாவுக்கும், ரித்விகாவுக்கும் சிறு வேடம் தான் என்றாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடமாக உள்ளது.
மகேஷ், கே.தேவின் ஒளிப்பதிவும் ஆதிஷ் உத்ரியனின் இசையும் திரைக்கதைக்கு ஏற்ப இருந்தாலும், திகில் படத்திற்கான பணியை செய்ய தவற விட்டிருக்கிறது.
திரைக்கதையில் திகில் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் என்னவோ குழந்தை கடத்தலும், அதனால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் வலியும் தான் பெவிகால் போட்டது போல ஒட்டிக்கொள்கிறது.
பேயாக வரும் ரித்விகாவை பார்த்து ரசிகர்கள் பயப்படுவதை காட்டிலும் சிரிக்க தான் செய்கிறார்கள். காரணம், அவருக்கு போடப்பட்ட பேய் மேக்கப் மற்றும் பயம் காட்டும் இடங்களில் அவர் நடித்த விதம் தான்.
தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்டுக்கு ஏற்றபடி குழந்தை கடத்தலை, திகில் படமாக திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஜே.பி.ஆர், திகில் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தாதது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. இருந்தாலும், பணத்திற்காக மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள், என்பதை அந்த நான்கு பேரது கதாபாத்திரம் மூலமாக ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஜே.பி.ஆர், இறுதியில் நல்ல மெசஜையும் சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், திகில் குறைவாக இருந்தாலும், குழந்தை கடத்தல் சம்பவமும், அதை சுற்றி சொல்லப்பட்டிருக்கும் கதையும் ரசிகர்களை பாதிப்பதோடு, இதுபோன்ற ஓநாய்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கையும் செய்கிறது இந்த ‘ஒநாய்கள் ஜாக்கிரதை’.
ஜெ.சுகுமார்