‘ஒரு குப்பைக் கதை’ விமர்சனம்
Casting : Dinesh, Manisha Yadaw, Yogi Babu
Directed By : Kaali Rangasamy
Music By : Joshwa Sridhar
Produced By : Director Mohammed Aslam
பிரபல நடன இயக்குநர் தினேஷ், ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ‘ஒரு குப்பைக் கதை’ பட தலைப்பு ஏற்படுத்தியிருக்கும் ஈர்ப்பு, படமும் ஏற்படுத்துகிறதா? என்பதை பார்ப்போம்.
சென்னை குடிசைப் பகுதியில் வாழும் ஹீரோ தினேஷ் குப்பை அள்ளும் வேலை செய்து வருகிறார். அவர் வேலையை பற்றி பலர் கேவலமாக பேசினாலும், அவரோ தனது வேலையை பெருமையாக பேசுவதோடு, அந்த வேலையை நேசித்து செய்கிறார். அந்த வேலை காரணமாக தினேஷுக்கு பலர் பெண் கொடுக்கவும் மறுக்கிறார்கள். இதனால், மனிஷா யாதவை பெண் பார்க்க செல்லும் போது புரோக்கர் தினேஷ் கிளர்க் வேலை செய்வதாக பொய் சொல்லிவிடுகிறார். ஆனால், உண்மையை மறைக்க விரும்பாத தினேஷ், மனிஷா யாதவின் அப்பாவிடம் தனது வேலை குறித்த உண்மையை சொல்லிவிடுகிறார். தினேஷின் நேர்மைக்காக மனிஷாவை திருமணம் செய்துகொடுக்க அவரது தந்தை சம்மதித்தாலும், தனது பெண்ணிடம் தினேஷ் குப்பை அள்ளும் வேலை செய்வதை மறைத்துவிடுகிறார்.
கிளர்க் மாப்பிள்ளை, சென்னை வாழ்க்கை என்று பல கனவுகளோடு தினேஷை திருமணம் செய்துக் கொண்டு சென்னைக்கு வரும் மனிஷாவுக்கு அவர் வாழும் இடத்தைப் பார்த்ததுமே பெரிய அதிர்ச்சி. கூவம் ஓரோம், கொசுக்கடி, அசுத்தமான இடத்தில் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாலும், தனது கணவருக்காக சகித்துக்கொண்டு வாழ்ந்து வரும் அவர், தினேஷ் குப்பை அள்ளும் வேலை செய்வதை பார்த்துவிடுகிறார். இதனால் அவர் தினேஷ் மீது கோபம் கொண்டாலும், கர்ப்பமாக இருப்பதால், அவருடன் வாழ்ந்து வருகிறார். குழந்தை பிறந்ததும் தனது அம்மா வீட்டில் இருந்து வர மறுக்கும் மனிஷா யாதவ், தனது குழந்தையை அந்த இடத்தில் வளர்க்க மாட்டேன், என்று கூறிவிடுகிறார். இதனால் தினேஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடியேறுகிறார்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மீது மனிஷாவுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ளும் அந்த இளைஞர் மனிஷாவையும், குழந்தையையும் அழைத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவதோடு, அவரை வைத்து குடும்பமும் நடத்த தொடங்குகிறார். மனைவி ஓடிவிட்டதால் மதுவுக்கு அடிமையாகும் தினேஷ், தனது மனைவியை கண்டுபிடித்தாரா இல்லையா, கணவனை கழட்டிவிட்டு ஓடிய மனிஷாவின் வாழ்க்கை என்னவானது, என்பது தான் ‘ஒரு குப்பைக் கதை’ படத்தின் மீதிக் கதை.
கள்ளக்காதல், அதனால் நடக்கும் கொலைகள் என்று நாம் தினமும் படிக்கும் செய்திக்கு பின்னால் இருக்கும், சம்மந்தப்பட்டவர்களின் வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் எந்தவித சினிமாத்தனமும் இன்றி எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி.
பல கனவுகளோடு இல்லற வாழ்வில் இணையும், ஆணும் பெண்ணும் அந்த கனவு வாழ்க்கை கிடைக்கவில்லை என்றால், எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழகியலோடு சொல்லியிருக்கும் இயக்குநர், டீசண்டாக இருப்பவர்கள் மனதில் எந்த அளவுக்கு குப்பைகள் இருக்கிறது என்பதையும், சாதாரண எளிய மக்களின் வாழும் சூசல் அசுத்தமாக இருந்தாலும், அவர்களதும் எப்படி சுத்தமாக இருக்கிறது என்பதையும் ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
ஹீரோவாக அறிமுகமாகியுள்ள நடன இயக்குநர் தினேஷ், கதையின் நாயகனாக கச்சிதமாக பொருந்தியிக்கிறார். பெரிய நடன இயக்குநர் என்ற பிம்பத்தை எந்த இடத்திலும் பிரதிபலிக்காமல், குமார் என்ற சென்னை குடிசைப் பகுதி இளைஞராக அவர் இயல்பாக நடித்திருக்கிறார். தனது மனைவியை நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்று அவர் நினைப்பதும், அதே மனைவி தன்னை உதாசினப்படுத்தினாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு போகும் காட்சியில் அவரது வெகுளித்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. உடை, டயலாக் டெலிவரி என்று எதிலுமே ஓவர் டோஸ் இல்லாமல் அனைத்துக் காட்சிகளிலும் இயல்பாகவே இருக்கும் தினேஷின் நடிப்புக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுக்கலாம்.
ஹீரோவைக் காட்டிலும் ஹீரோயினுக்கு தான் இந்த படத்தில் மிகப்பெரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை ரொம்ப நன்றாகவே புரிந்து நடித்திருக்கிறார் மனிஷா யாதவ். அவர் இதுவரை நடித்தப் படங்களிலேயே அவரது பெஸ்ட் பர்பாமன்ஸ் என்று சொல்லும் அளவுக்கு படம் முழுவதுமே அம்மணி அசத்தி விடுகிறார். கணவனை விட்டுவிட்டு வேறு ஒரு இளைஞரோடு ஓடும் மனிஷா மீது ரசிகர்கள் பெரும் கோபம் கொண்டாலும், அதே மனிஷா, இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த ரசிகர்களின் அனுதாபத்தையும் பெற்றுவிடுகிறார். உடையில் மாடர்னாக மாறினாலும், அதே கிராமத்து பேச்சு, எதிர்ப்பார்ப்பு என்று அனைத்தையும் தனது நடிப்பாலும், உடல் மொழியாலும் வெளிக்காட்டியிருக்கும் மனிஷாவின் நடிப்புக்கு விருது நிச்சயம்.
காட்சிகளுக்கு ஒப்பணை செய்வதை தவிர்த்துவிட்டு, சென்னை குடிசைப் பகுதிகளின் ஒரிஜினாலிட்டையை டீட்டய்லாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. வார்த்தைக்கு கூட செட் என்பதை பயன்படுத்தாமல், முழு படத்தையும் ஒரிஜினல் லொக்கேஷன்களில் மட்டுமே படமாக்கியிருக்கும் மகேஷ் முத்துசாமியின் கேமராவும் படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே வலம் வருகிறது. ஹீரோ டான்ஸ் மாஸ்டர் தானே என்று குத்து பாட்டு ஒன்றை சொருகாமல் கதைக்கு ஏற்ற பாடல்களை மட்டுமே கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதரின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
சினிமாவை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும், என்று கூறிக்கொண்டு கண்ட கண்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவை அழிக்க நினைக்கும் சில இயக்குநர்களின் தலையில் கொட்டுவதை போல, இயக்குநர் காளி ரங்கசாமி மனிதர்களின் வாழ்வியலை திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.
கணவனை விட்டு வேறு ஒருவரனோடு ஒரு பெண் ஓடிவிடுகிறாள் என்பதால் அந்த பெண் குற்றவாளியல்ல, என்று இப்படத்தில் சொல்லியிருக்கும் இயக்குநர், அதே சமயம், அப்படி போகும் பெண்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படும் என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். மனிஷாவை குற்றவாளியாக காண்பித்தாலும், அவர் தரப்பு நியாயத்தையும் ரசிகர்கள் புரிந்துக்கொள்ளும் விதத்தில் அவரது கதாபாத்திரத்தையும், படத்தின் காட்சிகளையும் நகர்த்திய விதத்திற்காகவும் இயக்குநரை தனியாக பாராட்டலாம்.
படத்தின் ஓபனிங்கிலேயே ஒருத்தன கொலை பண்ணிட்டேன் என்று காவல் நிலையத்தில் சரண்டராகும் தினேஷ், நினைத்து பார்ப்பது போல படம் தொடங்க, கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் தினேஷ் யாரை கொலை செய்திருப்பார், என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும், தினேஷின் கதாபாத்திர தன்மை, இது தான் நடந்திருக்கும் என்று ரசிகர்களை யூகித்துவிட வைப்பது தான் படத்தின் குட்டி சறுக்கலாக இருந்தாலும், இதுபோன்ற சூழலை ஆண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மெசஜை சொல்வதால் அதை கண்டுக்காமல் இருக்கலாம்.
காமெடியனாகவே மட்டுமே பார்க்கப்பட்ட யோகி பாபு, இந்த படத்தில் தனது நக்கல் வசனங்களை அளந்து பேசியிருப்பதோடு, ஒரு கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.
இப்படி ஒரு பகுதி சென்னையில் இருக்கிறது, இப்படியும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது என்ற பின்னணியில், சமூகத்தில் நடக்கும் பிரச்சினையை பற்றியும், அதன் பின்னணி பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் காளி ரங்கசாமி, காட்சி மற்றும் வசனங்களில் நேர்மையை கடைப்பிடித்து ரசிகர்களுக்கு பாடம் எடுத்திருப்பதோடு, அது மனதில் அழுத்தமாக பதியும் விதத்திலான திரைப்படமாகவும் கொடுத்திருக்கிறார்.
சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட, இந்த படத்தை ஒரு முறை பார்த்துவிட வேண்டும், என்று சொல்லும் விதத்தில் இருக்கும் இந்த ‘ஒரு குப்பைக் கதை’ கோபுரத்தில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய படமே.
ஜெ.சுகுமார்