Feb 02, 2018 04:44 PM

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

70f2253e866295c3b1cfdaadc94ab70d.jpg

Casting : Vijay Sethupathi, Gautham Karthik, Niharika Konidela, Gayathrie Shankar

Directed By : Arumuga Kumar

Music By : Justin Prabhakaran

Produced By : Ganesh Kalimuthu, Ramesh Kalimuthu, Arumuga Kumar

 

விஜய் சேதுபதி படமா! நம்பி போகலாம், என்று ரசிகர்கள் கருதும் அளவுக்கு விஜய் சேதுபதியின் படங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கான படமாக இருக்க, இந்த ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

ஆந்திர மாநிலத்தில் எமசிங்கபுரம் என்ற கிராமம் இருக்கிறது. திருடுவது தான் இவர்களது குலத்தொழில், எமன் தான் இவர்களது குலதெய்வம். இந்த ஊரில் உள்ள முக்கியமானவரான விஜய் சேதுபதி, தனது கூட்டாளிகளுடன் திருடுவதற்காக சென்னைக்கு வர, அங்கே ஒரு வீட்டில் நிகாரிகாவின் புகைப்படத்தைப் பார்த்து, தனது மனைவி என்று கூறுவதோடு, அவரை கடத்தி திருமணம் செய்துக்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.

 

கல்லூரி மாணவியான நிகாரிகாவுக்கும், சக கல்லூரி மாணவரான கவுதம் கார்த்திக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. ஆனால், இருவரும் தங்களது காதலை சொல்ல ஒரு நல்லநாள் பார்த்துக்கொண்டிருக்க, அந்த இடைவெளியில் விஜய் சேதுபதி நிகாரிகாவை எமசிங்கபுரத்திற்கு கடத்திச் சென்றுவிடுகிறார். அவரை தேடி அதே ஊருக்கு கெளதம் கார்த்திக் செல்கிறார். நிகாரிகாவின் பெற்றோர் சம்மதத்தோடு, எமசிங்கபுரத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்க, அப்போது  எண்ட்ரியாகும் கெளதம் கார்த்திக்கை காவு கொடுக்கும்படி விஜய் சேதுபதி உத்தரவிட, அதில் இருந்து கெளதம் கார்த்திக் தப்பித்தாரா இல்லையா, விஜய் சேதுபதியின் திருமணம் நடந்ததா இல்லையா, என்பது ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தின் கதையாக இருந்தாலும், விஜய் சேதுபதி நிகாரிகாவை மனைவி என்று கூறுவதற்கான பின்னணி என்ன என்பதையும் காமெடியாக சொல்லியிருக்கிறார்கள்.

 

சாதாரண கதையை காமெடியாக மட்டும் இன்றி, வித்தியாசமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் ஆறுமுக குமார், படம் முழுவதும் ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

 

சாதாரண காட்சியை கூட தனது நடிப்பால் சக்கரைக்கட்டியாக இனிக்கச் செய்யும் விஜய் சேதுபதி, இந்த படத்திலும் பல இடங்களில் நமக்கு சக்கரைக்கட்டிகளை வாரி இறைக்கிறார். மாஸ் ஹீரோவாகவும், கிளாஸ் ஹீரோவாகவும் நிரூபித்த பிறகும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகராக வந்து சக நடிகர்களுக்கு வழிவிட்டிருக்கும் விஜய் சேதுபதியின் தனி வழியில் சிவப்பு கம்ப்பளம் விரிக்கலாம்.

 

படத்தின் விளம்பரங்களில் சின்னதாக இடம்பெற்றிருக்கும் கெளதம் கார்த்திக், தனது கதாபாத்திரத்தை கையாண்ட விதத்தாலும், அதில் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் பெரிய அளவில் இடம்பிடித்திருக்கிறார். இதுவரை கெளதம் கார்த்திக் நடித்த படங்களிலேயே பெஸ்ட் என்றால் இந்த படமாகத் தான் இருக்கும். அவர் உடை, அவர் அணியும் கலர் கலர் கண்ணாடி, அவர் பேசும் வசனங்கள், அவர் செய்யும் காமெடி என்று ரசிகர்கள் கெளதம் கார்த்திக்கை இன்ஞ் இன்ஞ்ஞாக ரசிக்கிறார்கள். சில இடங்களில் விஜய் சேதுபதியை கூட ஓவர் டேக் செய்யும் அளவுக்கு கெளதம் கார்த்திக் - டேனியல் காம்பினேஷன் காட்சிகள் உள்ளன.

 

ஹீரோயினாக நடித்துள்ள நிகாரிகாவும் தனது பங்குக்கு விஜய் சேதுபதி, கெளதமுடன் போட்டி போட்டு நடிக்க, சின்ன வேடமாக இருந்தாலும் காயத்ரி கவனிக்க வைக்கிறார். விஜய் சேதுபதியின் வடது, இடது என்று இருக்கும் ரமேஷ் திலக் உள்ளிட்ட அனைவரும் தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

பாடல்களில் வார்த்தைகள் புரியாதபடி சில இடங்களில் இசை ஓவர் டேக் செய்தாலும், பின்னணி இசை மூலம் ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு கதாபாத்திரமாகவே பயணித்துள்ளது. கலை இயக்குநர் மற்றும் உடை வடிவமைப்பாளர் ஆகிய இருவரும் படத்தை வேறு ஒரு லெவலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

 

‘சூது கவ்வும்’ பாணியில் ஒரு கான்சப்ட்டை கையில் எடுத்து, அதற்கு வேறு விதத்தில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஆறுமுக குமார், ஆரம்பத்திலே நம்மை சிரிக்க வைத்துவிடுவதோடு, கெளதம் கார்த்திக்கின் எண்ட்ரி மற்றும் அதை தொடர்ந்து வரும் அடுத்தடுத்த காட்சிகள் என்று நம்மை சிரிப்பு மழையில் நனைத்துவிடுகிறார். விஜய் சேதுபதியின் நண்பர், ஆம்லெட்டை திருட, அதற்கு கெளதம் கார்த்திக் விஜய் சேதுபதியை அடித்தவுடன், அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன், ஒட்டு மொத்த திரையரங்கையே அதிரும் வகையில் சிரிக்க வைக்கிறது.

 

இப்படி படம் முழுவதும் ஒரே சிரிப்பு வெடியாக இருக்க, இரண்டாம் பாதியில் மொத்த படத்தின் கலரே மாறிவிட, காட்சியிலும், கதாபாத்திரங்களின் தோற்றத்திலும் வித்தியாசத்தைக் காட்டும் இயக்குநர், விஜய் சேதுபதிக்கும், நிகாரிகாவுக்கும் இடையே என்ன இருக்கிறது, என்ற சுவாரஸ்யத்தால் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி, இறுதியில் அதையும் சிரிப்பு மத்தாப்பூவாக மாற்றிவிடுகிறார்.

 

மொத்தத்தில், விஜய் சேதுபதி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எந்தவிதத்திலும் பங்கம் ஏற்படாத வகையில் இருக்கும் இந்த ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ கெளதம் கார்த்திக்கின் திறமையை பளிச்சிட வைத்துள்ளது.

 

ஜெ.சுகுமார்