Jan 04, 2020 10:21 AM

‘பச்சை விளக்கு’ விமர்சனம்

db8b3d2c20333c9c007337cbe54b32bb.jpg

Casting : Dr.Maran, Theesha, Sri Mahesh, Imman Annachi

Directed By : Dr.Maran

Music By : 'Vedam Puthithu' Devanthiran

Produced By : DigiThing Media Works - Manimekalai

 

டிஜிதிங் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் மணிமேகலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மாறன் எழுத்து, இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘பச்சை விளக்கு’ எப்படி, என்பதை பார்ப்போம்.

 

பாதுகாப்பு இல்லாத பயணமும், முறையற்ற காதலும் வாழ்க்கையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பது தான்படத்தின் கதை. சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இப்படம், சில தவறான ஆண்களின் போலியான காதல் வலையில் சிக்கி பெண்களின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது, என்பதை எச்சரிக்கையாவும் சொல்லியிருக்கிறது.

 

ஹீரோவாக நடித்திருக்கும் மாறன், தான் படத்தை எழுதி இயக்கியும் இருக்கிறார். படத்தில் பேராசிரியர் வேடத்தில் நடித்திருக்கும் மாறன், உண்மையிலேயே பேராசிரியர் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். இப்படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் மாறன், சாலை பாதுகாப்பு குறித்து படத்தில் சொல்லியிருக்கும் அத்தனை விஷயங்களையும் மக்கள் நிச்சயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

 

அறிமுக ஹீரோயின் தீஷா, வில்லனாக நடித்திருக்கும் ஸ்ரீமகேஷ், இமான் அண்ணாச்சி என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

குறிப்பாக நான்கு வழிச்சாலைகளில் இடது புறம் இருக்கும் லைனில் வாகனங்கள் போக கூடாது, அந்த லைன் எதற்காக, உள்ளிட்ட பெரும்பாலன மக்கள் அறியாத போக்குவரத்து விதிமுறைகள் பற்றி எடுத்துரைத்த விதம் பயன் உள்ளதாக இருக்கிறது. அதே போல், காதல் என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலின் மிரட்டலுக்கு பயப்படாமல், உண்மையை வெளி உலகத்திற்கு சொல்ல வேண்டும், என்று மற்றொரு தளத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் மாறன், நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான ஒரு படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

 

’வேதம் புதிது’ தேவேந்திரனின் இசையும், பாலாஜியின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

இப்படத்தை வழக்கமான திரைப்படமாக பார்த்தால் ஏகப்பட்ட குறைகள் கண்ணுக்கு தெரியும். ஆனால், ஒரு விழிப்புணர்வு பாடமாக பார்த்தால், இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும், என்பது புரியும்.

 

மொத்தத்தில், இந்த ‘பச்சை விளக்கு’ படத்தை சாலையில் பயணிப்பவர்களும், காதலில் விழ இருப்பவர்களும் ஒரு முறை பார்ப்பது அவர்களது வாழ்க்கைக்கு நல்லது.

 

ரேட்டிங் 2.5/5