படை வீரன் விமர்சனம்
Casting : Vijay Yesudas, Bharathiraja, Akhil, Amritha
Directed By : Dhana
Music By : Karthik Raja
Produced By : Madhivanan
மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்குநராகவும், பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ள ‘படை வீரன்’ எப்படி என்பதை பார்ப்போம்.
வேலைக்கு போகாமல் வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் ஹீரோ விஜய் யேசுதாஸ், தனது உறவுக்கார பெண்ணான ஹீரோயின் அம்ரிதாவை காதலித்து வர, திடீரென்று அவருக்கு போலீஸ் வேலை மீது ஆர்வம் வருகிறது. அதற்காக தனது உறவுக்காரரான முன்னாள் ராணுவ வீரரான பாரதிராஜாவிடம் உதவி கேட்க, அவரும் பணத்தை செலவு செய்து, விஜய் யேசுதாசை போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற வைத்துவிடுகிறார். பிறகு பயிற்சியில் எப்படியோ பாஸ் ஆகி போலீஸ் யூனிபார்மை போடும் விஜய் யேசுதாஸுக்கு முதல் பணியே தனது ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் இடையே ஏற்படும் ஜாதி கலவரத்தை கட்டுப்படுத்தும் பணி கொடுக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் தான் ஒரு போலீஸ் என்பதை மறந்து தனது ஊருக்காக கலவரத்தில் இறங்கும் விஜய் யேசுதாஸ், பிறகு தனது கடமையை உணர்ந்து இரண்டு ஊர்களுக்கு இடையே நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும்போது, அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட, அந்த ஆபத்தை முறியடித்து கலவரத்தை கட்டுப்படுத்தினாரா இல்லையா, என்பது தான் ‘படை வீரன்’ படத்தின் கதை.
நடிகராக வில்லன் வேடத்தில் ரசிகர்களிடம் பாராட்டு பெற்ற விஜய் யேசுதாஸ், ஹீரோவாக இப்படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அறிமுக படமே, தென் மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட படம் என்பதால் மனுஷன் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். படத்தின் முதல் பாதியில் வெட்டியாய் ஊர் சுற்றிக்கொண்டு ஆட்டம் பாட்டம் என்று ஜாலியாக சுற்றும் இளைஞராகவும், இரண்டாம் பாதியில் கடமையை உணர்ந்த காவலராகவும் நடிப்பில் விஜய் யேசுதாஸ் வேறுபாட்டை காட்டியிருந்தாலும், தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தோல்வியடைந்து விட்டார். விஜய் யேசுதாஸின் உழைப்பு காட்சிக்கு காட்சி திரையில் பளிச்சிட்டாலும், அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள ரசிகர்களின் மனம் தயங்குகிறது. காரணம், தென் மாவட்ட ஸ்லாங்கை அவர் பேசிய விதம் தான்.
அறிமுக நாயகி அம்ரிதா தேனி மாவட்டத்து பெண்ணாக கதாபாத்திரத்தில் துணிச்சலையும், நடிப்பில் துள்ளலையும் வெளிப்படுத்தியிருப்பவர், காதல் காட்சிகளில் அழகை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துவிடுகிறார்.
முன்னாள் ராணுவ வீரராக நடித்துள்ள பாரதிராஜாவின் கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்ப்பதோடு, அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. சிங்கம் புலி, மனோஜ் குமார் என்று படத்தில் நடித்த நடிகர்கள் அவர் அவர் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து இயக்குநர் தனா திரைக்கதை அமைத்திருந்தாலும், பிரச்சினையை தெளிவாக பேசாமல் பட்டதும் படாமலும் பேசியிருப்பதோடு, எந்த ஜாதியினர் பற்றி பேசுகிறோம் என்பதை படம் பார்ப்பவர்கள் குழப்பமடையும் அளவுக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறார்.
சில சம்பவங்கள், அதனைச் சுற்றி அமைத்துள்ள கிளைக் கதைகள் என்று படத்தில் ஏகப்பட்ட எப்பிசோட்கள் இருந்தாலும், சில காட்சிகள் மட்டுமே ரசிக்கும்படியாக இருக்கிறதே தவிர, முழு படமும் வலுவில்லாமல் நகர்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி. படம் பார்ப்பவர்களை கண்கலங்க செய்ய வேண்டும் என்பதற்காக, ரொம்ப பழைய கான்சப்ட்டை கிளைமாக்ஸாக வைத்திருக்கிறார்.
கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசையும், ராஜ வேல் மோகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும், மேக்கிங் ரீதியாகவும் படம் முழு திருப்தியளித்தாலும், காட்சிகள் அமைப்பிலும், திரைக்கதையை கையாளப்பட்ட விதத்திலும் இயக்குநர் சற்று தடுமாறியிருக்கிறார்.
மொத்தத்தில், வீரனாக இருக்கும் இந்த ‘படை வீரன்’ வீரியம் இல்லாதவனாக இருக்கிறான்.
ஜெ.சுகுமார்