Nov 23, 2024 03:46 AM

’பராரி’ திரைப்பட விமர்சனம்

ddd7b2d0b50a791d28691928fee9f4ba.jpg

Casting : Harishankar, Sangeetha Kalyan, Pugazh Mahendran, Raju, Premnath, Samrat Suresh, Guru Rajendran

Directed By : Ezhil Periyavedi

Music By : Sean Roldan

Produced By : Director Raju Murugan

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர். கூலி வேலைகளை மட்டுமே நம்பியிருக்கும் இரண்டு பிரிவினரும் சொந்த ஊரில் வேலை இல்லாத காலங்களில் வேலைக்காக கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைக்கு செல்கிறார்கள். அங்கு இரண்டு பிரிவினரும் தமிழர்கள் என்பதால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?, என்பதை, உள்ளூரில் “நான் பெரியவன், நீ தாழ்ந்தவன்” என்ற ஆதிக்க மனநிலையில் வாழும் சில மனிதர்களை யோசிக்க வைக்கும் வகையில் சொல்வது தான் ‘பராரி’.

 

நாயகனாக நடித்திருக்கும் ஹரிசங்கர், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு என்பதை தோற்றத்தில் மட்டும் இன்றில் நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். அப்பாவி கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஹரிசங்கர், மோதல்களை விரும்பாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாலும், தன் ஊரைச் சேர்ந்த பெண்ணிற்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக ஆக்ரோஷம் காட்டும் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் தன் நடிப்பு மூலம் மக்கள் மனதில் தங்கிவிடுகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் சங்கீதா கல்யாண், எளிமையான முகம், வலிமையான நடிப்பு என்று படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் புகழ் மகேந்திரன், பிரேம்நாத்.வி, சாம்ராட் சுரேஷ், குரு ராஜேந்திரன், ராஜு, பிரேம்நாத் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் புதியவர்களாக இருந்தாலும் அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

 

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் கதாபாத்திரமாகவே பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எளிய மக்களின் வாழ்வியலை மிக எதார்த்தமாக படமாக்கியிருப்பதோடு, தனது கேமரா மூலம் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார்.

 

சாம்.ஆர்.டி.எக்ஸ்-ன் படத்தொகுப்பு, ஒலி வடிவமைப்பு, கலை இயக்குநரின் பணி, நடிகர், நடிகைகள் தேர்வு உள்ளிட்ட அனைத்துமே ஒரு வாழ்வியலை எந்தவித கலப்படமும் இல்லாமல் ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி, மக்களிடையே இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கான அரசியல் பின்னணியை தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதனால் ஆதாயம் தேடுபவர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

 

உள்ளூரில் சாதியை வைத்து பாகுபாடு, மாநிலத்தில் இனத்தை வைத்து பாகுபாடு, என்று இந்தியா முழுவதும் சாதி, மதம், மொழி ஆகியவற்றின் பேரில் நடக்கும் வன்கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் கிளைமாக்ஸ் காட்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் இதயங்களை கனக்கச் செய்துவிடுகிறார்.

 

படத்தின் முதல் பாதியில் காட்டப்படும் சாதி ரீதியிலான பிரச்சனைகளில் சில விசயங்கள் திணித்தது போல் இருப்பது படத்தின் குறையாக இருந்தாலும், இரண்டாம் பாதி அந்த குறைகளை மறக்கடித்து, சாதி ரீதியிலான பிரச்சனைகளின் பின்னணியில் இருக்கும் அரசியலை யோசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘பராரி’ சாதி பாகுபாட்டுக்கு சரியான சவுக்கடி.

 

ரேட்டிங் 3.5/5