Aug 25, 2023 08:10 AM

’பார்ட்னர்’ திரைப்பட விமர்சனம்

45bff89bfcba9b34095229dc567392e4.jpg

Casting : Aadhi, Hansika, Yogi Babu, Palak Lalwani, John Vijay, Robo Shankar, Pandiyarajan, Thangadurai, Ravi Mariya, Agustin

Directed By : Manoj Dhamodharan

Music By : Santhosh Dayanidhi

Produced By : Royal Fortuna Creations - Goli Surya Prakash

 

கடன் பிரச்சனையால் தனது நண்பர் யோகி பாபுடன் சேர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார் நாயகன் ஆதி. அப்போது விஞ்ஞானி பாண்டியராஜனிடம் இருக்கும் சிப்பை கொள்ளையடித்தால் 50 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால், அவரிடம் இருக்கும் சிப்பை எடுக்க ஆதியும், யோகி பாபுவும் செல்ல, பாண்டியராஜனின் கண்டுபிடிப்பால், யோகி பாபு, ஹன்சிகாவாக மாறிவிடுகிறார். அவரை மீண்டும் யோகி பாபுவாக மாற்றுவதற்காக பாண்டியராஜனை தேடிப் போக, அவர் அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகிறார். இதனால், பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இருவரும் அவற்றை எப்படி சமாளித்தார்கள், மீண்டும் ஹன்சிகா யோகி பாபுவாக மாறினாரா, இல்லையா, என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘பார்ட்னர்’ படத்தின் கதை.

 

காமெடி நடிகர்களுடன் இணைந்து பயணிப்பது ஆதிக்கு புதிதல்ல என்பதால் அந்த வேலையை எந்தவித சிரமும் இன்றி செய்திருக்கிறார். 

 

கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் யோகி பாபு, வழக்கம் போல் உருவம் கேலி செய்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி ஒரு சில இடங்களில் எடுபட்டாலும், பல இடங்களில் கடுப்பேற்றுகிறது.

 

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, ஆணாக இருந்து பெண்ணாக மாறிய கதாபாத்திரத்தில் மெனக்கெட்டிருக்கிறார். உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் ஆணாக அசத்தியிருக்கும் ஹன்சிகாவின் அலட்டல் இல்லாத நடிப்பு அமர்க்களம்.

 

ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் பாலக் லால்வானி ஒரு பாடல், ஒரு சில காட்சிகள் என்று தனது கடமையை நிறைவாக செய்திருக்கிறார்.

 

ஜான் விஜய், ரோபோ சங்கர், தங்கதுரை, பாண்டியராஜன், ரவி மரியா, முனிஷ்காந்த், அகஸ்டியன் என அனைத்து நடிகர்களும் ரசிகர்களை சிரிக்க வைக்க படாதபாடு பட்டிருக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் தான் பாவம்.

 

ஒளிப்பதிவாளர் சபீர் அஹமத் கதைக்கு ஏற்றபடி கலர்புல்லாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

 

சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியும், கொண்டாடும் படியும் இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.

 

எழுதி இயக்கியிருக்கும் மனோஜ் தாமோதரன், மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்துக்கொண்டு ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், காட்சிகள் அனைத்தும் அதர பழசாக இருப்பதால் நம்மால் அப்படி எல்லாம் சிரிக்க முடியவில்லை.

 

ஒரு ஆண் பெண்ணாக மாறியானால் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வார்? என்பதை அழுத்தமாக பதிவு செய்ய தவறியிருக்கும் இயக்குநர் மனோஜ் தமோதரன்,  சமூகத்தில் பெண்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை ஜாலியாக சொல்லி கடந்து போனாலும் அந்த காட்சி பாராட்டும்படி இருக்கிறது.

 

முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்தி கதை நகர்வதால், லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால் நிச்சயம் ரசிகர்கள் மகிழ்ச்சியாக திரும்பலாம்.

 

மொத்தத்தில், இந்த ‘பார்ட்னர்’ கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

 

ரேட்டிங் 2/3