Mar 30, 2023 04:42 PM

’பத்து தல’ திரைப்பட விமர்சனம்

b5fedefbcebcb8878e432dfbe256d29d.jpg

Casting : Silambarasan,Gautham Karthik, Gautham Vasudev Menon, Priya Bhavani Shankar, Anu Sithara, Teejay Arunasalam, Kalaiyarasan, Santhosh Prathap, Madhu Guruswamy, Redin Kingsley, Manushyaputhiran, Sendrayan, Soundararaja, Dheeraj Kher, Harshitha, Kannan Ponna

Directed By : Obeli N. Krishna

Music By : A. R. Rahman

Produced By : Jayantilal Gada and K. E. Gnanavel Raja

 

கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணல் கொள்ளை மாஃபியா தலைவன் சிலம்பரசன், அரசியல் தலைவர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் அண்டர்கவர் ஆபரேஷனில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரி கெளதம் கார்த்திக்  ஆகியோர் இடையே நடக்கும் முக்கோண மோதலையும், அந்த மோதலில் யார் யாரை வென்றது என்பதையும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு மாஸாக சொல்வது தான் ‘பத்து தல’ படத்தின் கதை.

 

ஏ.ஜி.ராவணன் என்ற ஏ.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் மணல் மாஃபியா தலைவனாக சிலம்பரசன் டி.ஆர் மிரட்டியிருக்கிறார். இளமை மற்றும் முதுமை இரண்டுக்கும் நடுவில் இருக்கும் வயதில் நடித்திருக்கும் சிலம்பரசனின் ஒவ்வொரு அசைவும் மாஸாகவும், கிளாஸாகவும் இருக்கிறது. அதிலும், “நான் ஆண்ட பரம்பரை” என்று வில்லன் பேசும் வசனத்திற்கு, “நான் உங்களை அழித்த பரம்பரை” என்று சிலம்பரசன் பதில் சொல்லும் போது திரையரங்கே அதிரும் வகையில் கைதட்டல் காதை பிளக்கிறது. ஏ.ஜி.ஆர் என்ற  ஆளுமை பற்றி முதல் பாதி முழுவதும் கொடுக்கப்படும் பில்டப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் எண்ட்ரி கொடுக்கும் சிம்பு, இரண்டாம் பாதி முழுவதையும் தனது நடிப்பு மூலம் சுமந்திருப்பதோடு, தங்கை செண்டிமெண்டிலும் கவர்கிறார்.

 

படத்தின் மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் கெளதம் கார்த்திக், இதுவரை இல்லாத வகையில் தோற்றத்திலும், நடிப்பிலும் முற்றிலும் வித்தியாசத்தை காட்டி கவனம் பெறுகிறார். ஆரம்பத்தில் மாஃபியா கூட்டத்தில் ஒருவராக அறிமுகமாகி பிறகு அவரது உண்மையான கதாபாத்திரம் தெரிய வரும் போது படத்தின் வேகம் அதிகரிக்கிறது. முரட்டுத்தனமான முகம், அழுத்தமான நடிப்பு, சண்டைக்காட்சிகளில் வேகமான செயல்பாடு என முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் கெளதம் கார்த்திக், சண்டைக்காட்சிகளில் எதை செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும்படி இருப்பது படத்திற்கு மட்டும் இன்றி அவருடைய கதாபாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறது.

 

கதாநாயகனுடன் டூயட் பாடல் இல்லாத கதாநாயகி வேடம் என்றால் பிரியா பவானி சங்கர் தான் இயக்குநர்களின் நினைவுக்கு வருவார் போலிருக்கிறது. இந்த படத்திலும் கதாநாயகனை காதலிக்கும் அம்மணி அவருடன் டூயட் பாடமல் பயணித்திருக்கிறார். இருந்தாலும் கதையுடன் பயணிக்கும் தாசில்தார் கதபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருப்பதோடு, ஒரு சிறு காட்சியில் குட்டை டவுசர் போட்டு ரசிகர்களை ஏங்கவும் வைத்திருக்கிறார்.

 

நாஞ்சிலார் குணசேகரன் என்ற அரசியல் தலைவர் கதபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளதம் மேனன், மன்னர் பரம்பரை என்ற ஆணவத்தோடு வலம் வரும் அரசியல்வாதி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். தொடர் தோல்வியால் துவண்டு போவதோடு, சிம்பு மீது இருக்கும் தனது கோபத்தை தனது உதவியாளர் மீது காட்டும் காட்சியில் படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறார்.

 

அனு சித்தாரா, சந்தோஷ் பிரதாப், கலையரசன், கன்னட நடிகர் மது குருசாமி, டீஜே அருணாச்சலம், கண்ணன் பொன்னையா, செண்ட்ராயன், ஜோ மல்லூரி என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவரும் அளவாக பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, கவனம் ஈருக்கும் வகையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

’ராவடி...” பாடலுக்கு நடனம் ஆடியிருக்கும் நடிகை சாயிஷா, படம் முழுவதும் வந்திருக்கலாமே!, என்று ரசிகர்கள் ஏங்கும் வகையில் தனது நடன அசைவுகள் மூலம் அசத்தியிருக்கிறார். அவரது வேகமான நடன அசைவுகளும், கவர்ச்சியான தோற்றமும் பாடலை ரசிக்க வைப்பதோடு, திரையரங்கில் ஒன்ஸ்மோர் கேக்க வைக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாட்ஷாவின் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. சிலம்பரசன், கெளதம் கார்த்திக் ஆகியோரை இதுவரை பார்க்காத ஒரு லுக்கில் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாட்ஷா, படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை முழு படத்தையும் ஆக்‌ஷன் உணர்வோடு பயணிக்க வைத்திருப்பதோடு, கதாபாத்திரங்களின் செண்டிமெண்டையும் ரசிகர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் வகையில் ஹிட்டாகி விட்டது. காட்சிகளுடன் சேர்த்து பார்க்கும் போது பாடல்கள் கூடுதல் சிறப்பை பெறுகிறது. பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

 

சிம்புவின் வயதுக்கு மீறிய கதாபாத்திரம் என்றாலும் அதில் அவரை ஏற்றுக்கொள்ளும்படி செய்திருக்கும் இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணா, முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இயக்கியிருந்தாலும், அதிலும் காதல், செண்டிமெண்ட், காமெடி, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளையும் சேர்த்து அனைத்து தரப்பினருக்குமான படமாக கொடுத்திருக்கிறார்.

 

சிம்பு ரசிகர்கள் கொண்டாடும் வகையில் காட்சிகளை மாஸாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணா, கதைக்களத்தை எந்த வகையிலும் சிதைக்காமல் கையாண்ட விதமும், காட்சிகளை நகர்த்திய விதமும் படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது.

 

படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அவர்களை சரியான முறையில் பயன்படுத்தியிருக்கும் இயக்குநர், அதே சமயம் நடிகர்களுக்காக எந்த ஒரு காட்சியையும் திணிக்காமல் திரைக்கதையை கூர்மையாக வடிவமைத்து படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி சென்றிருக்கிறார்.

 

கிளைமாக்ஸ் காட்சி சற்று லாஜிக் மீறலாக இருந்தாலும், ரசிகர்களை கொண்டாட வைக்கும் விதத்திலும், சிம்பு என்ற மாஸ் நடிகருக்கு சரியான தீனியாகவும் அமைந்திருக்கிறது.

 

மொத்தத்தில், ‘பத்து தல’ சிம்புவின் கெத்தை நிரூபித்து விட்டது.

 

ரேட்டிங் 3.5/5