Jun 25, 2022 08:37 AM

’பட்டாம் பூச்சி’ விமர்சனம்

be990d3ee93f72fd408ea88ffe3cb5fe.jpg

Casting : Sundar.C, Jay, Ani Rose, Imman Annachi

Directed By : Badri

Music By : Navneedh Sundar

Produced By : Avni Tele Media - Kushboo Sundar

 

செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெய், தன்னை தூக்கிலிடுவதற்கு முன்பு, தொடர் கொலைகள் செய்த பட்டாம் பூச்சி என்ற சைக்கோ கொலையாளி நான் தான் என்ற உண்மையை சொல்கிறார். அவர் எதற்காக தொடர் கொலைகள் செய்தார், எப்படி கொலை செய்தார், எந்த ஆயுதத்தால் கொலை செய்தார், போன்ற தகவல்களை சேகரித்து அந்த வழக்கை 30 நாட்களுக்குள் முடிக்க முடிவு செய்யும் காவல்துறை அந்த பொருப்பை இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி-யிடம் ஒப்படைக்கிறது.

 

விசாரணையை மேற்கொள்ளும் சுந்தர்.சி-யிடம் உண்மையை சொல்ல சில கண்டிஷன்களை போடும் ஜெய், அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது புத்திசாலித்தனத்தால் தன்னை நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாகி விடுகிறார். ஜெய் தான் சைக்கோ கொலையாளி என்பது தெரிந்தும் சட்ட ரீதியாக அவரை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் சுந்தர்.சி, விடுதலையான ஜெய்யின் தொடர் கொலைகளை தடுத்தாரா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.

 

ஆரம்பத்தில் வேகமாக நகர்வதோடு, சில இடங்களில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி சுவாரஸ்யமாக நகரும் படம், சில நிமிடங்களுக்கு பிறகு எதிர்ப்பார்ப்பை ஏமாற்றமாக்கி படம் பார்ப்பவர்களை கடுப்பேற்றும் அளவுக்கு ஏடாகூடமாக நகர்கிறது.

 

சுந்தர்.சி போலீஸ் இன்ஸ்பெக்டராக வழக்கமான பாணியில் நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் சுமாராக நடித்திருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார். என்னதான் ஹீரோவாக சுந்தர்.சி நடித்தாலும் அவருடைய கதாப்பாத்திரம் சில இடங்களில் ஷீரோவாகவே இருக்கிறது.

 

வில்லனாக நடித்திருக்கும் ஜெய், நடிப்பில் வில்லத்தனத்தை காட்ட பெரிதும் முயற்சித்திருக்கிறார். ஆனால் அது ஒரு சில இடங்களை தவிர்த்து பல இடங்களில் எடுபடவில்லை. குறிப்பாக அவருடைய குழந்தை முகம் வில்லத்தனத்திற்கு சுத்தமாக எடுபடவில்லை.

 

ஹீரோயினாக நடித்திருக்கும் ஹனி ரோஸ், படத்தின் இறுதிக்காட்சியில் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அதிலும் சில இடங்களில் அவர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தேவையில்லாமல் திணிக்கப்பட்டது போல் இருக்கிறது.

 

இமான் அண்ணாச்சியின் கதாப்பாத்திரமும், அந்த கதாப்பாத்திரம் கொலை செய்யப்படும் காட்சியும் மிகப்பெரிய லாஜிக் மீறலாக இருக்கிறது.

 

நவநீத் சுந்தரின் இசையும், கிருஷ்ணசுவாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சுருக்கமாகவும், வேகமாகவும் சொல்ல வேண்டிய கதையை நீளமாக சொல்லி பல இடங்களில் சலிப்படைய செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர்.

 

எதிர்ப்பாரத திருப்புமுனைகளும், மிரட்டும் சஸ்பென்ஸ் த்ரில்லர் காட்சிகளும் இல்லாத ஒரு சைக்கோ த்ரில்லர் படமாக இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பத்ரி, ஜெய் மற்றும் சுந்தர்.சி இருவருக்கும் இடையே நடக்கும் மோதலை வைத்துக்கொண்டு சைக்கோ த்ரில்லர் ஜானர் படத்தையே மசாலா படமாக கொடுத்திருக்கிறார்.

 

ஜெய் கொலை செய்யும் போது அதை தடுக்க முயற்சிக்கும் சுந்தர்.சி அனைத்தும் முடிந்து க்ளைமாக்ஸில் வரும் போலீஸ் போல் ஒவொரு முறையும் இறுதியில் வருவது சலிப்படைய செய்கிறது.  சைக்கோ கொலையாளியான ஜெய், தனது தந்திரத்தால் விடுதலையாவது, போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே கொலை செய்வது என சற்று தூக்கலாகவே மசாலாவை தூவியிருக்கும் இயக்குநர் பத்ரி, தற்போதைய காலக்கட்டத்தில் இதை செய்ய முடியாது என்பதற்காக படத்தை 1980 முதல் 90-க்குள் நடக்கும் கதையாக காட்டியிருக்கிறார்.

 

இதை பீரியட் படமாக எடுத்த இயக்குநர் பத்ரியின் இந்த புத்திசாலித்தனம் திரைக்கதை அமைப்பில் இருந்திருந்தால் படம் ரசிக்கும்படி இருந்திருக்கும். ஆனால், அப்படி இல்லாமல் கதையை எப்படி எப்படியோ சொல்லி, காட்சிகளை போராடிக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார். 

 

மொத்தத்தில், ‘பட்டாம் பூச்சி’ படத்தை பார்ப்பவர்களுக்கு தலைவலி வருவது உறுதி.

 

ரேட்டிங் 2.5/5