Apr 28, 2022 01:53 PM

’பயணிகள் கவனிக்கவும்’ விமர்சனம்

cd73a5297ab97c28730ff3f73f1c8081.jpg

Casting : Vidarth, Karunakaran, Lakshmi Priya, Masoom Shankar

Directed By : SP Shakthivel

Music By : Samanth Nag

Produced By : T Vijaya Raghavendra

 

விதார்த், லட்சுமி பிரியா, கருணாகரன் ஆகியோரது நடிப்பில், எஸ்.பி.சக்திவேல் இயக்கியிருக்கும் படம் ‘பயணிகள் கவனிக்கவும்’.  ’ஆஹா’ ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி, என்பதை பார்ப்போம்.

 

சோசியல் மீடியாவை பயன்படுத்தாத மனிதரே இல்லை என்ற தற்போதையா காலக்கட்டத்தில், சிலரது விளையாட்டு தனத்தால் சோசியல் மீடியா மூலம் தனிமனிதர்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது, என்ற உண்மையை சொல்வது தான் இந்த படத்தின் கதை.

 

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் விதார்த், தன்னையும் அறியாமல் அசந்து தூங்கி விடுகிறார். அதை போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் கருணாகரன் விளையாட்டாக போட, அதனால் விதார்த்தின் வாழ்க்கையில் மட்டும் இன்றி கருணாகரன் வாழ்க்கையிலும் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன பிரச்சனை, அதில் இருந்து இருவரும் மீண்டார்களா இல்லையா, என்பதே படத்தின் கதை.

 

எந்த விசயமாக இருந்தாலும் அதை போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவது, வாட்ஸ்ச்-போன்றவற்றில் வரும் ஃபார்வேர்ட் மெசஜ்களின் உண்மை நிலை அறியாமல் அதை ஷேர் செய்வது, போன்றவற்றால் எத்தகைய பிரச்சனை ஏற்படும், என்பதை பலர் அறிவதில்லை. ஆனால், அதனால் ஒரு மனிதன் பாதிக்கப்படுவதோடு, அவரது எதிர்காலும் கேள்விக்குறியாவதையும் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள்.

 

படத்தில் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாதவராக நடித்திருக்கும் விதார்த், நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொரு அசைவையும் நாம் உற்று கவனிக்கும்படி மிக ரியலாக நடித்திருக்கும் விதார்த்துக்கு இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைப்பது உறுதி.

 

சோசியல் மீடியா அடிட்டாக நடித்திருக்கும் கருணாகரன், வேடத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். தான் செய்த தவறால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எண்ணி பயப்படும் காட்சிகளில் மிக இயல்பாக நடித்திருக்கிறார்.

 

விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியாவும் தனது கதாப்பாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார்.  கருணாகரனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் மாசும் ஷங்கரின் நடிப்பு அளவு.

 

விதார்த்தின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் சரண் மற்றும் மகளாக நடித்திருக்கும் சிறுமி மதி ஆகியோரும்  நடிப்பு மூலம் கவனிக்க வைக்கிறார்கள். மூனார் ரமேஷ், பிரேம் குமார், கவிதாலயா கிருஷ்ணன், ஆர்.ஜே  சரித்திரன் என மற்ற நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

 

எஸ்.பாண்டிகுமாரின் ஒளிப்பதிவும், ஷமந்த் நாக் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. கதை சொல்லும் கருத்தை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆர்.எஸ்.சதீஷ்குமார், காட்சிகளை வேகமாகவும் தொகுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

 

எளிய மனிதர்களின் வாழ்க்கை பின்னணியில் உலக அளவிலான ஒரு பிரச்சனையை மிக எதார்த்தமாக பேசியிருக்கும் இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகள் எளிமையாக இருந்தாலும், அதன் மூலம் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் சொல்லியிருக்கும் மெசஜ் மிக மிக முக்கியமானது.

 

தொழில்நுட்ப வசதி என்பது ஒரு மனிதரின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், அதை சரியான முறையில் பயன்படுத்தாமல், விளையாட்டாக பயன்படுத்துவதால் எத்தகைய விபரீதங்கள் ஏற்படுகிறது, என்பதை இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

மக்களுக்கு அறிவுரை சொல்லும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அவ்வபோது நாம் சிரிக்கும்படியும் காட்சிகளை அமைத்து படத்தை கமர்ஷியலாகவும் இயக்கியிருக்கும் இயக்குநர், எந்த இடத்திலும் தான் சொல்ல வந்த கருத்தில் இருந்து விலகிச்செல்லாமல் பயணித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கிற்கான மீடியம் என்றாலும் அதிலும் சமூக பொறுப்புடன் படம் எடுப்பவர்கள் அவ்வபோது வந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் வரிசையில் இணைந்திருக்கும் இயக்குநர் எஸ்.பி.சக்திவேலை வரவேற்பதோடு நின்றுவிடாமல், இத்தகைய படங்களையும் கொண்டாட வேண்டும்.

 

மொத்தத்தில், ‘பயணிகள் கவனிக்கவும்’ ரசிகர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்.

 

ரேட்டிங் 3.5/5