’முத்துநகர் படுகொலை’ விமர்சனம்
Casting : MS Raj
Directed By : MS Raj
Music By : Al Rufian
Produced By : Naatchiyaal Suganthi, Joe Prem Anand, Ramya Mervin, Ilangovan Chandran, Jagadish, Micheal Xeviar
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் தமிழகத்தை மட்டும் இன்றி உலகத்தையே உலுக்கினாலும், இதன் பின்னணி என்ன? என்பதும், போராட்டக்களத்தில் நடந்த சம்பவம் பற்றிய தகவல்கள் முழுமையாக வெளியாகமல் இருந்த நிலையில், அப்போராட்டக்களத்தையும், அம்மக்களின் துயரங்கள் மற்றும் துப்பாக்கி சூட்டின் பின்னணி பற்றியும் விரிவாக பேசும் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது ‘முத்துநகர் படுகொலை. (PEARLCITY MASSACRE)
தூத்துக்குடியில் இயங்கி வரும் தனியார் காப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு கழிவுகளால் தூத்துக்குடி நிலம், நீர், காற்று ஆகியவை பாதிக்கப்பட்டதால், அங்கு வாழும் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளானதோடு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் சம்பவங்களும் அதிகரித்தது. எனவே அந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என்று பல வருடங்களாக அம்மக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினாலும், அரசோ அல்லது தொழிற்சாலையின் உரிமையாளர்களோ அதுபற்றி செவி கொடுக்காமல், தொழிற்சாலையை தொடர்ந்து இயக்கிக்கொண்டிருந்தார்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள கிராமம் ஒன்றில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறிய அளவில் மீண்டும் தொடங்கிய போராட்டம் படி படியாக வளர்ந்து 100 நாட்கள் தொடர்ந்ததோடு உலகின் பார்வையை தூத்துக்குடி பக்கம் திரும்பியது. இந்த நிலையில், போராட்டத்தின் இறுதி நாளில், மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக பேரணியாக சென்ற மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த கொலை சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அந்த போராட்டக்களத்தை நம் கண் முன் நிறுத்தும் விதமாக உருவாகியுள்ளது ’முத்துநகர் படுகொலை’ திரைப்படம்.
சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்தில் போராட்டத்தின் துவக்கம், அதன் படி படியான வளர்ச்சி, பிறகு அரசு தரப்பில் எழுந்த எதிர்ப்பு, அந்த எதிர்ப்புகளை மீறி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்டவை ஒரிஜனலான போராட்டக்கள காட்சிகளோடும், போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமானவர்களின் விரிவான விளக்கத்தோடும் எடுத்துரைக்கப்படுகிறது.
கை குழந்தைகள், பள்ளி சிறுவர்கள், இளம் பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பினரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று குரல் கொடுத்ததோடு, பல நாட்கள் பல கஷ்ட்டங்களை எதிர்கொண்டு பல நாட்கள் தொடர்ந்து இரவு பகபலாக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், அந்த தொழிற்சாலையால் அவர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகிறது, என்பதையும் படம் மிக நேர்த்தியாக விளக்கியிருக்கிறது.
நம் அடுத்த தலைமுறையாவது ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அமைதியான போராட்டத்தின் மூலம் தங்களது பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்த அப்பாவி மக்களை அலட்சியமாக சுட்டு வீழ்த்திய காட்சிகளும், அம்மக்களின் அலறல் சந்தங்களும் நம்மை கண்கலங்க வைக்கிறது.
போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மகன், மகள், கணவன், சகோதரர், சகோதரி என தங்களது சொந்தங்களை பறிகொடுத்த பிறகும், அரசும் காவல்துறையும் அவர்களை படாதபாடு படுத்திய சம்பவங்களும், அது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் வழிய சொல்லும் காட்சிகளும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்க, இத்தனை நடந்தும் அந்த ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படாமல் இருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், அந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு மற்றும் அதில் 13 பேர் பலியான சம்பவங்களை வழக்கமான பத்திரிகை செய்தியாகவே பார்த்த நமக்கு, அம்மக்களின் உயிர் வலியை உணரச்செய்யும் வகையில் இந்த படம் இருக்கிறது.
இப்படி ஒரு படத்தை இயக்கிய எம்.எஸ்.ராஜ் அவர்களை பாராட்டுவதோடு நின்றுவிடாமல், இந்த படத்தை உலகம் முழுவதும் பரப்பி, போராட்டத்தில் வீர மரணம் அடைந்த தியாகிகளுக்கு நியாயம் கிடைக்கவும், தூத்துக்குடி மக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுவதற்காக வழியை ஏற்படுத்துவோம்.
குறிப்பு : ‘முத்துநகர் படுகொலை’ திரைப்படம் வரும் மே 20 ஆம் தேதி www.tamilsott.com என்ற இணையதளத்திலும் vimeo என்ற தளத்திலும் வெளியாக உள்ளது.