May 24, 2019 11:25 AM

‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ விமர்சனம்

d0544dbf9385f49c77a7541d4cf783cf.jpg

Casting : Shilpa Manjunath, Sachu, Saravana Subbaiah, Livingstone

Directed By : Vijayan.S

Music By : Charlas Thana

Produced By : Vijayan.S

 

பழம்பெரும் நடிகை சச்சு, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ புகழ் ஷில்பா மஞ்சுநாத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர், தான் எப்போதும் இளமையாக வாழ வேண்டும் என்பதற்காக மருத்துவர்களிடம் மருந்து ஒன்றை கண்டுபிடிக்க சொல்கிறார். அதன்படி, மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு மருந்து ஒன்றை கண்டுபிடிக்க, அந்த மருந்தின் ஃபார்முலா பல ஆண்டுகளுக்கு பிறகு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் கையில் கிடைக்கிறது. அவர்கள் அந்த ஃபார்முலாவை வைத்து புதிய மருந்தை கண்டுபிடித்து அதை பரிசோதனை செய்து வருகின்றனர்.

 

இதற்கிடையே, வயதான கிழவியாக இருந்தாலும் தனது அழகில் கவனம் செலுத்தும் ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத்தின் பாட்டியான சச்சு, தனது வயதான தோற்றத்தை மாற்றுவதற்காக அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை அனுக, அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த புதிய மருந்தை சச்சுவுக்கு செலுத்தி பரிசோதிக்கிறார்கள். அந்த சோதனை வெற்றி பெற்று சச்சு இளைமையாகி விடுகிறார். அதுவும் தனது இளமைக்கால தோற்றமான பேத்தி ஷில்பா மஞ்சுநாத்தின் உருவத்தை பெற்றுவிடுகிறார். மேலும், தனது அழகின் மூலம் பெரிய விளம்பர பட நடிகையாகவும் மாறும் சச்சு, தோற்றத்தில் இளமையாகவும், உள்ளுக்குள் பாட்டியாகவும் லூட்டியடிக்க, கார்ப்பரேட் நிறுவனமோ இந்த விஷயத்தை மறைத்துவிட்டு, அந்த மருந்தை வைத்து வேறு ஒரு திட்டம் போட, அதை அறிந்துக் கொள்ளும் சச்சு அவர்களிடம் இருந்து தப்பித்தாரா இல்லையா, அவரது இளமை லூட்டியால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

காமெடி வேடங்களில் நடித்து வந்த நடிகை சச்சு இப்படி ஒரு வேடத்தில் இதுவரை நடித்திருக்க மாட்டார். அப்படி ஒரு வேடத்தில் பாட்டியாகவும், பேத்தியாகவும் அவர் செய்யும் லூட்டிகள் அத்தனையும் பியூட்டியாக இருக்கிறது.

 

ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத், பாட்டி மற்றும் பேத்தி என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சில்க் ஸ்மித்தாவை பார்த்தது போன்ற உணர்வை கொடுக்கும் அளவுக்கு கண்ணிலேயே கவர்ச்சியை காட்டும் ஷில்பா மஞ்சுநாத், நடிப்பிலும் சற்று கவனம் செலுத்தினால் நிச்சயம் கோலிவுட்டின் கனவு கண்ணியாவது உறுதி.

 

Perazhagi ISO Review

 

வில்லனாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, ஷில்பா மஞ்சுநாத்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் விவேக், லிவிங்ஸ்டன் என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

சயின்ஸ் பிக்‌ஷன் படத்தை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இயக்குநர் விஜயன்.சி, பாட்டி பேத்தியாக மாறி அடிக்கும் லூட்டிகளை காமெடியாக காட்டியிருப்பதோடு, எந்தவித ஆபாசமும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

குறைவான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சில குறைகள் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை இயக்குநர் விஜயன்.எஸ் நேர்த்தியாக சொல்லியிருப்பதோடு சுறுக்கமாகவும் சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

 

ரேட்டிங் 3/5