பெட்ரோமாக்ஸ் விமர்சனம்
Casting : Tamanna, Munishkantth, Kali Venkat, Sathyan, TSK, Prem
Directed By : Rohin Venkatesan
Music By : Ghibran
Produced By : A. Kumar
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் தமன்னா முதல் முறையாக நடித்திருக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ எப்படி என்று பார்ப்போம்.
பேய்கள் இருக்கும் வீடு ஒன்றை அதன் உரிமையாளரான பிரேம் விற்பனை செய்ய முயற்சிக்கிறார். ஆனால், அந்த வீட்டில் பேய் இருப்பதால் அந்த வீட்டை வாங்க பலர் பயப்படுகிறார்கள், அதையும் மீறி சிலர் வாங்க தயாராக இருந்தாலும் குறைவான விலைக்கு கேட்கிறார்கள். இதனால், அந்த வீட்டில் பேய் இல்லை என்று நிரூபிப்பதற்காக நான்கு பேரை, மூன்று நாட்கள் தங்க வைக்க முடிவு செய்யும் பிரேம், காளி வெங்கட், முனிஷ்காந்த், சத்யன், டி.எஸ்.கே ஆகியோரை பேய் வீட்டுக்குள் அனுப்புகிறார்.
வெவ்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இந்த நான்கு பேரும், அந்த பேய் வீட்டில் இருக்கும் பேய்களே மிரண்டு போகும் அளவுக்கு ரகளை செய்ய, இவர்களை அந்த வீட்டை விட்டு விரட்டியடிக்க முடியாமல் பேய்கள் திணறுவதை கலகலப்பாக சொல்லியிருப்பதோடு, அந்த வீட்டில் இருக்கும் நான்கு பேய்கள் யார், அவர்கள் எப்படி இறந்தார்கள், என்ற கதையை ட்விஸ்ட்டோடு மட்டும் இல்லாமல், தற்போதைய காலக்கட்டத்திற்கு தேவையான மேசஜோடு சொல்லியிருப்பது தான் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் கதை.
என்னடா கதையில், தமன்னா பெயரையே காணோம் என்று யோசிக்கிறீர்களா? தமன்னா மற்றும் அவருடன் இருக்கும் மூன்று கதபாத்திரங்களை வைத்து இயக்குநர் ஒரு குட்டி ட்விஸ்ட்டை கையாண்டிருக்கிறார். அது என்ன என்பதை திரையில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக தான், அவரைப் பற்றி குறிப்பிடவில்லை.
கதையின் நாயகி தமன்னா என்றாலும், முழு படத்தையும் தனது தோளில் தூக்கி சுமந்திருப்பவர் முனிஷ்காந்த் தான். அவருக்கு பக்கபலமாக காளி வெங்கட், சத்யன், டி.எஸ்.கே ஆகியோர் தோள்கொடுத்திருக்கிறார்கள். ‘முண்டாசுப்பட்டி’ படத்திற்குப் பிறகு முனிஷ்காந்த் நம்மை முழுமையாக சிரிக்க வைத்திருக்கிறார். இவர்களுடன் சில நிமிடங்கள் மட்டுமே வரும் யோகி பாபுவின் காமெடியும் ரனகளம்.
திகில் கம் காமெடி ஜானரில் ஏகப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், இப்படத்தின் கதையையும், திரைக்கதையும் இயக்குநர் ரோகின் வெங்கடசன் கையாண்டிருக்கும் விதம் நேர்த்தியாக இருப்பதோடு, காமெடி காட்சிகளை தெகட்டாத அளவுக்கு, கட்சிதமாக கொடுத்த விதம் படத்தை தொய்வு இன்றி நகர்த்துகிறது.
ஜிப்ரானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. டேனி ரேய்மாண்டின் ஒளிப்பதிவும், லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும் கச்சிதம்.
கதையின் நாயகியாக தமன்னா இருந்தாலும், அவரை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக, காட்சிகளை திணிக்காமல், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே முதன்மைப்படுத்தியிருக்கும் இயக்குநர் ரோகின் வெங்கடேசன், காமெடி மற்றும் செண்டிமெண்ட் இரண்டையும் அளவாக கொடுத்திருப்பதோடு, பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளுக்காக மெசஜ் ஒன்றையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
ஏகப்பட்ட பேய் படங்களையும், அதில் இருக்கும் காமெடிகளையும் தமிழ் ரசிகர்கள் வாரம் வாரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், மற்றப்படங்களின் எந்தவித அடையாளமும் இன்றி, இந்த படத்தின் திரைக்கதையை இயக்குநர் ரோகின் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘பெட்ரோமாக்ஸ்’ பிரகாஷம்
ரேட்டிங் 3.5/5