Feb 21, 2019 05:18 PM

’பெட்டிக்கடை’ விமர்சனம்

6646a7744f08d51dd3e5be26ec324965.jpg

Casting : Samuthirakkani, Veera, Shanthini, Ashmitha, Naan Kadavul Rajendran

Directed By : Isakki Karvannan

Music By : Mariya Manohar

Produced By : Isakki Karvannan

 

இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில், ஆன்லைன் வர்த்தகத்தால் ஏற்படும் ஆபத்துகளை சொல்லும் படமாக வெளியாகியிருக்கும் ‘பெட்டிக்கடை’ படம் எப்படி என்பதை பார்ப்போம்.

 

உலகமயமாக்கலால் எதிர்காலத்தில் எந்த மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பதையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்காலத்தில் அரசையே ஆளும் அளவுக்கு சக்தி படைத்தவையாக எவ்வாறு மாறும் என்பதையும் சொல்வது தான் இப்படத்தின் கதை.

 

கிராமம் ஒன்றில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மருத்துவராக வரும் சாந்தினி, அந்த ஊரில் பெட்டிக்கடை இல்லாததையும், ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் மூலமாகத்தான் அந்த ஊர் மக்கள் மளிகை சாமான் உள்ளிட்ட அனைத்து அத்தியாவாசிய பொருட்களையும் வாங்கி வருகிறார்கள் என்பதையும் அறிகிறார். இது பற்றி ஊர் மக்களிடம் விசாரிக்கையில், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தங்களது ஊரில் பெட்டிக்கடை வைக்க அனுமதிக்கவில்லை என்றும், அவர்களுக்கு அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் துணையாக நிற்பதை கூறுவதோடு, இந்த விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சமுத்திரக்கனியின் வாழ்க்கையை பற்றியும் ஊர் மக்கள் சாந்தினியிடம் கூறுகிறார்கள்.

 

அனைத்தையும் கேட்டறியும் சாந்தினி, சமுத்திரக்கனி போராடியது போல போராட்டத்தின் மூலம், மீண்டும் அந்த ஊரில் பெட்டிக்கடையை திறப்பதோடு, கார்ப்பரேட் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடிவு செய்ய, அந்த போராட்டத்தில் அவர் வெற்றிப் பெற்றாரா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.

 

சமூகத்திற்கு தேவையான ஒன்றை திரைப்படமாக எடுத்திருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதே சமயம், அதை திரைப்படமாக அவர் கொடுத்த விதத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்து படத்தை மட்டும் இன்றி ரசிகர்களையும் கொள்ளோ கொள்ளு என்று கொன்று விடுகிறார்.

 

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, எப்போதும் போல போராட்டக் குணத்தை தூண்டும் விதத்திலும், ஊக்கம் தரும் விதத்திலும் நடித்திருக்கிறார். மற்ற நடிகர்களான மொசக்குட்டி வீரா, நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.வி.உதயகுமார், நடிகை சாந்தினி, அஸ்மிதா உள்ளிட்ட அனைவரும் ஏனோ தானோ என்று நடித்திருக்கிறார்கள்.

 

மரியா மனோகரின் இசையும், அருள், சீனிவாஸ் ஆகியோரின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எடிட்டர் சுரேஷ் அர்ஸ் என்பதை நம்பவே முடியவில்லை. மோசமான படத்தை கூட தனது எடிட்டிங் மூலம் நேர்த்தியாக்கும் அனுபவம் வாய்ந்த எடிட்டரான சுரேஷ் அர்ஸ், படத்தை கந்தலாக்கியிருக்கிறார்.

 

இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இசக்கி கார்வண்ணன், நல்ல படத்தை மட்டும் இன்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான படமாக இப்படத்தை கொடுக்க நினைத்திருப்பது காட்சிகளிலும், திரைக்கதையிலும் தெரிந்தாலும், அதை சொல்லிய விதத்தில் எந்தவித நேர்த்தியும் இல்லாமல் போனதால் ஒரு நல்ல படமாக மக்கள் கொண்டாட வேண்டிய படம் நாசமாய் போய்விட்டது.

 

இருந்தாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மெசஜுக்காக இந்த ‘பெட்டிக்கடை’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

 

2/5