’பீட்சா 3’ திரைப்பட விமர்சனம்
Casting : Aswin kakumanu,Pavitra Marimuthu, Gaurav, Kavitabarathi, Anupama Kumar, Abi Nakshtra, Veera, Kurashi, Kaali Venkat, Kpy Yogesh, Seymour
Directed By : Mohan Govind
Music By : Arun Raj
Produced By : Thirukumaran Entertainment - CV. Kumar
சொந்தமாக உணவகம் நடத்தி வரும் நாயகன் அஸ்வின் கக்குமானுவும், ஆவிகளிடம் பேசுவதற்கான ஆப் ஒன்றை உருவாக்கி வரும் நாயகி பவித்ரா மாரிமுத்துவும் காதலிக்கிறார்கள். அஸ்வின் நடத்தும் உணவகத்தின் சமையல் அறையில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதோடு, அஸ்வின் சந்திக்கும் சில மனிதர்கள் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். தனது காதலி உதவியுடன் தன்னை சுற்றி நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் மர்ம மரணங்கள் பற்றிய பின்னணியை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் அஸ்வின் கக்கமானுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அந்த உண்மைகள் என்ன? அதற்கும் அவருடைய உணவகத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? என்பது தான் ‘பீட்சா 3’ படத்தின் கதை.
பேய் படங்கள் என்றாலே பின்னணியில் பழிவாங்கும் படலம் இருக்க வேண்டும், என்பது எழுதப்படாத சட்டம் போல் ஆகிவிட்டாலும், அதை கொஞ்சம் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி, சில படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர். அப்படிப்பட்ட படமாக ‘பீட்சா 3’ இருக்கிறதா? என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
படம் தொடங்கி இடைவேளை வரை என்ன நடக்கிறது? என்று தெரியாமல் ரசிகர்களை குழப்பியிருக்கும் இயக்குநர், இரண்டாம் பாதியில் வழக்கமான பாணியில் கதை சொல்லி ரசிகர்களை சோர்வடைய செய்கிறார்.
கதை மற்றும் திரைக்கதையில் கோட்டை விட்ட இயக்குநர் திகில் காட்சிகளிலாவது கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிலும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியிருக்கும் இயக்குநர் மோகன் கோவிந்த், பேய் தயாரிக்கும் சிவப்பு இனிப்பை வைத்து நம்மை பயமுறுத்த முயற்சித்திருப்பது பெரும் சோகம்.
நாயகன் அஸ்வின் கக்குமானு முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களை நினைத்து குழப்பமடைவது, காதலியின் அண்ணன் கொடுக்கும் தொல்லை என அனைத்து காட்சிகளிலும் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
ஆவிகளுடன் பேசுவதற்கான ஆப்பை உருவாக்கும் நாயகி பவித்ரா மாரிமுத்து, அவரது அண்ணனாக நடித்திருக்கும் கவுரவ் ஆகியோரது கதாபாத்திரம் திரைக்கதையோடு ஒட்டாமல் பயணித்தாலும், அவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
அனுபமா குமார், அபி நக்ஷத்ரா, கவிதா பாரதி, காளி வெங்கட், வீரா உள்ளிட்ட படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் வெளிச்சம் குறைவான இடங்களில் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருந்தாலும், தனது கேமரா கண்கள் மூலம் பார்வையாளர்களுக்கு திகில் அனுபவத்தை கொடுக்க தவறியிருக்கிறார்.
அருண் ராஜின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பின்னணி இசை சில இடங்களில் கைகொடுத்தாலும், பல இடங்களில் சாதாரணமாக பயணித்திருக்கிறது.
அபி நக்ஷத்ராவுக்கும், அஸ்வினுக்கும் இடையே இருக்கும் தொடர்பு, பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அதனை தொடர்ந்து அடுத்தடுத்து வரும் காட்சிகள் ஏமாற்றமளிக்கும் வகையில் இருக்கிறது.
சிறுமிக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை பின்னணியாக கொண்ட திகில் கதைக்கு திரைக்கதை அமைத்தலில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘பீட்சா’ முதல் பாகத்தை போல் இந்த மூன்றாம் பாகமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
மொத்தத்தில், ‘பீட்சா 3’ ருசி இல்லை.
ரேட்டிங் 2/5