Feb 10, 2019 11:53 AM

‘பொதுநலன் கருதி’ விமர்சனம்

e8a3af679c081b08cbf585472517da96.jpg

Casting : Karunakaran, Santhosh, Arun Aadhik, Yok Joppi, Imman Annachi, Subiksha

Directed By : Sion

Music By : Hari Ganesh

Produced By : VR Anbuvelraja

 

கந்து வட்டி பிரச்சினையில் நடுத்தரவர்க்கத்தினர் சிக்கிக் கொண்டு எப்படி சின்னாபின்னமாகிறார்கள், என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘பொதுநலன் கருதி’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

தொலைந்த அண்ணனை தேடும் கால் டாக்ஸி டிரைவரான கருணாகரன், கந்து வட்டி தொழில் செய்யும் தாதாவிடம் விஸ்வாசமாக வேலை பார்க்கும் சந்தோஷ், பிழைப்புக்காக சென்னைக்கு வந்து, வந்த இடத்தில் காதலால், கந்து வட்டி கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் அருண் ஆதிக், என மூன்று ஹீரோக்களை சுற்றி கதை நடக்கிறது. இந்த மூவரும் கந்து வட்டி கும்பல் மூலம் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டிருப்பதும், கந்து வட்டி மாபியாவால் இவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினையும், அதில் இருந்து இவர்கள் விடுபட்டார்களா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை.

 

கந்து வட்டியால் நடுத்தர குடும்பத்தினர் எப்படி பாதிக்கப்படுகிறர்கள், என்பதை காட்சியின் மூலம் காட்டாமல் சில வசனங்கள் மூலமாக சொல்லியிருக்கும் இயக்குநர், கந்து வட்டி மாபியாக்களுக்கு இடையே இருக்கும் தொழில் போட்டிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

 

கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதிக் ஆகிய மூன்று ஹீரோக்களுக்கு ஜோடியாக அனு சித்தாரா, சுபிக்‌ஷா, லீசா ஆகிய மூன்று ஹீரோயின்கள். இவர்களில் சுபிக்‌ஷா மற்றும் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை மட்டுமே கவனிக்க வைக்கிறார். கருணாகரன் எப்போதும் போல தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார். கந்து வட்டி தாதாவின் அடியாளாக இருக்கும் சந்தோஷின் கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பும் சபாஷ் சொல்ல வைக்கிறது. இதுவரை மென்மையான வேடங்களில் நடித்து வந்த சந்தோஷுக்கு இப்படம் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்திருக்கிறது.

 

வில்லனாக நடித்திருக்கும் யோக் ஜாப்பி மற்றும் பாபு ஜெயின் என்ற வேடத்தில் நடித்திருக்கும் வி.ஆர்.அன்புவேல்ராஜா ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

 

ஹரிகணேஷின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு கை கொடுத்திருக்கிறது. அதேபோல், ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

100 ரூபாய் கடன் வாங்க தகுதியுடையவர்களுக்கு 150 ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, அதை 5 ஆயிரம் ரூபாயாக வசூலிப்பது தான் கந்து வட்டி தாதாக்களின் நோக்கம், என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் சீயோன், பணத்தை வசூலிப்பதற்காக எந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார்.

 

அதே சமயம், காட்சிகள் நேர்த்தியான தொடர்ச்சி இல்லாமல், ஏடாகுடமான வெட்டுகளோடும், ஒட்டுகளோடும் இப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

மற்றபடி, கந்து வட்டி மாபியா பற்றி இயக்குநர் சீயோன் அமைத்திருக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது. எடிட்டிங்கில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இப்படம் நல்ல கந்து வட்டி மாபியா ஆக்‌ஷன் படமாக இருந்திருக்கும்.

 

மொத்தத்தில், தலைப்பில் இருக்கும் ‘பொதுநலன் கருதி’ படத்தில் இல்லை என்பதே உண்மை.

 

ரேட்டிங் 2.5/5