’பொய்க்கால் குதிரை’ திரைப்பட விமர்சனம்
Casting : Prabhu Deva, Varalakshmi Sarathkumar, Raiza Willson, John Kokken, Jegan
Directed By : Santhosh P.Jayakumar
Music By : D.Imman
Produced By : S.Vinoth Kumar
விபத்து ஒன்றில் தனது மனைவியையும், ஒரு காலையும் இழந்த பிரபு தேவா, தனது மகள் தான் உலகம் என்று வாழ்ந்துக்கொண்டிருக்க, அவரது மகள் உடல் நிலை பாதிக்கப்படுகிறார். அவரை காப்பாற்ற நிறைய பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்திற்காக தவறான பாதையில் பயணிக்க பிரபு தேவா முடிவு செய்கிறார். ஆனால், அவரது பயணத்தில் நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள், அவரை வேறு ஒரு பாதையில் பயணிக்க வைக்க, இறுதியில் அவர் தனது மகளை காப்பாற்றினாரா இல்லையா? என்பதை பல திருப்பங்களுடன் சொல்வது தான் ‘பொய்க்கால் குதிரை’ படத்தின் கதை.
நடன புயலாக இருக்கும் பிரபு தேவா இந்த படத்தில் நடிப்பு புயலாக மாறியிருக்கிறார். ஒரு கால் இல்லாதவராக சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு காலில் நடனம் ஆடுவது, சண்டைப்போடுவது, நடப்பது என்று அனைத்து இடங்களிலும் கவனமாக செயல்பட்டிருக்கும் பிரபு தேவா, தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ரைசா வில்சனுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
வரலட்சுமி சரத்குமாரின் கம்பீரமான நடிப்பும், அவரது ஸ்கிரீன் பிரசன்ஸும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஜான் கொக்கேனின் கதாப்பாத்திரம் யூகிக்கும்படி இருந்தாலும், கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்து கவர்கிறார்.
காமெடி நடிகராக அறியப்பட்ட ஜெகனுக்கு இந்த படத்தில் கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் பொறுப்பை உணர்ந்து நடித்து கவனம் பெறுகிறார்.
சிறுமி ஆரியாவின் நடிப்பு சிறப்பு. ஒரு காட்சியில் மட்டும் வரும் ஷாம், படத்தின் இரண்டாம் பாதிக்கு வித்திட்டு செல்கிறார்.
ஒளிப்பதிவாளர் பள்ளு ஒற்றை காலுடன் இருக்கும் பிரபு தேவாவை காட்டிய விதம் ஆச்சரியம் அளிக்கிறது. அவரது ஒற்றைக்கால் கிராபிக்ஸா அல்லது காலை மடித்து நடித்தாரா, என்பது தெரியாதவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
பிரபு தேவாவின் அடையாளமான நடனத்தை பின்னுக்கு தள்ளி அவர் உள்ளே இருக்கும் நடிகரை வெளிக்கொண்டு வந்திருக்கும் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், அவரை ஒற்றைக்காலுடன் நடிக்க வைத்திருப்பது கவனம் ஈர்ப்பது போல், கதையில் வரும் திருப்புமுனைகள் க்ளைமாக்ஸ் வரை படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.
இப்படி தான் இந்த காட்சி முடியும் என்று காட்டிவிட்டு அந்த காட்சியின் இறுதியில் இயக்குநர் வைக்கும் ட்விஸ்ட் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்கிறது. அதிலும், இறுதியில் வில்லன் தான் போட்ட திட்டத்தை சொல்ல, அதற்கு எதிராக பிரபு தேவா போட்ட திட்டத்தை விவரிக்கும் காட்சி சபாஷ் போட வைக்கிறது.
மொத்தத்தில், ‘பொய்க்கால் குதிரை’ வெற்றி பெறுவது உறுதி.
ரேட்டிங் 4/5