Nov 19, 2021 01:30 PM

’பொன் மாணிக்கவேல்’ விமர்சனம்

225b0d48b42faaf8f3a79ed28eb14075.jpg

Casting : Prabhu Deva, Nivetha Pethuraj, Suresh Menon, Suthansu Pandey, Director Mahendran

Directed By : AC Mugil Chellappan

Music By : D.Imman

Produced By : Nemichand Jhabak and V.Hitesh Jhabak

 

நேர்மையான போலீஸ் அதிகாரியான பிரபுதேவா, தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் செய்துக்கொண்டிருக்கிறார். சென்னையில் ஒரு கொடூரமான கொலை நடக்க, அந்த கொலை வழக்கிற்காக காவல்துறை பிரபுதேவாவின் உதவியை நாடுகிறது. இதனால், மீண்டும் காக்கி சட்டை அணியும் பிரபுதேவா, நேர்மையை ஒதுக்கி வைத்துவிட்டு குறுக்கு வழியில் சென்று குற்றவாளிகளை எப்படி களையெடுக்கிறார் என்பது தான்‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் கதை.

 

90-களில் நாம் பார்த்த போலீஸ் கதையை எவ்வித மாற்றமும் இன்றி, திரைக்கதையும், திகட்ட திகட்ட காட்சிகளும் அமைத்து நம்மை திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள்.

 

போலீஸ் அதிகாரி வேடத்தில் மிடுக்காக நடக்கும் பிரபுதேவா, எப்போதும் போல் கிடைக்கும் வாய்ப்புகளில் குட்டியாக ஒரு டான்ஸ் மூமெண்ட் போடுவதில் மும்முரம் காட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருபவர், கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை விட, தனக்கு என்ன வருமோ அதை சரியாக செய்திருக்கிறார். 

 

பிரபுதேவா இளைப்பாறுவதற்காக வைக்கப்பட்ட ஒரு கதாப்பாத்திரம் போல வலம் வருகிறார் படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜ். 

 

கார்ப்பரேட் வில்லன்களாக நடித்திருக்கும் சுரேஷ் மேனன், சுதன்சு பாண்டே ஆகியோரது கதாப்பாத்திரங்கள் பெரிய மனிதர்களின் கேவலமான சிறிய புத்தியை பிரதிபலிக்கிறது.

 

இயக்குநர் மகேந்திரன், பாகுபலி பிரபாகர், தான்யா ஆகியோரது பங்களிப்பில் பங்கம் இல்லை.

 

ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளார். டி.இமான் எப்போதும் போல பழைய மொலோடி மெட்டுக்களில் இரண்டை அவிழ்த்து விட்டதோடு, பின்னணி இசையை சுமாரான முறையில் அமைத்திருக்கிறார்.

 

பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும், ஒரு காவல்துறை அதிகாரி, தனது துறைக்காக பணியாற்றுவதை விட, மக்களுக்காக பணியாற்றுவதே சரியானது, என்பதையும் வலியுறுத்தும் இயக்குநர் ஏ.சி.முகில் செல்லப்பனை தாராளமாக பாராட்டலாம்.

 

ஆனால், தனது கருத்தை அவர் சொல்ல தேர்ந்தெடுத்திருக்கும் முறை மிக பழமையாக இருப்பதால், ஒரு திரைப்படமாக ரசிக்க முடியாமல் போகிறது.

 

பிரபுதேவாவை போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பதே புது முயற்சி என்று கருதியிருக்கும் இயக்குநர் ஏ.சி.முகில் செல்லப்பன், கோடம்பாக்கமே மறந்த பழைய பார்முலா போலீஸ் கதையை, அதே பழைய பாணியில் சொல்லியிருக்கிறார்.

 

ஒரு குத்துப்பாட்டு, ஒரு ரொமான்ஸ் பாட்டு, ஒரு சோகப்பாட்டு, மூன்று ஆக்‌ஷன் காட்சிகள், சில திருப்புமுனை காட்சிகள் என பழமையான வழியில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர், பிரபுதேவாவுக்கும், நிவேதா பெத்துராஜுக்கும் திருமணம் நடந்து எப்படி? என்பதற்காக ஒரு பிளாஷ் பேக் வைத்து, அதில் ஒரு முதல் இரவுக் காட்சியை வைக்காமல் இருந்தது, பெரும் ஆறுதல். 

 

மொத்தத்தில், ‘பொன் மாணிக்கவேல்’ என்ற பெயரில் இருக்கும் ஈர்ப்பு படத்தில் இல்லை என்பதே உண்மை.

 

ரேட்டிங் 2.5/5