’பொன்னியின் செல்வன் 2’ திரைப்பட விமர்சனம்
Casting : Vikram, Karthi, Jeyam Ravi, Aishwarya Rai, Trisha, Sathkumar, Parthiban, Aishwarya Lakshmi, Vikram Prabhu, Prakash Raj
Directed By : Manirathnam
Music By : AR Rahman
Produced By : Lyca Productions - Subaskaran
அருண்மொழி வர்மனும், வந்தியதேவனும் கடலில் மூழ்குவது மற்றும் ஆதித்த கரிகாலனை பழி தீர்க்க துடிக்கும் நந்தினியின் கோபம் ஆகியவற்றுடன் ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் முடிந்தது.
கடலில் மூழ்கிய அருண்மொழி வர்மனும், வந்தியதேவனும் உயிர் பிழைத்து வருகிறார்கள். அதே சமயம், அருண்மொழி வர்மன், ஆதித்ய கரிகாலன் மற்றும் அவர்களின் தந்தை ராஜேந்திர சோழன் ஆகிய மூவரையும் ஒரே சமயத்தில் கொலை செய்ய சதி திட்டம் தீட்டும் நந்தினியின் எண்ணம் நிறைவேறியதா? இல்லையா?, நந்தினியின் சதி திட்டத்தை அறிந்துக் கொள்ளும் வந்தியதேவனின், ஆதித்ய கரிகாலனை காப்பாற்றும் முயற்சி வெற்றி பெற்றதா?, உயிர் பிழைத்த அருண்மொழி வர்மன் முடி சூட்டிக்கொண்டாரா? ஆகிய கேள்விகளுடன் நந்தினியின் பிறப்பின் ரகசியத்தையும் சொல்வது தான் ‘பொன்னியின் செல்வன் 2’-வின் கதை.
முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் அதிகமான போர்க் காட்சிகளும், அரசியல் தந்திரக் காட்சிகளும் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களை, படத்தின் துவக்கத்திலேயே காதல் காட்சிகளில் மூழ்கடித்து சற்று ஏமாற்றம் அளித்தாலும், நந்தினியின் சதி திட்டமும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்களும் படத்தை எதிர்பார்ப்புடன் பயணிக்க வைக்கிறது.
ஆதித்ய கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம், போர் வீரராக கம்பீரமாக நடித்திருப்பதோடு, நந்தினியின் காதலனாக அவர் கலங்கும் காட்சிகள் கைதட்டல் பெறுகிறது. தனக்கு எதிராக சதி நடப்பதை அறிந்த பிறகும், அந்த இடத்திற்கு செல்லும் விக்ரம், நந்தினி உடனான காதலை வெளிப்படுத்தும் இடத்தில் கோபம், இயலாமை, காதல் என அனைத்து பாவங்களையும் வெளிப்படுத்தி நடிப்பில் மிரட்டுகிறார்.
வந்தியதேவனாக நடித்திருக்கும் கார்த்தி, தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் மட்டும் இன்றி திரிஷாவுடனான காதல் காட்சிகளிலும் கவனம் பெறும் கார்த்தி, அவ்வபோது நம்மை சிரிக்கவும் வைக்கிறார்.
விக்ரம் மற்றும் கார்த்தி இருவரை காட்டிலும் ஜெயம் ரவிக்கான காட்சிகள் குறைவு என்றாலும், அதில் நிறைவாக நடித்து மனதில் நிற்கிறார்.
முதல் பாகத்தில் அழகில் மட்டும் இன்றி நடிப்பிலும் ரசிகர்களை அசரடித்த திரிஷா, இந்த பாகத்திலும் அழகு தேவதையாக வலம் வருகிறார். ஆனால், முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் அவருக்கான முக்கியத்துவம் குறைவாகவே இருக்கிறது.
முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் அதிகமான வாய்ப்பு ஐஸ்வர்யா ராய்க்கு தான். அதை சரியாக பயன்படுத்தி பாராட்டும்படி நடித்திருக்கிறார். இறுதியில் அவரது முடிவு கலங்க வைக்கிறது.
ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பாபு ஆண்டனி, நிழல்கள் ரவி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கிறார்கள், அனைவரும் அவர்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தை உலகத்தரத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது. நட்சத்திரங்களை மட்டும் இன்றி முழு படத்தையும் ரசித்து பார்க்கும் விதத்தில் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பவர், ஒவ்வொரு காட்சியிலும் தனது கைவண்ணத்தை காட்டியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருப்பதோடு, திரும்ப திரும்ப கேட்கும் ரகமாகவும் இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
”பிரமாண்டமாக எடுக்கும் எண்ணத்தோடு இந்த படத்தை எடுக்கவில்லை” என்று இயக்குநர் மணிரத்னம் பல முறை சொல்லிவிட்டார். அதனால், படத்தில் அதை எதிர்பார்க்க முடியாது. ஆனால், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நட்சத்திரஙகள் வசனம் பேசும் காட்சிகள் அதிகமாக இருப்பது படத்தை தொய்வடைய செய்கிறது.
இருப்பினும், நந்தினியின் பிறப்பின் பின்னணி, ஆதித்ய கரிகாலனுக்கு எதிராக நடக்கும் சதி திட்டம் மற்றும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் படத்தை எதிர்பார்ப்புடன் நகர்த்தி ரசிக்க வைக்கிறது.
‘பொன்னியின் செல்வன்’ நாவலை படிக்காதவர்களுக்கு அந்த புத்தகத்தை படிக்கும் உணர்வை கொடுத்திருக்கும் மணிரத்னம், படித்தவர்களுக்கு மனதுக்கு நெருக்கமான திரைப்படமாக கொடுத்ததில் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறார்.
ரேட்டிங் 4/5