Sep 30, 2022 08:53 PM

’பொன்னியின் செல்வன்’ திரைப்பட விமர்சனம்

dd7a1eb5129f08ba25cedc8ef273e604.jpg

Casting : Vikram, Jayam Ravi, Karthi, Aishwarya Rai, Trisha, Sarathkumar, Prakash Raj, Prabhu, Parthipan, Aishwarya Lakshmi

Directed By : Manirathnam

Music By : AR Rahman

Produced By : Lyca Prodcutions - Subashkaran

 

எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக கொண்டு,  இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.

 

தஞ்சை மன்னன் சுந்தர சோழனுக்கு  ஆதித்ய கரிகாலன், அருண்மொழி வர்மன் என்ற இரண்டு மகன்கள் மற்றும் குந்தவை என்ற ஒரு மகள் இருக்கிறார். 

 

காதல் தோல்வியால் தஞ்சையில் இருந்து வெளியேறி பல்வேறு தேசங்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார் ஆதித்ய கரிகாலன். தந்தையின் கட்டளைபடி சோழ மண்ணுக்காக வாள் ஏந்தி போரிடும் அருண்மொழி வர்மன், இலங்கை மீது போர் தொடுத்து வெற்றி பெற்று இலங்கையில் சோழ கொடியை பறக்க விடுகிறார்.

 

இதற்கிடையே, தஞ்சை அரியணையை கைப்பற்றுவதற்காக சுந்தர சோழரின் அண்ணன் மகன் மதுராந்தகன், சிற்றரசர்கள் மூலம் சதி திட்டம் போடுகிறார். மறுபக்கம் சோழர்களிடம் தோல்வியடைந்த பாண்டியர்கள் சோழ ராஜ்ஜியத்தை அழிப்பதற்கான சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு சோழ ராஜ்ஜியத்தின் முக்கிய நபரான பெரிய பழுவேட்டையரின் மனைவி நந்தினி உதவி செய்கிறார்.

 

சோழ ராஜ்ஜியத்திற்கு எதிராக உருவெடுத்திருக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்துகொள்ளும் இளவரசி குந்தவை, ஆதித்ய கரிகாலனின் நண்பன் வந்தியதேவன் உதவியோடு, தனது சகோதரர்களை தஞ்சைக்கு வரவைத்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து தஞ்சை ராஜ்ஜியத்தை காப்பாற்ற திட்டம் போடுகிறார். அந்த திட்டத்தில் குந்தவை வெற்றி பெற்றாரா?, இல்லையா?  என்பது தான் ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’.

 

ஆதித்ய கரிகாலன் வேடத்தில் நடித்திருக்கும் விக்ரம், அருண்மொழி வர்மன் வேடத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி, வந்தியதேவன் வேடத்தில் நடித்திருக்கும் கார்த்தி, குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷா, நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டையர் வேடத்தில் நடித்திருக்கும் சரத்குமார், சிறிய பழுவேட்டையர் வேடத்தில் நடித்திருக்கும் பார்த்திபன், சுந்தர சோழர் வேடத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை திறம்பட செய்திருப்பதோடு, 100 சதவீதம் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.

 

காதல் தோல்வியால் தனது குடும்பத்தின் மீது கடும்கோபம் கொண்டவராக இருக்கும் ஆதித்ய கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம், தனது கோபம் மற்றும் காதலை தன் கண்களினாலேயே வெளிப்படுத்துகிறார். வரது ஆக்ரோஷமான நடிப்பும், ஆக்‌ஷனும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.

 

பொன்னியின் செல்வனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, நிதானமாக இருந்தாலும் மாபெரும் ராஜ்ஜியத்தின் இளவரசருக்கு உண்டான தோற்றத்துடன் இருப்பதோடு, நடிப்பிலும் அதை பிரதிபலித்திருக்கிறார்.

 

வந்தியதேவனாக படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை வரும் கார்த்தி, சண்டைக்காட்சிகளில் அதிரடியை காட்டுவதோடு, அவ்வபோது தனது நக்கலான பேச்சால் சிரிக்க வைக்கிறார். இடை இடையே அழகு பெண்களிடம் அழகாகவும், கவித்துவமாகவும் பேசி கவர்கிறார்.

 

ரவிவர்மனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, தன்னால் முடிந்த அளவுக்கு காட்சிகளை பிரமாண்டமாக காட்ட அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். கதாப்பாத்திரங்களின் உணர்வுகளையும், அவர்கள் மூலம விரிவடையும் கதையையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிக கவனமாகவும் இருந்திருக்கிறார்.

 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாகவும், துடிப்பாகவும் இருக்கிறது. ஆனால், மனதில் நிற்க மறுக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருந்தாலும், கவனம் பெறும் விதத்தில் இல்லை. 

 

பி.ஜெயமோகனின் வசனங்கள் அனைத்து தரப்பினருக்கும் புரியும் படி மிக எளிமையாக இருக்கிறது. மிகப்பெரிய நாவலை மக்களுக்கு புரியும்படி மணிரத்னம் மற்றும் இளங்கோ குமரவேல் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.

 

தோட்டா தரணியின் கலை, கதாப்பாத்திரங்களின் ஆடை வடிவமைப்பு மன்னர் காலத்தில் இருக்கும் உணர்வை கொடுக்கிறது. ஸ்ரீகர்பிரசாத்தின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்துகிறது.

 

‘பொன்னியின் செல்வன்’ நாவலை படித்தவர்களுக்கு, அதை ஒரு திரைப்படமாக பார்க்கும் எதிர்பார்ப்பு, நாவலை படிக்காதவர்களுக்கு அதன் கதை என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் எதிர்பார்ப்பு, என இரு தரப்பினரின் எதிர்பார்ப்பையும் படம் முழுமையாக பூர்த்தி செய்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.

 

ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் பின்னணியும், அதில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு மற்றும் அந்த கதாப்பாத்திரங்களில் இருக்கும் திருப்புமுனை ஆகியவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது. குறிப்பாக நடிகர்களுக்கு இணையாக நடிகைகளின் கதாபாத்திரமும் பலம் வாய்ந்தவைகளாக இருப்பதும், அவர்களுக்கான காட்சிகளும் படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது.

 

போர்க்கள காட்சிகள் பிரமிப்பை தரக்கூடிய விதத்தில் இல்லை என்றாலும், குறை சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கிராபிக்ஸ் என்பதே தெரியாதவறு காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக கடலில் நடக்கும் சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.

 

தொழில்நுட்ப ரீதியாக காட்சிகளை பிரமாண்டமாக காட்டுவதோடு நின்றுவிடாமல், கதாப்பாத்திரங்களின் உணர்வுகளையும், கதாபாத்திரங்களின் வலிமையையும் படம் பார்ப்பவர்கள் உணரக்கூடிய விதத்தில் காட்சிகள் கையாளப்பட்டிருக்கிறது.

 

மிகப்பெரிய கடல் சண்டைக்காட்சியோடு முடியும் முதல் பாகம், அருண்மொழி வர்மனுக்கு என்ன நேர்ந்தது? என்ற கேள்வியோடு இரண்டாம் பாகத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

 

தமிழர்கள் கொண்டாடும் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் இன்று தமிழர்கள் கொண்டாடும் திரை காவியமாக உருவெடுத்ததற்கு சுபாஷ்கரனின் மிகப்பெரிய பொருட்செலவு முக்கிய காரணம்.

 

எனவே, இயக்குநர் மணிரத்னம், படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்களை தாண்டி, இப்படத்திற்கான அனைத்து பெருமைகளுக்கும் சொந்தக்காரர் என்றால் அது லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தான். 

 

மொத்தத்தில், ‘பொன்னியின் செல்வன்’ சாதித்தான்.

 

ரேட்டிங் 4/5