Oct 12, 2019 07:42 PM

’பப்பி’ விமர்சனம்

d8b76e61ac29ff83ada0b9792a0f8711.jpg

Casting : Varun, Samyuktha Hegde, Yogi Babu

Directed By : Nattu Dev

Music By : Dharan Kumar

Produced By : Ishari K. Ganesh

 

அறிமுக இயக்குநர் நட்டு தேவ் இயக்கத்தில், வருண், சக்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோரது நடிப்பில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘பப்பி’ எப்படி என்று பார்ப்போம்.

 

பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவரான வருண், வயது கோளாறு காரணமாக ஆபாசப் படம் பார்ப்பது, ஆபாச புத்தகம் படிப்பது, அதைப்பற்றியே பேசுவது என்று எந்த நேரம் அந்த நினைவாகவே இருக்கிறார். அவரது நண்பர்கள் அனைவரும் காதலியுடன் ஜாலியாக இருக்க, தனக்கு மட்டும் அப்படி எதுவும் அமையவில்லையே என்று கவலைப்படும் வருணுக்கு, நாயகி சம்யுக்தா ஹெக்டேவின் நட்பு கிடைக்க, பிறகு அதுவே காதலாக மாறுகிறது. காதலியிடமும் தனது சபலத்தை அவ்வபோது வெளிப்படுத்தும் வருண், ஒரு கட்டத்தில் சக்யுக்தாவின் அனுமதியோடு அவருடன் உறவு வைத்துக்கொள்கிறார். இதனால், தான் கர்ப்பமடைந்துவிட்டதாக சக்யுக்தா சந்தேகப்பட, வருணோ பெற்றோர்களை நினைத்து பயப்பட, இதனால் இவர்களது காதல் எதை நோக்கி பயணிக்கிறது, என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

எதை எப்படி வேண்டுமானாலும் சொல்லி இளைஞர்களை கவர்ந்துவிட வேண்டும் என்ற ரீதியில் வெளியாகும் அடல்டு படங்களுக்கிடையே, இளைஞர்களுக்கு நல்ல மெசஜ் சொல்லும் அடல்டு கம் பேமிலி படமாக இப்படம் உள்ளது.

 

சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் வருண், இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். நடிப்பு, நடனம் என இரண்டிலுமே பாஸ் மார்க் வாங்கும் வருண், இளைஞர்களுக்கான அத்தனை உணர்ச்சிகளையும் தனது நடிப்பில் பளிச்சென்று வெளிப்படுத்தியிருக்கிறார். செல்போனில் ஆபாசம் படம் பார்ப்பது முதல் தனது காதலிக்கு எப்படியாவது ஒரு முத்தம் கொடுத்துவிட வேண்டும் என்று துடிப்பது வரை, ஒட்டு மொத்த முரட்டு சிங்கிள் இளைஞர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார். தனது நாய் உயிருக்கு போராடும் போது, வெளிப்படுத்தும் நடிப்பால் மொத்த வித்தையையும் இறக்குபவர், சில இடங்களில் கொஞ்சம் ஓவராக நடிப்பது போலவும் தோன்றுகிறது. அதை சரிக்கட்டிவிட்டால் வருணுக்கு கோலிவுட்டில் நிரந்தரமான இடம் உண்டு.

 

ஹீரோயின் சக்யுக்தா ஹெக்டே பக்கத்து வீட்டு பெண் போல சாதாரணமாக இருக்கிறார். ஆனால், இந்த கதைக்கு அது பொருந்தவில்லை. முகத்தில் நடிப்பை காட்டினாலும், ரசிகர்களை கவரும் அளவுக்கு ஈர்ப்பு இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது.

 

படம் முழுவதும் வரும் யோகி பாபு, அவ்வபோது தனது டைமிங் வசன உச்சரிப்பால் சிரிக்க வைக்கிறார். சீரியஸான இடங்களில் கூட சிரித்துவிடும் அளவுக்கு யோகி பாபு காட்சிகள் அத்தனையும் ரிலாக்ஸாக இருக்கிறது.

 

தரண் குமாரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு மிரட்டல். குறிப்பிட்ட சில லொக்கேஷன்களை திரும்ப திரும்ப காண்பித்தாலும், அதை வெவ்வேறு கோணத்தில் காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது.

 

குறிப்பிட்ட வயது வந்துவிட்டால் மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் பாலியல் ரீதியிலான சிந்தனைகள் வருவது சகஜமான ஒன்று தான், என்பதை நாயை எடுத்துக்காட்டாக வைத்து சொல்லியிருக்கும் இயக்குநர் காதலுக்கு முன்பான உறவு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், அந்த பிரச்சினைகளில் இருந்து வெளிவர இளசுகள் எடுக்கும் முடிவு எவ்வளவு பெரிய தவறு என்பதையும் கூட நாயை எடுத்துக்காட்டாக வைத்து சொல்லியிருப்பது திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனம்.

 

காதலுக்கு முன்பு உறவு வைத்துக்கொள்ள விரும்பும் காதலர்களுக்கு எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டிய படம். ஆனால், இயக்குநர் நட்டு தேவ், அதை சீரியஸாக சொல்லாமல், சாதாரணமாக சொல்லியிருப்பதால், மனதில் அழுத்தமாக பதியவில்லை.

 

ரேட்டிங் 2.5/5