’கொட்டேஷன் கேன்’ (Quotation Gang) திரைப்பட விமர்சனம்
Casting : Priya Mani, Jackie Shroff, Sunny Leone, Sara Arjun, Akshaya
Directed By : Vivek K Kannan
Music By : Drums Shivamani
Produced By : Filminati Entertainment - Gayathri Suresh and Vivek Kumar Kannan
கூலிக்கு கொலை செய்யும் கூட்டத்தைச் சேர்ந்த பிரியா மணி, தனது கூட்டத்தின் தலைவர் ஜாக்கி ஷெரப்புக்காக எதையும் செய்ய துணிந்தவர். பணத்திற்காக யாரை வேண்டுமானாலும் கொடூரமாக கொலை செய்பவராக இருந்தாலும், இரக்க குணம் கொண்டவராகவும் இருக்கும் பிரியாமணிக்கு, அந்த நல்ல குணத்தாலே மிகப்பெரிய ஆபத்து வருகிறது. அந்த ஆபத்து அவரை மட்டும் இன்றி அவருடன் இருப்பவர்களையும் பாதிக்க, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதை இரத்தம் தெறிக்க சொல்வது தான் ‘கொட்டேஷன் கேங்’.
’பருத்திவீரன்’ படத்தில் தனது மொத்த வித்தையையும் காட்டி தேசிய விருது வென்றது போல் இதிலும் ஒரு விருதை வென்றுவிடலாம் என்று பிரியாமணி நினைத்தாரோ என்னவோ, வெறித்தனமாக நடித்திருக்கிறார். மது குடிப்பது, புகைப்பிடிப்பது, கொடூரமாக கொலை செய்வது என்று நாயகிகள் செய்ய யோசிக்கும் அத்தனை விசயங்களையும் துணிந்து செய்திருக்கிறார்.
ஜாக்கி ஷெராப், சாரா, அக்ஷயா, சன்னி லியோனி, ஜெயப்பிரகாஷ், பிரதீப் குமார் என படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் போட்டி போட்டு நடித்திருந்தாலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டில் பயணிப்பதால் அவர்களின் முகமும், நடிப்பும் சரியாக தெரியவில்லை.
ட்ரம்ஸ் சிவமணியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓரளவு கைகொடுத்திருக்கிறது. அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், இரவு நேர காட்சிகள் அனைத்தும் இருள் சூழ்ந்த காட்சிகளாகவே இருப்பதால், நடிகர்களின் முகங்களை திரையில் தேட வேண்டியுள்ளது.
எழுதி இயக்கியிருக்கும் விவேக் கே.கண்ணன், ஆக்ஷன் கதைக்கு அமைத்திருக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகள் வன்முறை நிறைந்தவையாக மட்டும் இன்றி, இரத்தக்கறை படிந்தவையாகவும் இருக்கிறது. குத்துவதும், வெட்டுவதும் என்று பயணிக்கும் படம் ஒரு கட்டத்தில் பார்வையாளர்களையே பதற வைத்து திரையரங்கை விட்டு ஓட வைத்துவிடுகிறது.
மொத்தத்தில், இந்த ‘கொட்டேஷன் கேங்’ கொடூரம்.
ரேட்டிங் 2.5/5