’ராஜவம்சம்’ விமர்சனம்
Casting : Sasikumar, Nikki Galrani, Yogi Babu, Vijayakumar
Directed By : KV Kathirvelu
Music By : Sam CS
Produced By : TT Raja and DR Sanjay Kumar
40-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்ல பிள்ளையான நாயகன் சசிகுமார், சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அந்த நிறுவனம் மிகப்பெரிய புரொஜக்ட் ஒன்றை சசிகுமாருக்கு கொடுக்கிறது.
சசிகுமாரின் குடும்பத்தார் அவருக்கு திருமணம் செய்து வைப்பதில் மும்முரம் காட்ட, நிறுவனம் கொடுத்த பணியை செய்து முடித்த பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும், என்று முடிவு எடுக்கும் சசிகுமார், தனது நிறுவனத்தில் பணியாற்றும் நிக்கி கல்ராணியை தான் காதலிப்பதாக குடும்பத்தாரிடம் நாடகம் ஆட, அந்த நாடகத்தால் ஏற்படும் விளைவுகளே படத்தின் மீதிக்கதை.
ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சசிகுமாரின் உடல் தோற்றத்தில் பல மாறுதல்கள் தெரிந்தாலும், நடிப்பில் அதே பழைய சசிகுமாராகவே பவனி வருகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.
விஜயகுமார் மற்றும் சுமித்ரா தம்பதி தலைமையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு காட்சியில் வந்தாலும் கூட, பெரும்பாலான நடிகர்கள் அவுட் ஆப் போக்கசிலேயே இருக்கிறார்கள்.
சசிகுமாரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வரும் யோகி பாபு வரும் காட்சிகள் பல இருந்தாலும், சில காட்சிகள் மட்டும் நம்மை சிரிக்க வைக்கிறது.
கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் ஒளிப்பதிவாளர் சித்தார்த், கிராமத்து காட்சிகளை அழகாக காட்டியிருக்கிறார்.
சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்துள்ளது.
கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தை நகைச்சுவையாகவும், கமர்ஷியலாகவும் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் கே.வி.கதிர்வேலு, அதனுடன் ஐடி நிறுவனம் மற்றும் தொழில் போட்டி, உலகம் வெப்பமயமாவதால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை சேர்த்து வடிவமைத்திருக்கும் திரைக்கதை சலிப்படைய வைக்கிறது.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு, குடும்ப நகைச்சுவை படத்தை எடுக்க கூடிய அனைத்து வாய்ப்புகள் இருந்தும் இயக்குநர் பல இடங்களில் தடுமாறியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ராஜவம்சம்’ ரசிகர்களை வசப்படுத்த தவறிவிட்டது.
ரேட்டிங் 2/5