’இராக்கதன்’ திரைப்பட விமர்சனம்
Casting : Vamsi Krishna, Riyaz Khan, Dinesh Kalaiselvan, Vignesh Baskar, Gayatri Rema, Chaams, Sanjana Singh Nizhalgal Ravi
Directed By : Dinesh Kalaiselvan
Music By : Praveen Kumar
Produced By : Mag Baskar
மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் விக்னேஷ் பாஸ்கர், அந்த வாய்ப்பு கிடைத்து சில மாதங்களில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவரது அருகில், அந்த ஓட்டலின் உரிமையாளரான ரியாஷ் கானும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி வம்சி கிருஷ்ணா, கொலைக்கான பின்னணி மற்றும் கொலை செய்தவரை எப்படி கண்டுபிடிக்கிறார், எதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்ற ரீதியில் கதை நகர்கிறது.
வில்லனாக நடித்து வந்த வம்சி கிருஷ்ணா, போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். காக்கி உடை அணியவில்லை என்றாலும் சிறப்பு அதிகாரியாக நடிப்பில் காவல்துறையின் கம்பீரத்தை நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார்.
அலெக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன், தன்னை நடிகராக நிரூபிக்கும் வகையில் நடிக்காமல், கதாபாத்திரத்திற்கு எது தேவையோ அதை மட்டும் கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் பாஸ்கர், மாடலிங் துறை மீது ஆசைப்பட்டு அழிவை நோக்கி பயணிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
சிறிய பட்ஜெட் படங்களின் திரிஷாவாக வலம் வரும் காயத்ரி ரெமா, வழக்கம் போல் தனது கதாநாயகி கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார்.
நட்சத்திர ஓட்டலின் அதிபராக நடித்திருக்கும் ரியாஸ் கான், மாறுபட்ட வேடத்தில் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவரது வேடம் மட்டும் இன்றி அவரது அனுபவம் வாய்ந்த நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
நிழல்கள் ரவி, சாம்ஸ், சஞ்சனா சிங் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
மானஸ் பாபுவின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. பிரவீன் குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு.
எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன், மாடலிங் துறை என்ற மாயை உலகத்தில் மறைந்திருக்கும் ஆபத்துக்களை வெளி உலகத்திற்கு சொல்லும் முயற்சியாக இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ஆண் மாடலிங் பற்றி இதுவரை சொல்லாத பல விசயங்கள் படத்தில் சொல்லப்பட்டிருப்பதோடு, அவற்றை சுவாரஸ்யமாகவும் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் சொல்லியிருக்கிறார்.
ஒரு துறையில் இருக்கும் கருப்பு பக்கங்களை மிக தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன், அதைப் பற்றிய தகவல்களை வைத்து மட்டுமே திரைக்கதை அமைக்காமல், க்ரைம் த்ரில்லர் ஜானரில் நட்பு மற்றும் காதல் ஆகியவற்றையும் சேர்த்து முழுமையான கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார்.
படத்தில் குறைகள் சில இருந்தாலும், சொல்லப்பட்டிருக்கும் கதைக்களம் புதிதாக இருப்பதால் படத்தை ரசிக்க முடிகிறது.
ரேட்டிங் 3/5