’ரெய்டு’ திரைப்பட விமர்சனம்
Casting : Vikram Prabhu, Sri Divya, Ananthika Sanilkumar, Rishi Rithvik, Hareesh Peradi, Soundararaja, Daniel Annie Pope, Velu Prabhakaran
Directed By : Karthi
Music By : Sam C. S.
Produced By : S. K. Kanishk, G. Manikannan
காவல்துறை அதிகாரியான விக்ரம் பிரபு, ரவுடிகளை அழிக்கும் பணியில் தீவிரம் காட்டுகிறார். இதனால் அவருக்கு எதிரிகள் அதிகமாவதோடு, அவரது காதலி ஸ்ரீ திவ்யாவை கொன்றுவிடுகிறார்கள். அதற்கு பழி தீர்க்க களத்தில் இறங்கும் விக்ரம் பிரபு, ஒட்டு மொத்த ரவுடி கூட்டத்தை எப்படி அழிக்கிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் இன்றி பாடல் காட்சியிலும் தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி கதபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ திவ்யா, எங்கே கடைசி வரை திரையில் வராமல் போய்விடுவாரோ என்று ரசிகர்கள் நினைக்கும் விதத்தில் அவருடைய திரை இருப்பு அமைந்திருக்கிறது. அவர் தான் கதையின் மையக்கரு என்றாலும், அவருக்கான வேலை என்னவோ குறைவாக தான் கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அனந்திகா, ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ரிஷி ரித்விக், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். வழக்கம் போல் இறுதிக் காட்சியில் கத்தி சுற்றி கவர்கிறார்.
ஹரிஷ் பெராடி, செளந்தரராஜா, டேனியல், வேலு பிரபாகரன் ஆகியோர் அவ்வபோது வந்து போகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கதிரவனும், இசையமைப்பாளர் சாம்.சி.எஸும் முடிந்தவரை படத்திற்கு பலமாக பயணிக்க முயற்சித்திருக்கிறார்கள்.
’டகுரு’ என்ற கன்னட படத்தின் கதையை தமிழிக்கு ஏற்றபடி எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் கார்த்தி, கதை சொல்லலில் தடுமாறியிருப்பது படம் முழுவதும் தெரிகிறது. நான்லீனர் முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் அதை சுவாரஸ்யமாக சொல்லாமல் ரசிகர்கள் குழப்பமடையும் விதத்தில் சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய குறை.
வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் கதையை, வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் கார்த்தி, ஒரு சில இடங்களில் அதை சரியாக செய்திருந்தாலும், பல இடங்களில் சொதப்பியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘ரெய்டு’ ரவுடிகளை மட்டும் கொல்லவில்லை.
ரேட்டிங் 2/5