Jun 19, 2024 07:29 PM

‘ரயில்’ திரைப்பட விமர்சனம்

26263d7aecb48a201065a656d7126832.jpg

Casting : Kungkumaraj, Vairamala, Parvesh Mehru, Ramesh Vaidya, Senthil Kochadai, Shameera, Bindu, Babu Thanisha, Subash, Thangamani Prabhu, Ramesh Yandhra, Sam Daniel, Rajesh, Ramaiah

Directed By : Baskar Sakthi

Music By : SJ Janani

Produced By : Vediyappan

 

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நாயகன் குங்குமராஜ் எலக்ட்ரிக் வேலை செய்து வந்தாலும், மது பழக்கத்திற்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் எந்த நேரமும் மது குடிப்பதிலேயே நாட்டம் கொண்டிருக்கிறார். இதனால், அவரது மனைவி வைரமாலாவுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் நாயகனை மதிப்பதில்லை. இதனால் விரக்தியில் இருக்கும் நாயகன் தன் கோபத்தை, தன் வீட்டின் எதிரே குடியிருக்கும் வட மாநில வாலிபர் பர்வேஸ் மெஹ்ரூ மீது காட்டுகிறார். ஆனால், அவரது மனைவி வைரமாலா, வட மாநில வாலிபரை தனது சொந்த தம்பியாக நினைத்து பழகுகிறார்.

 

தனது சொந்த ஊருக்கு போகும் சூழலில், பர்வேஸ் வைரமாலாவிடம் ஒரு பையை கொடுக்கிறார். அதை திரும்ப வாங்குவதற்குள் அவர் திடீரென்று மரணமடைய, அவரது இறுதி சடங்கிற்காக அவரது மனைவி, குழந்தை, தந்தை ஆகியோர் தேனி வருகிறார்கள். இறுதிச் சடங்கு முடிந்த பிறகு பர்வேஸ் வைத்திருந்த பணம் பற்றி அவரது குடும்பத்தார் கேட்கிறார்கள். அப்போது தான் வைரமாலாவுகு பர்வேஸ் தன்னிடம் கொடுத்த பை நினைவு வருகிறது. அதை அவர் எடுக்க செல்லும் போது அந்த பை அங்கு இல்லாததால் அதிர்ச்சியடைகிறார். அந்த பை என்ன ஆனது?, பர்வேஸ் குடும்பத்திற்காக வைரமாலா என்ன செய்தார்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் குங்குமராஜ், நாயகியாக நடித்திருக்கும் வைரமாலா இருவரும் மண் சார்ந்த மனிதர்களாக மனதில் நிற்கிறார்கள். முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு மூலம் தங்களது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். தனது இயலாமை மற்றும் விரக்தியை மற்ற நபர்கள் மீது வெறுப்பாக காட்டி குங்குமராஜ் நடிப்பில் ஸ்கோர் செய்தாலும், அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கும் வைரமாலா, பையை தொலைத்துவிட்டு, குற்ற உணர்வில் பர்வேஸ் குடும்பத்தை பார்க்க மறுக்கும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.

 

வட இந்திய வாலிபர் வேடத்தில் நடித்திருக்கும் பர்வேஸ் மெஹ்ரூ, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ரமேஷ் வைத்யா, நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் செந்தில் கோச்சடை, பர்வேஸின் தந்தையாக நடித்திருக்கும் பிண்ட்டூ உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் கேமரா கதை நடக்கும் இடத்துக்கு நம்மையும் அழைத்துச் செல்கிறது.  எஸ்.ஜே.ஜனனியின் இசை காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்திருப்பதோடு, காட்சிகளின் இயல்புத்தன்மை மாறாமல் பயணிக்க வைக்கிறது. 

 

எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் பாஸ்கர் சக்தி, பிழைப்பு தேடி வருவோர் மற்றும் வேறு ஊர்களுக்கு செல்வோர் பற்றிய ஒரு விசயத்தை மிக சாதாரணமாக சொல்லிவிட்டு போனாலும், அதன் மூலம் படம் பார்ப்பவர்களை யோசிக்க வைத்துவிடுகிறார்.

 

வட மாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்பவர்களை ஏளனமாக பார்ப்பவர்கள் மற்றும் பேசுபவர்களுக்கு குட்டு வைக்கும் விதத்தில் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் பாஸ்கர் சக்தி, தமிழக இளைஞர்கள் பெரும்பாலனவர்கள் மதுவுக்கு அடிமையாகி, உழைப்பின் மீது நாட்டம் இல்லாமல் சோம்பேறிகளானதால் தான், வட மாநிலத்தவர்களுக்கு இங்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது, என்பதை அழுத்தமாக சொன்னதோடு “யாராலும் யாரோட வாய்ப்பையும் கெடுக்கவோ பறிக்கவோ முடியாது, நாம சுதாரிப்பா இருந்தா எங்கயும் பிழைக்கலாம்” என்ற விசயத்தை நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘ரயில்’ நெகிழ்ச்சியான பயணம்.

 

ரேட்டிங் 3.5/5