Dec 27, 2024 09:53 AM

’ராஜா கிளி’ திரைப்பட விமர்சனம்

418ba413b6bda3f04fc73602ab0ddd96.jpg

Casting : Thambi Ramaiya, Samuthirakani, Deepa, Praveen Kumar G, Daniel Annie Pope, Pazha Karupaiya, Vetrikumaran, Arul Doss, Suveta Shrimpton, Reshma Pasupaleti, Subha , VJ Andrews, Malik , King Kong

Directed By : Umapathy Ramaiah

Music By : Thambi Ramaiah and Sai Dinesh

Produced By : V House Productions - Suresh Kamatchi

 

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லத்தை நடத்தி வரும் சமுத்திரக்கனி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குப்பையில் இருப்பதை சாப்பிடும் தம்பி ராமையாவை அரவணைத்து தனது இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார். அப்போது அவரிடம் இருக்கும் ஒரு டைரியை படிக்கும் போது, பல தொழில்களுக்கு சொந்தக்காரரான பெரும் செல்வந்தர் முருகப்பன் இவர் தான், என்பது  தெரிய வருகிறது. யார் அந்த முருகப்பன்?, பெரும் செல்வந்தரான அவரது இத்தகைய நிலைக்கு காரணம் என்ன? என்பதை பெண்களுக்கு புத்தி சொல்லும் விதமாக சொல்வதே ‘ராஜா கிளி’.

 

மனநலம் பாதிக்கப்பட்டவராக அறிமுகமாகும் தம்பி ராமையா, அழுக்கு படிந்த கதாபாத்திரத்தை தனது முதிர்ச்சியான நடிப்பு மூலம் மக்களிடம் எளிதில் கடத்தி விடுகிறார். ஆனால், முருகப்பன் என்ற செல்வந்தராக அறிமுகமாகும் அவர் நடை, உடை, நடிப்பு என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டி கவர்ந்தாலும், பெண்கள் மீதான மோகத்தின் போது முருகப்பன் என்ற ஆளுமையை கோமாளியாக சித்தரித்தபடி நடித்து சொதப்பியிருக்கிறார்.

 

சமுத்திரக்கனிக்கு சிறிய வேடம் என்றாலும், முருகப்பன் யார்? என்பதை பர்வையாளர்களுக்கு விவரித்து, இறுதியில் அவருக்காக குரல் கொடுக்கும் நல்ல மனிதராக மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.

 

தம்பி ராமையாவின் மனைவியாக நடித்திருக்கும் தீபா, கணவனின் வளர்ச்சியால் எத்தகைய மகிழ்ச்சியடைகிறார்களோ அதே அளவுக்கு அவர்கள் மீது சந்தேகத்தையும் வளர்த்துக் கொண்டு தங்களது நிம்மதியை தொலைத்து மற்றவர்களின் வாழ்க்கையையும் ஆட்டம் காண செய்யும் மனைவிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

 

தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் சுபா, இளம் காதலியாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீம்ப்டான், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், பழ கருப்பையா, டேனியல் அனி போப், பிரவீன் குமார்.ஜி, ரேஷ்மா, வெற்றிகுமரன், விஜே ஆண்ட்ருஸ், மாலிக், , கிரிஷ், கிங் காங் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் தம்பி ராமையாவின் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையமைத்திருக்கும் சாய் தினேஷ் பணி சிறப்பு. 

 

ஒளிப்பதிவாளர்கள் கேதார்நாத் - கோபிநாத் ஆகியோரது கேமரா, முருகப்பனின் பணக்கார வாழ்க்கையையும், பசி மிகுந்த வாழ்க்கையையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

 

செல்வந்தர் முருகப்பனின் வாழ்க்கை மூலம் தொழில் உள்ளிட்ட பல துறைகளில் வெற்றி பெற்ற பிரபலங்களின் இல்லங்களில் நடமாடும் சந்தேகப் பேய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தனது கதை மற்றும் திரைக்கதை மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் தம்பி ராமையா, உண்மை சம்பவம் ஒன்றை பின்னணியாகக் கொண்டு படத்தை கமர்ஷியலாகவும் கொடுத்திருக்கிறார்.

 

சபலம் மனிதனை எப்படி சறுக்கலை சந்திக்க வைக்கும் என்பதையும், பெண்களின் அவசர புத்தியால் மனிதர்களில் புனிதர்கள் எப்படி குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள், என்பதையும் சினிமா பாணியில் சொன்னாலும், உணர்வுப்பூர்வமான கிளைமாக்ஸ் மூலம் ஒட்டு மொத்த பெண்களுக்கும் பாடம் புகட்டியிருக்கிறார் இயக்குநர் உமாபதி ராமையா. 

 

மொத்தத்தில், ‘ராஜா கிளி’ பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3.5/5