’ராமம் ராகவம்’ திரைப்பட விமர்சனம்

Casting : Samuthirakani, Dhanraj Koranani, Pramothini, Moksha, Harish Uthaman, Sunil, Sathya, Srinivas Reddy, Prithviraj
Directed By : Dhanraj Koranani
Music By : Arun Siluveru
Produced By : Slate Pencil Stories - Prithvi Polavarapu
நேர்மையான அரசு அதிகாரியான சமுத்திரக்கனியின் மகன் தனராஜ் கொரனானி, சிறு வயதில் இருந்தே சரியாக படிக்காமல், சிகரெட் பிடிப்பது, சூதாட்டம் என்று அனைத்து விதமான கெட்டப் பழக்கங்களுடன் வளர்கிறார். மகன் மீது பெரும் அன்பு கொண்டிருக்கும் சமுத்திரக்கனி, என்றாவது ஒரு நாள் அவன் திருந்திவிடுவான் என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார். ஆனால், அவரது மகனோ பணத்திற்காகவும், அப்பாவின் பணிக்காகவும் அவரையே கொலை செய்ய முடிவு செய்ய, அதன் பிறகு நடப்பவைகளை, மகன்கள் அனைவரும் தங்களது அப்பாக்களை நினைத்துப் பார்க்கும்படி மனதுக்கு நெருக்கமாக சொல்வதே ‘ராமம் ராகவம்’.
மகனை திருத்துவதற்காக கண்டிப்பு மற்றும் கோபத்தை வெளிப்படுத்தினாலும், மனதுக்குள் இருக்கும் அன்பை வெளிக்காட்ட முடியாமல் தடுமாறும் தந்தையாக பார்வையாளர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார் சமுத்திரக்கனி. நேர்மையான மனிதர், பாசமிகுந்த அப்பா என படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் தனராஜ் கொரனானி, அப்பாக்களின் மனதை புரிந்துக்கொள்ளாமல், அவர்களை எதிரியாக பார்க்கும் பிள்ளைகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும், செயலில் படம் பார்ப்பவர்களுக்கே அவர் மீது கடும்கோபம் வரும் அளவுக்கு இயல்பாக நடித்து மிரட்டுகிறார்.
சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் பிரமோதினி மற்றும் கதாநாயகியாக நடித்திருக்கும் மோக்ஷா இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சுனில் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. கதையின் மற்றொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு ஹரீஷ் உத்தமனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரும் தனக்கான வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி மக்கள் மனதில் நங்கூரமாக நின்றுவிடுகிறார்.
சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ் ஆகியோர் அழுத்தமான திரைக்கதையை அசுவாசப்படுத்தும் விதமாக, அவ்வபோது சிரிக்க வைக்கிறார்கள்.
அருண் சிலுவேறு இசையில், யுகபாரதி மற்றும் முருகன் மந்திரம் வரிகளில் பாடல்கள் கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பின்னணி இசையும் நேர்த்தி.
ஒளிப்பதிவாளர் துர்கா கொல்லிபிரசாத், தனது கேமரா மூலம் கதாபாத்திரங்களின் மனங்களை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.
சிவபிரசாத் யானாலாவின் கதையும், மாலியின் வசனமும் அழுத்தமான கதைக்களத்திற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் தனராஜ் கொரனானி, அப்பா - மகன் உறவில் இதுவரை சொல்லாத ஒரு விசயத்தை அழுத்தமாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கிறார். படம் பார்ப்பவர்கள் அனைவரும் தங்களது அப்பாவை நினைத்துப் பார்க்கும்படி திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்துள்ள தனராஜ் கொரனானி, ஒரு கதையை எப்படி கையாள வேண்டும் என்ற வித்தையை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்.
மொத்தத்டில், ‘ராமம் ராகவம்’ மனங்களை பாதிக்கும்.
ரேட்டிங் 3.5/5