Jan 24, 2025 08:12 AM

’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ திரைப்பட விமர்சனம்

dafe2146e8a83a3c5ce18d34a93035c1.jpg

Casting : Ramar, Ravanan, Lakshman, Seetha, Hanuman

Directed By : V. Vijayendra Prasad

Music By : Vidhaat Raman, Naoko Asari (Sound Design)

Produced By : Geek Pictures Pvt. Ltd.

 

அயோத்தியின் அரசராக பதவி ஏற்க இருந்த ராமர், சூழ்ச்சியின் காரணமாக 14 வருடங்கள் வனவாசம் அனுப்பப்படுவது, ராவணனால் சீதா கடத்தப்படுவது, சீதையை தேடிச் செல்லும் ராமன், வானரப் படைகளின் உதவியுடன் ராவணனை வீழ்த்தி, லங்கையில் இருக்கும் சீதாவை மீட்டதோடு, அங்கிருக்கும் அடிமைகளையும் மீட்டது, என ராமாயணத்தின் கதையை அனிமேஷன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும்படி ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

ராவணனின் தம்பி கும்பகர்ணனின் பிரமாண்ட உருவம், சீதையை ராவணன் கடத்திச் செல்லும் போது அவரை காப்பாற்ற முயற்சிக்கும் ஜடாயு பறவை, மூலிகைக்காக மலையையே பேத்து எடுத்து வரும் ஹனுமானின் சாகசங்கள் என ராமாயணத்தின் முக்கிய அம்சங்களை கிராபிக்ஸ் மூலம் மிக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

புத்தக வாசிப்பு குறைந்து வரும் இத்தகைய சூழ்நிலையில், ராமாயணத்தை தற்போதைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டுச் சேர்க்கும் முயற்சியாக, எளிமையான கதை சொல்லல் மூலம், அனிமேஷன் காட்சிகளாக விவரித்திருப்பது சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.

 

ராமர் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருக்கும் செந்தில் குமார், சீதாவுக்கு குரல் கொடுத்திருக்கும் டி.மகேஷ்வரி, ராவணனுக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார், லக்‌ஷ்மனனுக்கு குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், ஹனுமானுக்கு குரல் கொடுத்த லோகேஷ் மற்றும் ராமாயண கதையை விவரிக்கும் ரவூரி ஹரிதா என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

சிறுவர்களுக்கு பிடித்த 2டி அனிமேஷன் மூலம் போர்க் காட்சிகள் மற்றும் அதில் ஈடுபடும் வானரப் படைகளின் செயல்கள் நிச்சயம் சிறுவர்களை மகிழ்விக்கும். குறிப்பாக, கும்பகர்ணனிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் வானரப் படைகளின் காட்சிகள் சிறுவர்களை படத்தை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும். இந்திரஜித் மற்றும் லக்‌ஷ்மன் இடையே நடக்கும் வான் சண்டையும், ராவணனின் புஷ்பக விமானம், கோட்டை என அனைத்துமே கிராபிக்ஸ் மூலம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 

ஒலி வடிவமைப்பும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் மற்றும் அதில் பயன்படுத்தியிருக்கும் வண்ணங்கள் அனைத்தும் சிறுவர்களையும் தாண்டி பெரியவர்களையும் நிச்சயம் ரசிக்க வைக்கும்.

 

மொத்தத்தில், ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ புதிய அனுபவம்.

 

ரேட்டிங் 2.7/5